2009-12-22 15:28:34

புனித பூமியில் ஒப்புரவு ஏற்படுவதற்கான கனவுகள் இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கின்றன-எருசலேம் இலத்தீன்ரீதி பிதாப்பிதா


டிச.22,2009 புனித பூமியில் ஒப்புரவு ஏற்படுவதற்கான கனவுகள் இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கின்றன என்று எருசலேம் இலத்தீன்ரீதி பிதாப்பிதா Fouad Twal, தனது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியுள்ளார்.
புனித பூமியின் தற்போதைய மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்கு அரசியல்வாதிகளும் நன்மனம் கொண்டோரும் எடுத்து வரும் போற்றத்தக்க முயற்சிகள், அமைதிக்காகப் பாலஸ்தீனர்களும் இஸ்ரயேலரும் எடுத்து வரும் அனைத்து முயற்சிகள், இவை அனைத்தும் தோல்வி கண்டுள்ளன, இதனால் ஒப்புரவுக்கான கனவுகளும் நிறைவேறாத ஒன்றாகவே இருக்கின்றன என்று பிதாப்பிதா Twal கூறியுள்ளார்.
இஸ்ரயேலருடன் அமைதியிலும் நல்லிணக்கத்திலும் வாழ உதவும் தனிநாடு பாலஸ்தீனர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை, அவர்கள் இன்னும் ஆக்ரமிப்பில் துன்புறுகின்றனர், கிழக்கு எருசலேமில் பல வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, அரசியலில் உள்குழப்பங்களும் நிலவுகின்றன என்றும் அவரின் செய்தி கூறுகிறது.
காசாவில் சண்டை முடிந்து ஓராண்டு ஆகியும் பொருளாதாரத் தடை, சுதந்திரமாக எங்கும் செல்ல இயலாமை, சுத்த நீரின்மை போன்றவைகளால் 15 இலட்சம் குடிமக்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றது, இவர்களில் 50 விழுக்காட்டினர் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பிதாப்பிதாவின் கிறிஸ்துமஸ் செய்தி கூறுகின்றது.
திருத்தந்தையின் புனித பூமிக்கான திருப்பயணம், ஜெபமாலை அன்னை சபை சகோதரிகள் சபையை நிறுவிய அருட்சகோதரி மரிய அல்போன்சினின் முத்திப்பேறு பட்டம் உட்பட 2009ம் ஆண்டில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகளையும் அவர் நிருபர்களிடம் சுட்டிக் காட்டினார்.All the contents on this site are copyrighted ©.