2009-12-18 16:14:24

குடியேற்றதாரர் இரண்டாம்தர மனிதர்களாக நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்- நவநீதம்பிள்ளை


டிச.18,2009 குடியேற்றதாரர் இரண்டாம்தர மனிதர்களாக நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமைகள் அவையின் உயர் இயக்குனர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்தார்.

அண்மை ஆண்டுகளில் வடஆப்ரிக்காவின் எல்லைகளைக் கடக்க முயற்சிக்கும் அகதிகளும் குடியேற்றதாரரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர் அல்லது பாலைவனத்திலேயே இறக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்றும் நவநீதம்பிள்ளை கூறினார்.

டிசம்பர் 18ம் தேதி இவ்வெள்ளிக்கிழமை சர்வதேச குடியேற்றதாரர் தினம் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட நவநீதம்பிள்ளை, நிலக்கண்ணி வெடிகள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் படகு விபத்தில் இறப்பவர்கள், இன்னும், பாலியல் வன்புணர்ச்சி, விபசாரம், கொத்தடிமை ஆகியவற்றுக்குப் பலியாகும் குடியேற்றதாரர் பற்றியும் விளக்கியுள்ளார்.

குடியேற்றதாரர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாப்பது குறித்த சர்வதேச ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டதன் இருபதாம் ஆண்டு, 2010ல் நிறைவுறும் வேளை, இதனை இன்னும் அமல்படுத்தாத நாடுகள் தாமதமின்றி செயல்படுத்துமாறு அவர் கேட்டுள்ளார்.

இவ்வுடன்படிக்கை, உலகில் மிகவும் மோசமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றும் கூறியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அவையின் உயர் இயக்குனர், சர்வதேச மானிட உரிமை சட்டங்கள் குடியேற்றதாரரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அழைப்பு விடுக்கின்றது என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.