2009-12-18 16:09:00

மனித சமுதாயம் சுற்றுச் சூழலைப் பாவிக்கும் விதமானது அது தன்னையே பாவிக்கும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது - வத்திக்கான் அதிகாரி


டிச.18,2009 உலகில் அதிகரித்து வரும் வெப்பநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கு அனைவரையும் சட்டத்தால் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் அதற்குப் போதுமான நிதி ஒதுக்கப்படுவதற்கு உறுதிகளும் கொண்டுவரப்படுவதற்கு தெளிவான மற்றும் உறுதியான அரசியல் ரீதியான விருப்பம் தேவை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

193 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் கோபன்ஹாகன் வெப்பநிலை மாற்றம் குறித்த உலக மாநாட்டில் உரையாற்றிய ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தீனோ மிலியோரே இவ்வாறு கூறினார்.

“மாற்றியமைத்தல், மட்டுப்படுத்துதல்” ஆகிய இரண்டு கூறுகளின் அடிப்படையில் வெப்பநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு உலகளாவிய குழுக்கள், எவ்வாறு முயற்சிகளை எடுத்து வருகின்றன என்று அவர் விளக்கினார்.

கார்பன் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது குறித்த கல்வியை வழங்குவதற்கும் திருப்பீடம் செய்து வரும் நடவடிக்கைகள் பற்றியும் பேராயர் குறிப்பிட்டார்.

பேராயர் மிலியோரே தலைமையில் ஐந்து பேர் கொண்ட திருப்பீட பிரதிநிதிகள் குழு இவ்வுலக மாநாட்டில் கலந்து கொண்டது.

கோபன்ஹாகனில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்த இந்த இரண்டு வார உச்சி மாநாட்டில், இப்பூமியின் வெப்பத்தை அதிகபட்சமாக 2 செல்சியுஸ் டிகிரிக்குக் கொண்டு வருவது, அதிகரித்து வரும் வெப்பநிலையைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் பணம் உதவி செய்வது போன்றவை குறித்த தீர்மானங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
All the contents on this site are copyrighted ©.