2009-12-26 17:12:49

இலங்கையில் அரசுத்தலைவர்க்கான தேர்தல், சுதந்திரமாகவும் நியாயமாகவும் இடம் பெற வேண்டும் சமயத் தலைவர்கள் அழைப்பு


டிச.26,2009 இலங்கையில் வருகிற ஆண்டில் நடைபெறவிருக்கின்ற அரசுத்தலைவர்க்கான தேர்தல், சுதந்திரமாகவும் நியாயமாகவும் இடம் பெற வேண்டுமென்று அந்நாட்டு சமயத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இலங்கையின் கிறிஸ்தவ, புத்த மற்றும் முஸ்லீம் மதங்களின் தலைவர்கள் தேர்தல் ஆணையத் தலைவர் தயானந்த திஸ்நாயக்கேவைச் Dayananda Dissanayake சந்தித்து தங்களது இந்தக் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்துள்ளனர்.
அரசு நடத்தும் ஊடகத்துறை, தேர்தல் சமயங்களில் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டுமென்றும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரங்களுக்காக அரசின் சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுதல், வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுதல், கட்சி அலுவலகங்களுக்குத் தீ வைத்தல் உட்பட தேர்தல் வன்முறைகள் அதிகரித்து வருவதாகப் பல்சமயத் தலைவர்கள் அம்மனுவில் சுட்டிக் காட்டியுள்ளனர்.இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 26ம் தேதி நடைபெறும். இதில் ஒரு புத்தமத பிக்கு உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலுக்கென, இன்னும் அதிகமானச் சர்வதேச கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளனர் என்று திஸ்நாயக்கே அறிவித்தார்.All the contents on this site are copyrighted ©.