2009-12-26 16:42:22

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
கடந்த ஒரு வாரமாக வத்திக்கான் வானொலிக்கு ஒரு சில நேயர்களின் தொலைபேசி அழைப்புகள் வந்தன, எங்களுக்குக் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்ல. நான் இன்னும் எந்த ஒரு நேயரையும் நேரில் சந்தித்ததில்லை. என்னுடன் பணி புரியும் சகோதரி தெரசா, அன்பர் கிறிஸ்டோபர் இருவரும் இந்த நேயர்களுடன் பேசும் போது, ஒரு குடும்பத்தினர் பேசிக்கொள்வதைப் போல் அவர்கள் பேசுவதைப் பார்த்து எனக்கு வியப்பு, மகிழ்ச்சி. இந்த வத்திக்கான் வானொலியைச் சுற்றி இப்படி ஒரு குடும்ப உணர்வை ஏற்படுத்தியுள்ள அன்புள்ளங்களுக்கு கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு நாட்கள் மட்டுமல்ல, இனி வரும் எல்லா நாட்களுமே நன்றாக அமைய வேண்டும் என்பதே என் வாழ்த்துக்கள்.
இப்படி கிறிஸ்துமஸுக்கு வாழ்த்துக்களைச் சொல்ல வந்த ஒரு நேயர் அதோடு தன் மனக் குமுறலையும் சேர்த்துப் பேசினார். அவர் இந்தியாவிலிருந்து வெளி நாட்டுக்குச் சென்று பணி புரிந்து கொண்டிருப்பவர். கடந்த 12 ஆண்டுகளாய் கிறிஸ்துமஸுக்கு தாய்நாட்டுக்குப் போக முடியவில்லையே என்ற தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினார். "Father, கிறிஸ்மஸ் நேரத்துல ஊர்ல எல்லாரும் சேர்ந்திருப்பாங்க. சொந்தக்காரங்க வீடெல்லாம் பக்கத்திலேயே இருக்குது. எல்லாரும் சேர்ந்திருக்கும் போது, நான் அவங்களை telephoneல கூப்பிடுவேன். 30,40 நிமிடங்கள் எல்லார்கிட்டேயும் பேசுவேன். அதுதான் சாமி எனக்குக் கிறிஸ்மஸ்." என்றார். கேட்பதற்குக் கொஞ்சம் கடினமானத் தகவல்தான். அந்த அன்புள்ளம் அடுத்த ஆண்டு கிறிஸ்மஸ் காலத்திலாவது தாய்நாடு சென்று தன் குடும்பத்தோடு கிறிஸ்துமஸைக் கொண்டாட வேண்டுமென அவருக்காக வேண்டிக் கொண்டேன்.
அன்பு உள்ளங்களே, இந்த கிறிஸ்துமஸ் காலம் குடும்ப உணர்வை, கூடி வந்து கொண்டாடும் உணர்வை வளர்க்கும் ஒரு அழகிய காலம். இந்தக் காலத்தில் வரும் இந்த ஞாயிறன்று திருச்சபை திருக்குடும்ப விழாவைக் கொண்டாட அழைக்கின்றது. திருக்குடும்பத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள் பல உள்ளன. இந்த திருக்குடும்ப திருவிழா திருச்சபையில் ஆரம்பிக்கப்பட்ட சூழ்நிலை, காரணம் இவைகளை நான் ஆராய்ந்த போது என் சிந்தனையில் எழுந்தவைகளை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இரண்டாவதாக, இன்றைய நற்செய்தியில் கூறியுள்ளபடி இந்த குடும்பம் சந்தித்த ஒரு பிரச்சனையைப் பற்றியும் சிந்திப்போம்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை திருக்குடும்பத் திருநாள் தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக சில துறவற சபைகளால் பரப்பப்பட்டு வந்தது. 1921ஆம் ஆண்டு திருச்சபை இந்த பக்தி முயற்சியை ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு திருநாளாக மாற்றியது. காரணம்? அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப் போர். 1918ல் நடந்து முடிந்த உலகப் போரில் பல ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத் தலைவனையோ, மகனையோ போரில் பலி கொடுத்த பல குடும்பங்கள் பல இன்னல்களைச் சந்தித்து வந்தன. இந்த குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில் இந்த விழாவினை ஏற்படுத்தி, திருக்குடும்பத்தைச் சுற்றியெழுந்த பக்தி முயற்சிகளைத் திருச்சபை வளர்த்தது.
1960களில் நடந்த இரண்டாம் வத்திக்கான் பொது சங்கத்தின் போது மீண்டும் திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களைத் திருச்சபை புதுப்பித்தது. காரணம்? உலகப் போர்கள் இரண்டு முடிவடைந்த பின் வேறு பல வகைகளில் மக்கள் தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று பல வழிகளில் உலகம் முன்னேறியதைப் போலத் தெரிந்தது. ஆனால், அதே வேளை, பல அடிப்படை நியதிகள் மாறி வந்தன. ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு என்று மக்கள் வீட்டுக்கு வெளியே நிம்மதியைத் தேடிய போது, அந்த அமைதியை, அன்பை வீட்டுக்குள் குடும்பத்திற்குள் தேடச் சொன்னது திருச்சபை. எனவே, திருக்குடும்பத் திருவிழாவை கிறிஸ்துமஸுக்கு அடுத்த ஞாயிறு கத்தோலிக்க உலகைக் கொண்டாடப் பணித்தது.
திருக்குடும்பம் ஒரு தலைசிறந்த குடும்பம். அந்தக் குடும்பத்தில் இருந்த இயேசு, மரியா, யோசேப்பு அனைவரும் தெய்வீகப் பிறவிகள். அவர்களைப் பீடங்களில் ஏற்றி வணங்க முடியும். அவர்களை வைத்து விழாக்கள் கொண்டாட முடியும். ஆனால், அந்தக் குடும்பத்தைப் போல் வாழ்வதென்றால்?... நடக்கக் கூடிய காரியமா? இறைவன், புனிதர்கள் எல்லாரையும் தெய்வீகப் பிறவிகளாகப் பார்க்கும் போது, அவர்கள் எட்டாத தூரத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு எழுகிறது. ஆனால், அந்தத் தெய்வீகப் பிறவிகளும் இந்தப் பூமியில் மனிதப் பிறவிகளாக வாழ்ந்தனர் என்பதை மறந்துவிடக் கூடாது.
இயேசு, மரியா, யோசேப்பு என்ற இந்தக் குடும்பம் எந்த நேரமும் செபம் செய்து கொண்டு, இறைவனைப் புகழ்ந்து கொண்டு, எந்த விதப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்ததாக நினைக்க வேண்டாம். அவர்கள் மத்தியிலும் பிரச்சனைகள் இருந்தன. அவர்கள் அந்தப் பிரச்சனைகளைச் சந்தித்த விதம், அவைகளுக்கு விடைகள் தேடிய விதம் இவை நமக்குப் பாடங்களாக அமைய வேண்டும். திருக்குடும்பம் சந்தித்த ஒரு பிரச்னையை இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது.

லூக்கா நற்செய்தி 2: 41-52

ஒரு குடும்பத்தில் குழந்தை ஒன்று பிறந்ததும், பெற்றோர், முக்கியமாக தாய் தனது தினசரி வாழ்க்கையை அந்தக் குழந்தைக்காக அதிகம் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் உடல் ரீதியாக எழும் சவால்கள்.
இதே குழந்தை வளர்ந்து டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் போது, மீண்டும் இதே பெற்றோர் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் மனதளவில், வளரும் பிள்ளையைப் புரிந்து கொள்வதில் வரும் சவால்களாக இருக்கும்.
டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் சிறுவனோ, சிறுமியோ இனி சிறுவர்களும் இல்லை... பெரியவர்களும் இல்லை... இடைப்பட்ட ஓர் நிலை. பல குடும்பங்களில் இந்த நிலையில் இருக்கும் இளையோர் பாடுபடுவர். அந்த இளையோரைப் புரிந்து கொள்ள முடியாமல் குடும்பத்தினரும், சிறப்பாக பெற்றோரும் பாடுபடுவர்.
நமது குடும்பங்களில் ஒரு ஆண்மகன் தோளுக்கு மேல் வளர்ந்ததை, தனி மனிதனானதை, வயதுக்கு வந்து விட்டதை எப்படி உணர்த்துவான்?... மன்னிக்கவும், எப்படி உணர்த்துவார்? ஆம், அவர் தனக்குரிய மரியாதையை மற்றவர்கள் கொடுக்க வேண்டுமென எதிர்பார்ப்பார். அவர் தகுந்த பருவம் அடைந்து விட்டதைப் பல வழிகளை உணர்த்த முயல்வார்.
12 வயதைத் தாண்டி டீன் ஏஜ் வயதில் காலடி எடுத்து வைத்துவிட்டதால், தன்னை மற்றவர்கள் இனிமேல் கேள்விகள் கேட்டு தொல்லைப் படுத்துவதை விரும்ப மாட்டார். எங்கே போனாய், என்ன செய்தாய், ஏன் இவ்வளவு லேட்டாக வருகிறாய்... போன்ற கேள்விகளை இனி தன்னிடம் கேட்கக் கூடாது என்பதை நேரடியாகச் சொல்லாமல், தன் நடத்தையினால் சொல்வார்.
ஒரு சில டீன் ஏஜ் இளையோர் இதுவரைத் தங்களைச் சுற்றி நாடும், வீடும் கட்டியிருந்த வேலிகளைத் தாண்டுவதில், அல்லது அந்த வேலிகளை உடைத்து வெளியேறுவதில் குறியாய் இருப்பார்கள். அவர்களது தோழர்கள் தோழிகள் சொல்வது குடும்பத்தினர் சொல்வதை விட முக்கியமாகப் போகும். இந்த மாற்றங்கள் பல நேரங்களில் பெற்றோருக்குப் பிரச்சனைகளை, புதிய சவால்களை உருவாக்கும். என்ன அன்பர்களே, நான் இதுவரை டீன் ஏஜ் இளையோரைக் குறித்து சொன்னதில் பாதிக்குப் பாதியையாவது நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள், இல்லையா?
அன்று எருசலேமிலும் நடந்ததும் ஒரு இளையவரைப் பற்றியதே. 12 வயதாகும் ஆண்மகனை கோவிலுக்கு முதன்முறையாக அதிகாரப் பூர்வமாகக் கூட்டிச் செல்லும் வழக்கம் யூதர்கள் மத்தியில் இருந்தது. 12 வயதுக்கு மேல் ஒவ்வொரு ஆண்மகனும் ஆண்டுக்கு ஒருமுறை, சிறப்பாக எருசலேம் திருவிழாவின்போது, கோவிலுக்குக் கட்டாயம் செல்ல வேண்டும். இதுவரை குழந்தையாக இருந்த அந்தச் சிறுவன், இனி தனி ஓர் ஆள் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த பழக்கம் அமைந்தது.
டீன் ஏஜ் வாசலில் நின்ற இயேசு தன் சுதந்திரத்தை நிலை நாட்ட செய்யும் முதல் செயல்? அப்பா, அம்மாவிடம் சொல்லாமல் கோவிலில் நடந்த வேதாகம விவாதத்தில் கலந்து கொண்டார். நல்ல விஷயம் தானே! இதை ஏன் ஒரு பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்? நல்லதோ, கேட்டதோ... பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு முடிவை எடுக்கும் போது, அந்தச் சிறுவன் தன் வாழ்க்கையைத் தானே நிர்ணயிக்கும் பக்குவம் பெற்றுவிட்டதாக ஊரறியச் சொல்லும் ஒரு முயற்சிதானே அது!
மகனைக் காணாமல் பதைபதைத்துத் தேடி வரும் மரியாவும் யோசேப்பும் மூன்றாம் நாள் இயேசுவைக் கோவிலில் காணும் போது, அந்தச் சந்திப்பிலும் நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
தங்கள் மகன் மறைநூல் வல்லுநர் மத்தியில் அமர்ந்து ஏறக்குறைய அவர்களுக்குப் போதனை செய்ததைப் பார்த்து, அவரது பெற்றோர் வியந்தனர், மகிழ்ந்தனர்... அதே சமயம் பயந்தனர். வயதுக்கு மீறிய அறிவுடன், திறமையுடன் செயல்படும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம். அவர்களால் பெற்றோருக்குப் பெருமையும் உண்டு... சவால்களும் உண்டு.
மரியா தன் மகனைப் பார்த்து தன் ஆதங்கத்தை எடுத்துக் கூறுகிறார். இயேசுவோ அவர் அம்மா சொல்வதைப் பெரிது படுத்தாமல், தான் இனி தனித்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டதை அவர்களுக்கு நினைவு படுத்துகிறார்.
இயேசு மரியாவுக்குச் சொன்ன பதில் மரியாவின் மனதைப் புண் படுத்தியிருக்க வேண்டும். அதுவும் மற்றவருக்கு முன்னால் அப்படி பேசியதால் மரியா மனது இன்னும் அதிகம் வலித்திருக்கும். மகன் சொல்வதில் நியாயம் இருந்தாலும், வலி வலி தானே. அந்த வேதனையில் அவர் கோபப்பட்டு மேலும் எதாவது சொல்லியிருந்தால், பிரச்சனை பெரிதாகி இருக்கும்.
குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள பொது இடங்கள் நல்லதல்ல என்ற ஒரு சின்ன பாடத்தையாவது மரியாவிடம் நாம் கற்றுகொள்ளலாமே. மரியா இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளவில்லை, இருந்தாலும் அவைகளைத் தன் மனதில் ஒரு பொக்கிஷமாகப் பூட்டி வைத்துக் கொண்டு கிளம்புகிறார். இயேசுவும் அவர்களோடு சென்றார். இன்னும் பல ஆண்டுகள்... சொல்லப்போனால், இன்னும் 18 ஆண்டுகள் அந்த அன்பு பெற்றோருடன் தங்கச் செல்கிறார் என்று இன்றைய நற்செய்தி நிறைவடைகிறது. இந்த மூவர் வாழ்ந்த திருக்குடும்பத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடிய, கற்றுக் கொள்ள வேண்டிய இன்னும் பல பாடங்களை மற்றொரு சந்தர்ப்பத்தில் சிந்திக்கலாம்.
இறுதியாக அன்புள்ளங்களே, எருசலேம் திருவிழாவுக்குச் சென்று, பிறகு இயேசு காணாமல் போய்விடும் சம்பவம், பலரை நம் நினைவுக்குக் கொண்டு வருகிறது. இவர்களை நினைவில் கொள்வதோடு, இவர்களுக்காக செபிக்கவும் நாம் கடமைப் பட்டுள்ளோம்.
குழந்தைகளைத் திருவிழாக் கூட்டங்களில் இழந்துவிட்டு, தவிக்கும் பெற்றோரை... பெற்றோரை விட்டுவிட்டு தனித்து விடப்படும் குழந்தைகளை... நினைத்துப் பார்ப்போம்.
இப்படி காணாமல் போகும் குழந்தைகளைக் கடத்திச் சென்று, பிச்சை எடுப்பதற்கும், இன்னும் பல தவறான வழிகளிலும் இவர்களை ஈடுபடுத்தும் மனசாட்சியற்ற மனிதர்களை நினைத்து பார்ப்போம். இவர்களுக்காகவும் நாம் செபிக்கக் கடமை பட்டிருக்கிறோம்.
இயேசு 12 வயது வரை நாசரேத் என்ற சிறிய ஊரில் வளர்ந்து வந்தவர். அவர் நகரத்திற்கு வந்து காணாமல் போகிறார். நான் சென்ற ஆண்டு வரை கல்லூரியில் பணி புரிந்தவன். எனவே, கிராமங்களில், சிறு ஊர்களில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு சென்னை போன்ற பேரு நகரங்களுக்கு வந்து பல வழிகளில் காணாமல் போய்விடும் இளையோரையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அப்படி இந்த இளையோரை நகரம் என்றக் காட்டில் தொலைத்து விட்டுத் தவிக்கும் பெற்றோரையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இயேசு எருசலேமில் காணாமல் போகும் இந்த சம்பவம் நம் நினைவுக்குக் கொணரும் இவர்கள் அனைவருக்காகவும் நாம் இறைவனிடம் வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.