2009-12-22 15:29:27

இலங்கையின் இறுதிப் போரின் போது சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஐ.நா கோரியுள்ள விளக்கம் குறித்து பரிசீலனை செய்யவிருப்பதாக இலங்கை அரசு அறிவிப்பு


டிச.22,2009 இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம் பெற்ற இறுதிப் போரின் போது சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஐ.நா கோரியுள்ள விளக்கம் குறித்து பரிசீலனை செய்யவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இக்குற்றச்சாட்டுகள், ஆதாரமற்றவை மற்றும் நாட்டைக் கீழ்மைப்படுத்துகின்றன என்று சொல்லியுள்ள அரசு, இவை குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்னர் இக்குற்றச்சாட்டுகள் பற்றிக் கவனமாகப் பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளது.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா, இம்மாதம் 13ம் தேதி சண்டே லீடர் தினத்தாளுக்கு அளித்த பேட்டியில் முன்வைத்த குற்றச்சாட்டுகளை வைத்து, சட்டவிரோதமான கொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் இலங்கை அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
எனினும், தான் வெளியிட்டிருந்த கருத்துக்கள் தவறாக புரிந்தது கொள்ளப்பட்டுள்ளன என்று இந்த செய்தி வெளியான பிறகு ஜெனரல் ஃபொன்சேகா தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
இதற்கிடையே, சரத் ஃபொன்சேகா தனது இந்தக் குற்றச்சாட்டுகள் மூலம் நாட்டிற்குத் துரோகம் செய்துள்ளார் என்று பேரிடர் துடைப்பு மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் மகிந்த சமரசசிங்கே கூறியுள்ளார்.
இலங்கை அகதிகள் முகாம்களில் இன்னும் ஏறத்தாழ 94,000 பேர் இருக்கின்றனர் என்றும் இவர்கள் வருகிற ஜனவரிக்குள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது. மேலும், அந்நாட்டிற்கு உலக நிதியகம், கடந்த ஜூலையில் 260 கோடி டாலரைக் கடனாக வழங்கியுள்ளது.
மேலும், வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான வடக்கு பகுதியின் இரயில் சேவையை புனரமைப்பதற்கு இந்திய அரசு 425 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.