2009-12-28 16:52:40

கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார், அவர் அன்பின் குழுமம் மற்றும் இதனை முதலில் தெளிவாக வெளிப்படுத்துவது குடும்பம் - திருத்தந்தை


டிச.28,2009 கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார், அவர் அன்பின் குழுமம் மற்றும் இதனை முதலில் தெளிவாக வெளிப்படுத்துவது குடும்பம், கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒரே உடலாக ஆகின்றார்கள், இந்த அன்பு ஐக்கியமானது புதிய வாழ்வை பிறப்பிக்கிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வாறு மனிதக் குடும்பத்தில் விளங்கும் ஒருவர் ஒருவர் மீதான அன்பு மற்றும் வாழ்வைப் பிறப்பிப்பதற்கான அதன் பணியை முன்னிட்டு அது மூவொரு கடவுளின் வெளிப்பாடாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
கிறிஸ்துமசுக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்படும் திருக்குடும்ப பெருவிழாவாகிய இஞ்ஞாயிறன்று நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் 10 இலட்சம் திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையில் இப்பெரு விழாவின் விழுமியங்களை எடுத்துச் சொன்னார் திருத்தந்தை.
கிறிஸ்துவின் பிறப்புக்கு முதல் சாட்சிகளாக இருந்த இடையர்கள் குழந்தை இயேசுவை மட்டுமல்ல, தாய், தந்தை, புதிதாகப் பிறந்த மகன் ஆகிய மூவரையும் கண்டார்கள் என்றும் குறிப்பிட்ட அவர், கடவுள் மனிதக் குடும்பத்தில் பிறந்தவராகத் தம்மை வெளிப்படுத்தினார், இவ்வாறு மனிதக் குடும்பம் கடவுளின் உருவாக மாறியது என்றும் தெரிவித்தார்.
மேலும், மூன்று நாட்கள் கழித்து இயேசுவின் பெற்றோர் எருசலேம் ஆலயத்தில் அவரைக் கண்ட நிகழ்வு குறித்தும் விளக்கிய திருத்தந்தை, கோவிலில் தங்குவதற்கு இயேசு எடுத்த தீர்மானம், மரியா மற்றும் வளனிடமிருந்து அவர் பெற்ற கல்வியின் பயனே என்றும் கூறினார்.
இங்கு கிறிஸ்தவ கல்வியின் உண்மையான அர்த்தத்தை நாம் கண்டு கொள்கிறோம் என்றும் ஆசிரியர்களுக்கும் கடவுளுக்குமிடையே தொடர் ஒத்துழைப்பின் கனி என்றும் அவர் விளக்கினார்.
குழந்தைகள் கடவுளின் கொடை மற்றும் அவரின் திட்டம் என்பதை உணர்ந்துள்ள கிறிஸ்தவ குடும்பம், பிள்ளைகள் பெற்றோரின் உடைமைகள் என்று நோக்காது அவர்கள் வழியாகக் கடவுளின் அன்பின் திட்டத்திற்குத் தொண்டு செய்யவும், சுதந்திரத்தில் அவர்களுக்கு கல்வி வழங்கவும் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
மேலும், ஐரோப்பாவின் எதிர்காலம் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற தலைப்பில் ஸ்பெயின் தலைநகர் மத்ரித்தில் இடம் பெற்ற திருப்பலியில் கலந்து கொண்டோரையும் திருத்தந்தை வாழ்த்தினார்.All the contents on this site are copyrighted ©.