2009-12-26 17:11:06

அடக்குமுறைகளினால் துன்பப்படும் கிறிஸ்தவர்களுக்காகச் செபிப்போம் : திருத்தந்தை


டிச.26,2009 திருச்சபையின் முதல் கிறிஸ்தவ மறைசாட்சியான புனித ஸ்டீபன் விழாவைச் சிறப்பிக்கும் இந்நாளில், இக்காலத்தில் அடக்குமுறைகளினால் துன்பப்படும் கிறிஸ்தவர்களுக்காகச் செபிப்போம் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
டிசம்பர் 26, இச்சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்ட, முடியப்பர் எனப்படும் புனித ஸ்டீபன் விழாவை முன்னிட்டு, நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானத் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதிலும் அவர் மீதான அன்புக்காகத் தனது குருதியைச் சிந்தவும் அஞ்சாமல் இருந்தவர் புனித ஸ்டீபன் என்று கூறினார்.
தியாக்கோன்களின் பாதுகாவலராகிய, திருச்சபையின் முதல் தியாக்கோனாகிய புனித ஸ்டீபனிடம், அனைத்து தியாக்கோன்கள் மற்றும் பீடப்பரிசாரகர்களுக்காகச் செபிப்போம் என்றும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
புனித ஸ்டீபனின் எடுத்துக்காட்டான வாழ்வு, கிறிஸ்துமசின் பேருண்மையை ஆழமாகத் தியானிக்கவும், மனிதரின் மீட்புக்கான இறைவனின் அருளைத் தெளிவாக வெளிப்படுத்திய திருக்குழந்தையின் மாபெரும் பிறப்புக்கு நாம் சாட்சிகளாக இருக்கவும் உதவுகின்றது என்று திருத்தந்தை கூறினார்.கிறிஸ்துவுக்காக ஏழை ஊழியனாக மாறிய இப்புனிதர் போல, நாமும் ஏழைகளை வரவேற்று அவர்கள் மீது அன்பு காட்ட வேண்டுமென்று திருச்சபை அழைக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.All the contents on this site are copyrighted ©.