2009-12-21 14:58:52

கிறிஸ்துமசுக்கு அண்மை தயாரிப்பு


டிச.21,2009 அன்பர்களே, காலையில் எழுந்தவுடன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப, பள்ளிகளில் பாடம் நடத்த, சாப்பாடு எடுத்துச் செல்ல எனப் பல பரபரப்புத் தயாரிப்புகளுடன் ஒவ்வொரு நாளும் தொடங்குகின்றது. இது குடும்பத்தில். நாடுகளில், சர்வதேச அளவில் என்று நோக்கினால் ஒவ்வொரு நாளும் சந்திப்புகளுக்கு, கூட்டங்களுக்கு, தேர்தல்களுக்கு எனப் பல தயாரிப்புகள் நடக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த கோபன்ஹாகன் வெப்பநிலை மாற்றம் குறித்த உலக மாநாட்டிற்கு எவ்வளவு தயாரிப்புகள், எத்தனை மாதத் தயாரிப்புகள் நடந்தன என்று நமக்குத் தெரியும். கடந்த 20 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு வெப்பம் உயர்ந்துள்ளது. இதனைத் தடுக்க உலக அளவில் ஏதாவது உடன்பாடு ஏற்படுமா என்று நாடுகள், குறிப்பாக ஏழை நாடுகள் காத்துக் கிடந்தன. பிலிப்பைன்ஸ் நாட்டில் மாயோன் என்ற எரிமலை கரும்புகைகளைக் கக்கிக் கொண்டிருப்பதால் அது எப்பொழுதேனும் வெடிக்கலாம் என்று எதிர்பார்த்து அந்த இடரின் சேதத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற அந்நாடு தயாரித்து வருகிறது. 1616ம் ஆண்டில் முதலில் வெடிக்கத் தொடங்கிய இந்த எரிமலை இதுவரை 49 தடவைகள் வெடித்துள்ளதாம். ஏன் கடந்த சில நாட்களாக இந்த மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவின் பின்விளைவை எதிர்நோக்க நாடுகள் தயாராகி வருகின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டு பால்ட்டிமோர்-வாஷிங்டன் விமான நிலையத்தில் 21 அங்குலங்கள் பனிப்பொழிவு 1893ம் ஆண்டுக்குப் பின்னர் இஞ்ஞாயிறன்று இடம் பெற்றுள்ளது. சில முக்கிய பெரு நகரங்களுக்குச் செல்லும் இரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு நமது அன்றாட வாழ்விலும், இன்னும், பெரிய அளவிலும் பலவிதத்தில் தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. வருகிற வெள்ளி கிறிஸ்துமஸ். அதற்குக் கிறிஸ்தவர்கள் பொருளாதார ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் தயாரித்து வருகின்றனர். இவ்வேளையில் இந்த அண்மைத் தயாரிப்பை எப்படிச் செய்யலாம் என குவனெல்லா துறவு சபையின் அருட்சகோதரர் அமலோற்பவ நாதனைக் கேட்டோம்.

RealAudioMP3 இறைவனின் அன்பில் பங்கு பெறுவோம். அடுத்திருப்பவரையும் அன்பு செய்வோம். இதுவே கிறிஸ்துமஸ் பெருவிழாவுக்கான தயாரிப்பு என்று அருட்சகோதரர் அமலோற்பவ நாதன் சொன்னார். ஒரு நல்ல மனிதனைத் தயாரிப்பதற்கு ஒழுக்கம் 30 விழுக்காடு, அறிவு 30 விழுக்காடு, பாரம்பரியம் அல்லது கலாச்சாரம் 10 விழுக்காடு, தன்னம்பிக்கை 22 விழுக்காடு, நாட்டுப்பற்று 5 விழுக்காடு, தைரியம் 3 விழுக்காடு, தேவையான அளவு பேச்சுத் திறமை, அலங்கரிக்க பணம் ஆகியவை தேவை என்று ஓர் இதழில் வாசித்தோம். ஆனால் ஒருவன் நல்ல மனிதனாக வாழ அவனில் இறையன்பும் பிறரன்பும் இருக்க வேண்டும் சுவாமி விவேகானந்தரும் சொல்லியிருக்கிறார் – “கல்வி ஒருவனை அறிவாளியாக மாற்றலாம். ஆனால் அன்பு ஒன்றே அவனை மனிதனாக்கும்” என்று.

அருளாளர் அன்னை தெரேசாவின் வாழ்க்கையில் நடந்தது நமக்கெல்லாம் தெரியும். “நோயாளிகளை இங்கு அழைத்து வராதீர்கள். ஆனால் மருத்துவர்களால் கைவிடப்பட்டவரை மட்டும் இங்கு விட்டுச் செல்லுங்கள்” என்ற அறிவிப்புப் பலகை அவரது தொண்டு நிறுவனத்தின் வாசலில் எழுதப்பட்டிருக்கும். இந்தக் கைவிடப்பட்டவர்களுக்கென அன்னை தெரேசா கொல்கத்தா வீதிகளில் நிதி கேட்கச் சென்ற பொழுது பலர் இயன்றதைக் கொடுத்தார்கள். ஆனால் ஒருவர் மட்டும் அன்னை தெரேசா முகத்தில் காறி உமிழ்ந்தார். கொஞ்சம்கூட முகம் சுளிக்காத அன்னை தெரேசா, அந்த ஆளிடம், மகனே, எனக்குத் தேவையானதைக் கொடுத்து விட்டாய். என் பிள்ளைகளுக்குத் தேவையானதைக் கொடு என்று மறுபடியும் கையேந்தினார். ஆம். அன்புக்கு வெறுப்பின் அடையாளம் தெரியாது.

கிறிஸ்து உண்மையிலேயே நம் இதயங்களில் குடில் அமைக்க வேண்டுமானால் நம்மில் அன்பும் கருணையும் பெருக்கெடுத்து ஓட வேண்டும். எதையும் எதிர்பாராமல் பிறரை அன்பு செய்து இந்த பெருவிழாவுக்கு நம்மைத் தயாரிப்போம். நம் வார்த்தைகள் செயல்களாகட்டும்.


All the contents on this site are copyrighted ©.