2009-12-23 15:23:48

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


டிச.23,2009 அன்புள்ளங்களே, இந்நாட்களில் மேலை நாடுகளில் கடும் பனி பெய்து கொண்டிருக்கின்றது. வட இத்தாலியில் முப்பது செ.மீ. அளவுக்குக்கூட பனி பெய்து போக்குவரத்தையும் மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையும் பாதித்துள்ளது. 12 கிலோ மீட்டர் தூரத்தை 12 மணி நேரங்களில் வாகனங்கள் கடந்துள்ளன என்றால் நிலைமையை சற்று ஊகிக்கலாம். எனினும் உரோமையில் இப்புதன் காலை கதிரவனின் ஒளிக்கதிர்கள் பளிச்சென வீசின. திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகத்தைக் கேட்பதற்காக பாப்பிறை ஆறாம் பவுல் அரங்கத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துமஸ் கால பல நாடுகளின் பயணிகள் கூடியிருந்தனர். இவர்களுக்கு கிறிஸ்துமஸ் பற்றியே விளக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அன்புச் சகோதர சகோதரிகளே, கிறிஸ்துமசுக்கு முந்திய இந்த இறுதி நாட்களில், நாம் கிறிஸ்துவின் பிறப்புப் பேருண்மையை தியானித்து, புதிதாகப் பிறக்கும் நமது மீட்பர் இவ்வுலகிற்குக் கொண்டு வரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அனுபவிக்கத் திருச்சபை நம்மை அழைக்கிறது என்று ஆங்கில மொழியில் தனது உரையைத் தொடங்கினார்.

RealAudioMP3 மாட்டுத் தொழுவத்தில் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தை கிறிஸ்துவை உற்று நோக்கிக் கொண்டு கடவுளின் அன்பைத் தியானிக்கும் நம்மை நோக்கி அவர், நம் இதயங்களிலும் உலகிலும் அவரை வரவேற்க வேண்டுமென்று பணிவோடு கேட்கிறார். கடவுள், ஒன்றும் இயலாத திருக்குழந்தையாக நம் மத்தியில் வருவதன் மூலம், பலவந்தத்தால் அல்ல, மாறாக அன்பால் அவர் நம் இதயங்களை வெல்கிறார். மேலும், உண்மையான சுதந்திரம், அமைதி, முழுநிறைவு ஆகியவற்றுக்கான வழிகளையும் நமக்கு அவர் கற்றுத் தருகிறார். இந்தக் கிறிஸ்துமஸ் தினத்தில் நம் ஆண்டவர் நமக்கு எளிமையான இதயத்தை அருளுவாராக. இதனால் எளிய பெத்லகேம் குழந்தையில் அவரின் பிரசன்னத்தையும் அன்பையும் கண்டு கொள்ளவும், இடையர்கள் போல சொல்லுதற்கரிய மகிழ்ச்சியோடும் உவகையோடும் நம் இல்லங்களுக்குத் திரும்பவும் இயலும்.

இவ்வாறு இப்புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்கு அமர்ந்திருந்த பயணிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தப் புனித நாட்களில் நம் ஆண்டவருக்கு மிக நெருக்கமாக கவர்ந்திழுக்கப்படவும், அவரின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி ஆகிய கொடைகளை அனுபவிக்கவும் வாழ்த்தினார். பின்னர் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

RealAudioMP3

 
All the contents on this site are copyrighted ©.