2009-12-22 15:54:55

விவிலியத் தேடல்:


RealAudioMP3
விவிலியத் தேடல் நிகழ்ச்சியில் புதுமைகளைப் பற்றி சிந்தித்து வருகிறோம். இதுவரைச் சிந்தித்து வந்த புதுமைகள் எல்லாம் இயேசுவின் பணி வாழ்வில் நிகழ்ந்தவை. இந்த கிறிஸ்மஸ் காலத்தில் இயேசுவின் பிறப்பைச் சுற்றி நடந்ததாய் சொல்லப்படும் புதுமைகளைச் சிந்திக்கலாம். இதன் ஒரு பகுதியாக, சென்ற ஞாயிறு சிந்தனையில் மரியாவும், எலிசபெத்தும் சந்தித்த நிகழ்வை சிந்தித்தோம். அந்த நிகழ்வின் தொடர்ச்சியாக யோவான் பிறப்பை ஒரு புதுமையாக சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.
மலடி என்று இகழப்பட்டு, ஒதுக்கி வைக்கப் பட்ட ஒரு பெண்ணும் கன்னியான ஒரு பெண்ணும் தாய்மை பேறு அடைந்த பிறகு அந்த இரு பெண்களும் சந்தித்ததை ஒரு புதுமையைப் போல் சென்ற ஞாயிறு சிந்தித்தோம். அப்போதே ஒரு எச்சரிக்கையையும் நான் விடுத்தேன்.
குழந்தை பேறு இல்லாத வயது முதிர்ந்த ஒருவரும், கன்னியான ஒரு இளம் பெண்ணும் தாய்மை பேறு அடைவதில் ஒன்றும் புதுமை இல்லையே. இது என்ன பிரமாதம்? என்று கேட்கக் கூடிய நமது 21 ஆம் நூற்றாண்டு மனநிலையைப் பற்றி எச்சரித்தேன்.
இது என்ன பிரமாதம் என்ற ஏளனப் பார்வை வாழ்க்கையில் அற்புதங்களைக் குறைத்து விடும். மாறாக, நடக்கும் சின்னச் சின்ன காரியங்களையும் "அடேங்கப்பா" என்று ரசிக்கும் குழந்தை உள்ளத்தை வளர்த்துக் கொண்டால், அற்புதங்களுக்கு வாழ்க்கையில் பஞ்சமிருக்காது.
சின்னச் சின்ன அற்புதங்களைஎல்லாம் வாழ்க்கையில் அசைபோட ஆசைப்படுவோம். அப்படிப்பட்ட ஒரு மன நிலையோடு, கண்ணோட்டத்தோடு இன்றைய நற்செய்திக்குச் செவிமடுக்க உங்களை அழைக்கிறேன்.
லூக்கா நற்செய்தி 1: 57-66
எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, “வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்” என்றார். அவர்கள் அவரிடம், “உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே” என்று சொல்லி, “குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?” என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, “இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, “இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.
எந்தக் குடும்பத்திலும் குழந்தைப் பிறப்பு என்றால் ஒரு புதுமைதான். சக்கரியா குடும்பத்தில் குழந்தை பிறந்துள்ளது. இந்தச் செய்தி யூதேயா மலை நாடெங்கும் பரவியது. சக்கரியா பெரிய தலைவரா? ஏன் இந்த பரபரப்பு, ஆர்ப்பாட்டம் எல்லாம்? சக்கரியா சாதாரண ஒரு குரு... இவரைப் பற்றியும், இவர் மனைவி எலிசபெத்தைப் பற்றியும் லூக்கா நற்செய்தி சொல்வது இதுதான்.
லூக்கா நற்செய்தி 1 5-7
யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.

எலிசபெத் பிறந்தது வளர்ந்தது எல்லாம் குருக்கள் பரம்பரையில். ஆரோனின் வழித் தோன்றல் அவர். அவர் வாழ்க்கைப் பட்டதும் இன்னொரு குருக்களின் குடும்பத்தில். குருக்களின் குடும்பங்கள் இறைவனால் ஆசீர்வத்திக்கப்பட்ட குடும்பங்கள் என்பது மக்களின் நம்பிக்கை. இருவேறு குருக்களின் குடும்பங்களிலிருந்து வந்து திருமணம் செய்துகொண்ட சக்கரியா, எலிசபெத் தம்பதியினர் கட்டாயம் கடவுளின் அருளை அதிகம் பெற்றவர்கள் என்று திருமண நாளில் வாழ்த்தியிருப்பார்கள் மக்கள்.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, வருடங்கள் செல்லச் செல்ல, எலிசபெத்துக்குக் குழந்தை பேறு இல்லை என்பது தெளிவான போது, வாழ்த்துக்கள் குறைந்தன, வசைமொழிகள் ஆரம்பமாயின. குருக்களின் குடும்பங்கள் என்றதால், பொது இடங்களில் வசைகூறத் தயங்கியவர்கள், குழுக்களாகக் கூடி முணுமுணுத்திருப்பார்கள்.
எலிசபெத்தும், சக்கரியாவும் வெளியில் செல்லும் போது, ஏளனப் பார்வைகள், கேலிகள் எழுந்திருக்கும். நாளடைவில், இந்த ஏளனங்கள் சப்தமாக ஒலித்திருக்கும். இதனால், பொது இடங்களைத் தவிர்த்து, இருவரும் தங்களையே சிறைபடுத்தி வாழ்ந்து வர ஆரம்பித்திருப்பார்கள். சக்கரியா நினைத்திருந்தால் அந்தச் சிறையில் எலிசபெத்தை மட்டும் பூட்டி விட்டு, தான் மற்றொரு துணையை நாடி போயிருக்கலாம். அந்த சமூகத்தில் அதை சரியென்றே சொல்லியிருப்பர். நாம் வாழும் இந்த காலத்தில் இது போல் நடப்பது உண்மைதானே.
 குழந்தை பேறு இல்லாமல் போவதற்குரிய குறை ஆணையும் சாரும், பெண்ணையும் சாரும். ஆனால், நமது குடும்பங்களில் நடப்பது என்ன? எந்த ஒரு குடும்பத்திலும் இந்தக் குறைக்கு பெண்ணையே அதிகம், இல்லை... இல்லை... முழுவதும் பழி சொல்வது நமது வழக்கம். இல்லையா? மருத்துவ முன்னேற்றம் அடைந்துவிட்ட இந்த 21ஆம் நூற்றாண்டிலேயே இந்த கதி என்றால், முதல் நூற்றாண்டில் வாழ்ந்த எலிசபெத்தின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா?

எலிசபெத் கேட்டு வந்த பழிச் சொற்களிலேயே "அவர் கடவுளின் சாபம் பெற்றவர்." என்ற பழிச் சொல்தான் அவரை அதிகம் பாதித்திருக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் கடவுள் முன் நேர்மையாய், குற்றமின்றி வாழ்ந்து வரும் தனக்கும், தன் கணவருக்கும் ஏன் இப்படிபட்ட பழிச் சொற்களைக் கேட்க வேண்டிய நிலை உருவாக வேண்டும் என்ற கேள்வியை அவர் கேட்காத நாட்களே இல்லை. பல ஆண்டுகளாக அவர் கடவுளிடம் கேட்டு வந்த இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.
வாழ்வில் குழந்தை பேற்றுக்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கி வரும் பல ஆயிரம் தம்பதியினரை இப்போது நினைத்து அவர்களுக்காக செபிப்போம். இந்தத் தம்பதியர் ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் இந்த முயற்சிகளில் ஈடுபட்டு, பின்னர் ஒரு சில முடிவுகளுக்கு இவர்கள் வரலாம். நல்ல முடிவுகள் என்றால், தன் சொந்தங்களிலேயே ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கலாம். அனாதைக் குழந்தையொன்றைத் தத்தெடுக்கலாம். தவறான முடிவுகள் என்றால், மனைவியை விலக்கிவிட்டு மற்றொருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம். அல்லது,  மனம் வெறுத்து போய் கடவுள் நம்பிக்கையை இருவரும் கைவிடலாம்.
எலிசபெத்து ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேல் இந்தச் சிறைக்குள் வதைபட்டாலும், அவரது நம்பிக்கை குறையவில்லை என்றே தெரிகிறது. அவரது நம்பிக்கை குருட்டு நம்பிக்கையைப் போல் தோன்றினாலும், அதை நான் இப்படி சிந்தித்துப் பார்க்கிறேன். எலிசபெத்தின் மனதில் இறைவனின் கருணையைப் பெற்ற பல பெண்களின் கதை பதிந்திருக்கும். குருக்கள் குடும்பத்தில் அவர் பிறந்து வளர்ந்ததால், இக்கதைகளை அடிக்கடி அவர் கேட்டிருப்பார்.
இஸ்ராயேல் குலத்தவரின் தந்தை என்று போற்றப்படும் ஆபிரகாமின் மனைவி சாரா முதிர்ந்த வயதில் தாய்மைப் பேறு அடையவில்லையா? ஈசாக்கின் மனைவி ரெபேக்கா, யாக்கோபின் மனைவி ராக்கெல், சாமுவேலின் தாய் ஹன்னா... என்று பல பெண்கள் குழந்தை பேறு இல்லாமல் பல ஆண்டுகள் வேண்டிய பின் இறைவனின் கருணையைப் பெற்றது எலிசபெத் மனதில் இந்த நம்பிக்கை ஊற்றை வற்றாமல் சுரக்கச் செய்திருக்க வேண்டும்.
அன்பு உள்ளங்களே, நம்பிக்கை என்ற ஊற்றை விரக்தி என்ற பாறை மூடும் போது, அந்தப் பாறையிலிருந்து கசிந்து, அல்லது அந்தப் பாறையைப் பிளந்து வரும் நீரைப் போல் நம்பிக்கை வெளி வருவதும் ஒரு புதுமை தானே. இப்படி ஒரு புதுமை எலிசபெத்தின் வாழ்வில் பல ஆண்டுகளாய் நாளும் நிகழ்ந்து வந்தது.
சக்கரியாவைப் பொறுத்தவரை, தன் குடும்பத்தில் குழந்தை பேறு இல்லை என்பதை உணர்ந்த போது, ஊரும் குடும்பமும் சேர்ந்து இந்தக் குறைக்கு எலிசபெத்தைக் காரணம் காட்டியபோது, அவரை மணமுறிவு செய்து விட பலரும் சொன்னபோது... அவரை விலக்கி விடாமல், தொடர்ந்து அவருடன் குடும்ப வாழ்வில் சக்கரியா இருந்ததே ஒரு புதுமை தான்.
எலிசபெத்தைப் போலவே, சக்கரியாவையும் அதிகமாய்ப் பாதித்த பழிச் சொல்... அவரும், அவர் மனைவியும் கடவுளின் சாபம் பெற்றவர்கள் என்ற பழிதான். சக்கரியாவுக்கு கூடுதலான சவால் என்னவெனில், தன் குடும்பத்தைச் சபித்துள்ளதாக சொல்லப்படும் அந்த இறைவனை அவர் அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது. குரு என்ற முறையில் அவர் இறைவனின் சந்நிதியில் நுழைந்த நேரங்களில் எல்லாம் அந்தப் பழிச் சொல் அவர் மனதில் ஓலமிட்டிருக்க வேண்டும். அவர் வாயால் சொன்ன இறை புகழ், செபங்களை எல்லாம் மீறி, "நீ கடவுளின் சாபம் பெற்றவன்" என்ற பழிச் சொற்கள் அவர் மனதில் ஓலமிட்டிருக்க வேண்டும். இருந்தாலும், அவர் நம்பிக்கை தளரவில்லை. காரணம்? அவருக்கும் ஆபிரகாம், ஈசாக்கு போன்ற மூதாதையரின் நம்பிக்கை வழிகாட்டியிருக்க வேண்டும்.
இப்படி எலிசபெத்தும், சக்கரியாவும் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கை ஒரு அழகிய புதுமை. அந்த நம்பிக்கைக்கு இறைவன் எலிசபெத்துக்குத் தந்த தாய்மை பேறு மற்றொரு புதுமை.

இந்தப் புதுமைகளைத் தொடர்ந்து இன்றைய நற்செய்தியில் நாம் கேட்டது போல, யோவான் பிறந்தது, குடும்பத்தில் இல்லாத ஒரு பெயரை அவருக்கு வைத்தது, அப்பெயரை சக்கரியா எழுது பலகையில் எழுதியதும் ஒன்பது, பத்து மாதங்களாய் பேசாத அவரது நாவு கட்டவிழ்க்கப்பட்டது இவைகளெல்லாம் அங்கு நடந்த புதுமைகள்.

அன்பர்களே, உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். இப்போது இறுதியாக ஒரு சில வரிகளில் சொன்ன சம்பவம் தானே - அதாவது, பல மாதங்களாய் பேச முடியாத சக்கரியா மீண்டும் பேசியதுதானே -  உண்மையிலேயே புதுமை. அதை விட்டுவிட்டு... இப்படி எல்லாவற்றையும் புதுமை என்று சொன்னால் எப்படி? இந்த விவிலியத் தேடலின் துவக்கத்தில், சென்ற வார ஞாயிறு சிந்தனையில் நான் சொன்னவைகளை மீண்டும் சொல்கிறேன்.
நம் வாழ்விலும், நம்மைச் சுற்றிலும் நடக்கும் சின்னச் சின்ன காரியங்களையும் "அடேங்கப்பா" என்று ரசிக்கும் குழந்தை உள்ளத்தை வளர்த்துக் கொண்டால், அற்புதங்களுக்கு வாழ்க்கையில் பஞ்சமிருக்காது. சின்னச் சின்ன அற்புதங்களைஎல்லாம் வாழ்க்கையில் அசைபோட ஆசைப்படுவோம். 
சக்கரியா மீண்டும் பேச்சுத் திறன் பெற்றது புதுமைச் செயல்தான். ஆனால் அந்தப் புதுமை நடப்பதற்கு பின்னணியாக, எலிசபெத்தும் சக்கரியாவும் வாழ்ந்த பல ஆண்டு வாழ்க்கை ஒரு நீண்ட புதுமை என்பதை உங்களாலோ, என்னாலோ அவ்வளவு எளிதாக மறுத்து விட முடியாது. இல்லையா?

புதுமை என்பது, வானத்தை கீறிக் கொண்டு, மின்னலாய், இடியாய், பெருமழையாய்த்தான் பெய்ய வேண்டுமென்கிற அவசியமில்லை. இரவில், நாம் உறங்கும் போது கண்ணுக்குத் தெரியாமல் இறங்கும் பனி, அடுத்த நாள் காலையில் புல்லின் மீது, மலரின் மீது, இலைகளின் மீது வைரங்களாய் மின்னுவதைப் போல், புதுமைகள் நம் வாழ்வில் நம்மைச் சுற்றி சப்தமில்லாமல் நுழையும். இது போன்ற சப்தமில்லாத, சின்ன, சின்னப் புதுமைகள் இந்த கிறிஸ்மஸ் காலத்தில், வரும் புத்தாண்டில், ஏன்? நம் வாழ்நாள் முழவதும் ஒவ்வொருவருக்கும் நடக்க வேண்டுமென ஒருவர் ஒருவருக்காய் செபிப்போம்.







All the contents on this site are copyrighted ©.