2009-12-18 16:15:20

பருவநிலை மாற்றத்தால் 40 ஆண்டுகளில் 100 கோடி பேர் இடம்பெயரும் அபாயம்


டிச.18,2009 "பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால், அடுத்த 40 ஆண்டுகளில், 100 கோடி மக்கள், தென் கிழக்கு ஆசியா, மத்திய அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்ரிக்காவின் பல பகுதிகளுக்கு இடம்பெயர்வர்' என, குடியேற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சர்வதேச குடியேற்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், மேற்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகள், தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளுக்கே எதிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் இடம்பெயர்வர் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியது.

மேலும், கடந்த 20 ஆண்டுகளின் இயற்கை பேரழிவுகளின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகி உள்ளது. இவ்வாறு தொடர்ந்து ஏற்படும் பருவநிலை மாற்றங்களால், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகளவிலான வெப்பநிலை 2 டிகிரி சென்டிகிரேடு முதல் 5 டிகிரி சென்டிகிரேடு வரை அதிகரிக்கலாம் என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருவது காரணமாகக் கடந்தாண்டு திடீரென ஏற்பட்ட பேரழிவுகளால், இரண்டு கோடி மக்கள் வீடிழந்துள்ளனர் என்றும் அவ்வமைப்பின் செய்தி கூறியுள்ளது.

இதற்கிடையே, ஏழை நாடுகள் காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தை கையாள்வதற்கு உதவும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் 100 பில்லியன் டாலர்களை வழங்குவோம் என்று அமெரிக்க ஐக்கிய நாடு கூறியுள்ளது.
All the contents on this site are copyrighted ©.