2009-12-15 17:09:51

கடலில் மீன்பிடிப்பது தொடர்பான சட்ட மசோதா, மீனவ மக்களின் வாழ்வு ஆதாரத்தையே பாதிப்பதாய் இருக்கின்றது : தூத்துக்குடி ஆயர்


டிச.15,2009 கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக அண்மையில் இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள சட்ட மசோதா, மீனவ மக்களின் வாழ்வு ஆதாரத்தையே பாதிப்பதாய் இருக்கின்றது என்று தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ் குறை கூறியுள்ளார்.

'கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மைச் சட்டம் 2009' என்ற பெயரில் மத்திய அரசு தயாரித்துள்ள சட்ட மசோதாவை எதிர்த்து தூத்துக்குடி மற்றும் பாளையங்கோட்டை மறைமாவட்டங்களின் கத்தோலிக்க மீன்பிடித் தொழிலாளலர்கள் அண்மையில் நடத்திய பேரணியை தொடங்கி வைத்துப் பேசிய ஆயர் இவான் அம்புரோஸ் இவ்வாறு கூறினார்.

மத்திய அரசு, இந்த மசோதாவை திருப்பிப் பெறுமாறும் கேட்டுக் கொண்ட ஆயர், இந்தப் பேரணியில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும், தமிழக அரசு தம் மக்களின் பொதுநலவாழ்வையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்குத் தலையாயக் கடமையைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் மீனவர்கள் வாழ்க்கை ஆதார இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியில், குருக்கள், கன்னியர் உட்பட நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இதன் இறுதியில் ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்று, ஒரு மனுவையும் வருவாய்த்துறை அலுவலகர் பாக்யம்தேவகிருபையிடம் சமர்ப்பித்தது.
All the contents on this site are copyrighted ©.