2009-12-18 16:05:54

கிறிஸ்துமஸ் மரம், உலகிற்கு வந்த உண்மையான ஒளிக்குச் சான்றாக நிற்கின்றது - திருத்தந்தை


டிச.18,2009 வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரம், உலகிற்கு வந்த உண்மையான ஒளிக்குச் சான்றாக நிற்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

ஆண்டு தோறும் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் அமைக்கப்படும் பெரிய குடிலுக்கு அருகில் வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரத்தை ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு பரிசாக வழங்கும். இந்த ஆண்டு இம்மரத்தை பெல்ஜிய நாடு வழங்கியுள்ளது.

இம்மரத்தைக் கொண்டு வந்த பெல்ஜிய நாட்டு பொருளாதார அமைச்சர் உள்ளிட்ட சுமார் 200 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவை இவ்வெள்ளிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்துமஸ் மரத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொன்னார்.

அடர்ந்த காட்டில் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருந்து வந்த இந்த மரங்களில் ஒன்று தற்சமயம் வான தூதர்களின் செய்தியால் ஒளிர்கின்றது என்றும் கூறினார் அவர்.

பெல்ஜிய நாட்டு மறைப்பணியாளர்கள் உலகின் பல பாகங்களிலும் ஏற்றிய நற்செய்தி ஒளி, தற்சமயம் உங்கள் நாட்டிலும் சுடர்விடுகின்றது எனவும் அந்நாட்டினருக்குத் தமது நன்றியைத் தெரிவிப்பதாகவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
All the contents on this site are copyrighted ©.