2009-12-23 15:25:06

நம்பிக்கைச் செய்தி:மும்பையில் அனைத்து சமயத்தினரும் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சி; உதய்ப்பூரில் சமாதானப் பேரணி


டிச.23,2009 "அனைவரும் இணைந்து கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடுவோம்" என்ற மையக்கருத்துடன் மும்பையின் பாந்த்ரா பகுதியில் கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. கிறிஸ்தவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என்று அனைத்து சமயத்தினரும் ஏறத்தாழ 4000 பேர் கலந்து கொண்ட இந்த இசை நிகழ்ச்சியை பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த ஆஷிஷ் ஷேலார் (Ashish Shelar ) நடத்தினார். இஸ்லாமிய பாடகர் பஷீர் ஷீக் இசையமைத்து பாடிய "இன்று கிறிஸ்து பிறந்த திருநாள்" என்று பொருள்படும் புதிய பாடலும் பல கிறிஸ்துமஸ் பாரம்பரிய பாடல்களும் இந்த இசை நிகழ்ச்சியில இடம்பெற்றன. சமய சார்பின்மை என்று இந்திய சட்டதிட்டங்களில் காணப்படும் ஒரு அடிப்படை அம்சத்தை நிலைநிறுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக ஆஷிஷ் ஷேலார் செய்தியாளர்களிடம் கூறினார்.
 மேலும், அனைத்து மதங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட ஒரு சமாதானப் பேரணி ராஜஸ்தானின் உதய்ப்பூரில் இச்செவ்வாயன்று மாலை நடைபெற்றது. அனைத்து மதங்களின் நல்லிணக்க சங்கம் என்றழைக்கப்படும் (சர்வ தர்ம மைத்ரி சங்) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியை உதய்ப்பூர் நகர மேயர் ஆரம்பித்து வைக்க, பல் சமயத் தலைவர்களும் இதில் பங்கேற்றனர். ராஜஸ்தான் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்ட குடில் ஒன்று இந்தப் பேரணியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. இந்தப் பேரணி இறுதியாக உதய்ப்பூர் பாத்திமா பேராலயத்தை அடைந்த போது, அங்கு உதய்ப்பூர் ஆயர் ஜோசப் பத்தலில் (Pathalil) அனைவருக்கும் சமாதானச் செய்தியை வழங்கி, சமாதானப் புறா ஒன்றைப் பறக்கவிட்டு, பேரணியை நிறைவு செய்தார்.







All the contents on this site are copyrighted ©.