2009-12-19 16:55:56

திருத்தந்தை-புனிதர்கள் புதிய வாழ்வின் அடையாளம்


டிச.19,2009 புனிதர் நிலைக்கு உயர்ததும் திருப்பேராயம் தொடங்கப்பட்டதன் 40ம் ஆண்டை முன்னிட்டு அப்பேராயத்தின் உறுப்பினர்களை இன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை.

புனிதர்கள் கடந்த காலத்தின் பெரிய மனிதர்கள் மட்டுமல்ல, நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தின் மாமனிதர்களாகவும் இருக்கின்றார்கள் என்று அவர்களிடம் கூறினார்.

இவர்கள் புதிய வாழ்வின் அடையாளம் மற்றும் விசுவாசத்தின் மாபெரும் சாட்சிகளாகவும் இருக்கின்றார்கள் என்றுரைத்த அவர், புனிதருக்கு வணக்கம் செலுத்தும் போது நற்செய்தியின் சாரத்தையும் உலகில் கிறிஸ்துவின் பிரசன்னத்தையும் மகிழ்ச்சியோடு கண்டுணர்வதாகவும் இருக்கின்றது என்றார்.

ஒருவரை புனிதர் நிலைக்கு உயர்த்தும் போது செய்யப்படும் பல்வேறு நிலைகளை விளக்கிய அவர், எடுத்துக்காட்டாக, இந்நிலைக்கு உயர்த்தப்படும் ஒருவரைப் பற்றி முதலில் கவனமாகத் தேர்ந்து தெளிந்த பின்னர் இறைமக்கள் சமுதாயத்திற்கு அவரை கிறிஸ்துவ வாழ்வுக்கு முன்மாதிரிகையாய்ப் பரிந்துரைக்கிறது, அந்த வணக்கமானது தலத் திருச்சபைகளில் அல்லது துறவற சபைகளில் செய்யப்படுகின்றது. இறுதியில் அகிலத் திருச்சபைக்கும் அவரைப் புனிதர் எனத் திருத்தந்தை அறிவிக்கிறார் என்றார்.

இந்தத் திருப்பீடப் பேராயம் 1969ம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுலால் தொடங்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.