2009-12-17 14:38:13

அரசியல் அதிகாரிகள் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கு அதிக முயற்சிகள் எடுக்க திருத்தந்தை வலியுறுத்தல்


டிச.17,2009 சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான தங்களது முயற்சிகளை அனைத்து நாடுகளின் அரசியல் அதிகாரிகள் வலுப்படுத்துவது மட்டுமன்றி, அது சார்ந்த பிரச்சனைக்குச் சர்வதேச அளவில் தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

டென்மார்க், உகாண்டா, சூடான், கென்யா, Kazakhstan, பங்களாதேஷ், பின்லாந்து, லாத்வியா ஆகிய நாடுகளின் திருப்பீடத்துக்கானப் புதிய தூதுவர்களை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

சுற்றுச் சூழல் சார்ந்த பிரச்சனையைத் தனிப்பட்ட நாடுகள் மட்டுமே கையாள முடியும் என்றாலும், எல்லாருக்கும் பயனுள்ள மற்றும் நியாயமான சர்வதேச அளவிலான ஒப்பந்தங்கள் கொணரப்படுவதற்குத் தனிப்பட்ட நாடுகள் தூண்டுதலாகவும் பரிந்துரைகளை முன்வைப்பதாகவும் செயல்படலாம் என்றும் திருத்தந்தை கூறினார்.

மானுட சமுதாயத்திற்கு அமைதி தேவைப்படுகின்றது, இந்த அமைதியை, தனது உண்மையான இயல்பை இறைவனில் காணும் தனியாட்கள், சமய மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரின் கூட்டு நடவடிக்கையினால் அடைய முடியும் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

பல்வேறு சமயத்தவர் ஒன்றிணைந்து வாழ்வது பற்றியும் பேசிய அவர், சிலசமயங்களில் அரசியல் பிரச்சனையைவிட சமயம் சார்ந்த விவகாரம் பெரிதாக இருக்கின்றது என்றும், ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் வகுத்துள்ள திட்டம் குறித்து ஒவ்வொரு விசுவாசியும் சிந்திக்குமாறும் அழைப்பு விடுத்தார்.
All the contents on this site are copyrighted ©.