2009-12-15 17:10:23

பிலிப்பைன்சில் மாயோன் எரிமலை பகுதியிலுள்ள மக்களை அகற்றும் அரசின் பணியில் கத்தோலிக்கத் திருச்சபை முழுவீச்சுடன் இயங்கி வருகிறது


டிச.15,2009 பிலிப்பைன்சில் மாயோன் எரிமலை இன்னும் ஓரிரு நாட்களில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளை, அப்பகுதியிலுள்ள மக்களை அகற்றும் அரசின் பணியில் கத்தோலிக்கத் திருச்சபை முழுவீச்சுடன் செயல்பட்டு வருவதாக யூக்கா செய்தி நிறுவனம் கூறியது.
Albay மாநிலத்திலுள்ள மாயோன் எரிமலை, ஏற்கனவே புகைகளையும் நெருப்புக் குழம்புகளையும் வெளிவிடத் துவங்கியிருக்கின்ற நிலையில் அப்பகுதிக்கு ஆறு முதல் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் வாழும் மக்களை வெளியேற்றும் பணியை அரசின் இடர்துடைப்பு அமைப்பு செய்து வருகின்றது.
ஏற்கனவே 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை லெகாஸ்பி மறைமாவட்ட சமூகநல மையம் கொடுத்து வருவதாக அம்மைய இயக்குனர் அருள்திரு Ramoncito Segubiense கூறியுள்ளார். மொத்தத்தில் ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
கூம்பு வடிவத்தில் 2460 மீட்டர் உயரமுடைய மாயோன் எரிமலை, பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இது 2006ம் ஆண்டு வெடித்ததில் சுமார் முப்பதாயிரம் பேர் வீடுகளை இழந்தனர். 1814ம் ஆண்டில் இடம் பெற்றதில் முழு நகரமுமே அழிந்தது.All the contents on this site are copyrighted ©.