2009-12-14 16:30:03

மனிதம் காக்கப் புறப்படு மனிதா


டிச.14,2009 மனித உரிமைகள். RealAudioMP3 அன்பர்களே, தெருவில் நடந்து கொண்டிருந்த ஒருசிலரிடம் மனித உரிமைகள் என்றால் என்ன என்று கேட்ட போது, வாழ்வதற்கான உரிமை, சமய சுதந்திரம், அனைவரும் சமமாக நடத்தப்படல், குடியிருக்க உரிமை, வேலை செய்ய உரிமை, உணவு பெற உரிமை என, இப்படி பலவாறு தெரிவித்தார்கள். உங்களுக்கும் இதேபோல் சொல்லத் தோன்றியிருக்கலாம். இந்த உரோமை மாநகரில் எப்பொழுதும் ஒரு பெரிய மூட்டை முடிச்சோடு பேரூந்தில் பயணம் செய்யும் ஒருவர் கேட்டார்-எனக்கும் மற்றவர்களைப் போல இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள்தான் இருக்கின்றன. அப்படியிருக்க எனக்குமட்டும் ஏன் சாப்பாடு இல்லை, தங்க இடமில்லை, உடுக்க உடையில்லை என்று. உண்மைதான். மனித உரிமைகள், மனித உரிமைகள் என்று பேசப்படுகின்றது. ஆனால் அடிப்படை வசதிகள், அடிப்படை உரிமைகள் இல்லாமல், மனிதன் என்ற முகத்தை இழந்து, எத்தனையோ பேர் அகதிகள் முகாம்களிலும், போர்ப் பகுதிகளிலும் பாலங்களுக்கு அடியிலும் இரயில் நிலையங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

பிரேசில் நாட்டு சாபவுலோ மற்றும் ரியோதெ ஜெனியோரே நகரங்களின் சேரிகள் மற்றும் பிற இடங்களைச் சேர்ந்தவர்களில் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் 2003ம் ஆண்டிலிருந்து காவல்துறையின் துப்பாக்கிகளுக்குப் பலியாகி இருக்கின்றனர். ஆப்ரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் இராணுவத்திற்கும் Hutu இனப் போராளிகளுக்கும் இடையே இடம் பெறும் சண்டையில் கடந்த ஒன்பது மாதங்களில் 1400க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் அவர்களின் வீடுகளுக்குள்ளேயே தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் இந்த 2009ம் ஆண்டு மனித உரிமைகளுக்கு ஏற்ற ஆண்டாக அமையவில்லை. வியட்நாமில் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிய குடிமக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். சீனாவில் நடைமுறையில் இருக்கும் ஒரு குழந்தை திட்டத்தால் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சூடானில் பாலியல் வன்புணர்ச்சி, கூட்டுக் கொலைகள் மற்றும் கிராம் கிராமமாக எரிக்கப்படுகின்றன. இப்படி உலகில் பல இடங்களில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படுகின்றன என்று அமெரிக்க அரசியல்வாதி கிறிஸ் ஸ்மித் கூறியிருக்கிறார்.

அன்று சென்னையிலிருந்து மதுரைக்கு நானும் உடன் சகோதரியும் பயணம் செய்து கொண்டிருந்தோம். நல்ல தூக்கம். “அம்மா, வண்டி 15 நிமிஷம் நிக்கும். சாப்பிட வாங்க” என்ற ஒரு சிறுவனின் குரலைத் திடீரெனக் கேட்டுக் கண் விழித்தோம். அப்போது மணி இரவு பத்தரையைக் கடந்திருந்தது. நாங்கள் பேரூந்தை விட்டு இறங்கி அந்தக் கடைக்குச் சென்றோம். அங்கு அந்தச் சிறுவன் சுறுசுறுப்பாய் மேஜையைத் துடைத்துக் கொண்டிருந்தான். இந்த நேரம் இவனையொத்த வயதுச் சிறுவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவன் இப்படி என்று நினைத்துக் கொண்டிருந்த போதே அவனது வீங்கிய கன்னத்தைப் பார்த்து அதிர்ந்தோம். அவனிடம் மெதுவாக, தம்பி, உனது கன்னம் ஏன் வீங்கியிருக்கின்றது என்று கேட்டோம். அவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுச் சொன்னான் - மூன்று நாட்களுக்கு முன்னர் மேஜையைத் துடைத்துக் கொண்டிருந்த போது ஒரு எச்சிச் சோறு, சாப்பிட வந்தவர் மீது பட்டுவிட்டது. அவர் ஓனரிட்டச் சொல்லிட்டாரு. அவர் என்னைக் கூப்பிட்டு கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டார். அந்த வீக்கம் இன்னும் வடியலை என்றான் பரிதாபமாக. ஆம். இன்று இந்தியாவில் படிப்பறிவில்லாத இளைஞர் ஏறத்தாழ 29 கோடி. இவர்களில் நான்கரை கோடி, சிறுவர்கள். இன்று உலகில் ஏறத்தாழ 10 கோடிச் சிறுமித் தொழிலாளிகள் உள்ளனர்.

கடந்த மாதத்தில் மதுரை மாவட்டம் தென்பழஞ்சியில் 55 வயதான ஆண்டிச்சி என்ற தலித்பெண், சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் அவளது கைகள் நொறுங்கியுள்ளன. 'ஆண்டிச்சியின் மகன், மேல்சாதி தரப்பைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமியிடம் பேசினான்' என்பதுதான்! இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகச் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. ''இப்படி தென்பழஞ்சியில் மட்டுமல்ல... தமிழகம் முழுவதும் பெண்கள் மீது, குறிப்பாக தலித் சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது என்று 'எவிடென்ஸ்' மனித உரிமைகள் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் கூறியிருக்கிறார். தினமும் அவரது அலுவலகத்துக்குப் பாதிக்கப்பட்ட நிலையில் குறைந்தது நான்கைந்து தலித் பெண்களாவது வருகிறார்களாம். ஆம். இந்தியாவில் ஒவ்வொரு 43 நிமிடங்களுக்கு ஒரு பெண் கடத்தல். ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு 4 கற்பழிப்பு என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது.

அன்பர்களே, இந்த ஒரு சூழலில் கடந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் உலக மனித உரிமைகள் தினத்தைக் கடைபிடித்தது. அதையொட்டிப் பேசிய ஐ.நா. அதிகாரிகள், இந்தியா, இலங்கை, உகாண்டா, அமெரிக்கா இப்படி உலகில் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான உரிமைகள்தான் உண்டு. சுருங்கச் சொல்லின், மனித உரிமைகள் உலகளாவிய கூறைக் கொண்டது என்று RealAudioMP3 கூறினர்.

ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனும் உலகில் இடம் பெறும் பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்றார். இந்தப் பாகுபாடுகள் அவநம்பிக்கை, வன்முறை, பாதுகாப்பின்மை, பழிவாங்குதல் போன்ற எதிர்மறைப் பண்புகளுக்குக RealAudioMP3 ் காரணமாகின்றன என்றார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அமைப்பின் உயர் இயக்குனரான நவநீதம் பிள்ளை, உலகிலுள்ள வேலை நேரங்களில் மூன்றில் இரண்டு பகுதி நேரங்களில் பெண்கள் வேலை செய்கின்றனர். உலகின் உணவில் பாதியை இவர்கள் உற்பத்தி செய்கின்றனர். எனினும் இப்பெண்கள் உலகின் வருவாயில் 10 விழுக்காட்டை மட்டுமே சம்பாதிக்கின்றனர். உலகின் சொத்தில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே இவர்கள் கொண்டுள்ளனர் என்று கூறினார்.

1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி பிரகடனப்படுத்தப்பட்ட உலக மனித உரிமைகள் சாசனம் சொல்கிறது – “எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள். மீறப்படாத சில உரிமைகள் இவர்களுக்கு உண்டு. இவை வாழ்வு, சுதந்திரம், மகிழ்வைத் தேடும் உரிமைகள்” என்று. வாழும் உரிமை, சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என இது முப்பது உரிமைகளைக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் கொடூரங்கள் இவ்வாறு ஒரு சாசனம் கொண்டு வரப்படுவதற்குக் காரணமாக இருந்தாலும் வரலாற்றில் உரிமைகளுக்கானப் போராட்டங்கள் தொடக்க காலங்களிலேயே இருந்திருக்கின்றன.

கி.பி. 1 முதல் 3ம் நூற்றாண்டு வரை உரோமைப் பேரரசு வளர்ந்து பரவி நின்றது. அக்காலத்தில் உரோமைக் குடிமக்கள் தவிர அப்பேரரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட யாருக்கும் உரிமைகள் கிடையாது. அப்பேரரசைத் தாங்கி நின்ற இலட்சக்கணக்கான அடிமைகளுக்கு வாழ்வதற்குக்கூட உரிமையில்லை. அன்று உரோமையில் வீனஸ் தெய்வத்திற்கு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. உரோமையர்களின் மிகச்சிறந்த பொழுது போக்கு என்னவெனில், அடிமைகளை மிருகங்களோடு மோதவிட்டு அவர்கள் இறப்பதைப் பார்த்து இரசிப்பதாகும். ஒருநாள் Spartekles ம் அவனது தோழர்களும் விளையாட்டு மைதானத்திற்கு இழுத்து வரப்பட்டு ஒருவர் ஒருவரைத் தாக்கிக் கொள்ள வேண்டுமென்று கட்டளையிடப்பட்டனர். அடிமை ஸ்பார்டெக்கெசின் முன்னால் மற்றொரு அடிமை நிறுத்தப்பட்டான். இருவருக்கும் மோதல் தொடங்க மணி அடித்தது. ஆனால் ஸ்பார்டெக்கெஸ் தனது சக அடிமையைத் தாக்காமல் அமைதியாக நின்றான். அப்போது அவனைத் தாக்கச் சொல்லி பேரரசனின் குரல் அலறியது. ஆனால் ஸ்பார்டெக்கெஸ், பலத்த குரலில் சொன்னான் : “ என் சகோதரனை என்னால் கொல்ல முடியாது. அவன் இரத்தம் மண்ணில் விழ நான் காரணமாக இருக்க மாட்டேன்” என்று. அதன் விளைவு? ஸ்பார்டெக்கெசும் அவனோடு சேர்ந்து கலகம் செய்த மூவாயிரம் அடிமைகளும் உரோமையின் வெளிப்புற சாலை தொடங்கி டமாஸ்கஸ்வரை சாலையின் இருபக்கங்களிலும் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டனர். ஆனால் உரிமையோடு வாழ ஸ்பார்டெக்லெஸ் தொடங்கி வைத்த நெருப்பு சில ஆண்டுகளுக்குள் உரோமைப் பேரரசே சின்னா பின்னமாகியதாக வரலாறு.

அன்று தொடங்கிய உரிமைப் போராட்டம் வரலாற்றில் இன்றும் தொடர்கின்றது. இங்கிலாந்து மற்றும்பிற ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றமாக இருந்த அமெரிக்க மாநிலங்கள் தங்கள் சுதந்திரத்தின் தேவையை உணரத் தொடங்கின. அமெரிக்க மக்கள், அதிக வரிவிதிப்பை எதிர்த்தனர். தங்கள் உணர்வுகளையும் உரிமைகளையும் வெளிப்படுத்தத் தங்கள் பிரதிநிதித்துவம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் இடம் பெற வேண்டுமென வலியுறுத்தினர். பிரிட்டன் இதற்குச் செவிசாய்க்க மறுக்கவே அமெரிக்கர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். பின்னர் ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் நடந்த போரில் அமெரிக்க மாநிலங்கள் வெற்றி பெற்றுத் தங்கள் சுதந்திரத்தை உலகிற்கு அறிவித்தன. 1776ல் அமெரிக்க விடுதலைப் பிரகடனமும் வெளியிடப்பட்டது.

மனித உரிமைகள் என்று நினைக்கும் போது ப்ரெஞ்ச் புரட்சி பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். பிரான்ஸ் நாடு மன்னராட்சியில் கஷ்டப்பட்டது. மக்களுக்கு உணவு இல்லை. எங்கும் பஞ்சம். அப்பாவி குடியானவர்கள் மீது ஆயிரமாயிரம் வரிகள் வேறு. மக்கள் பசிக்கு உணவு கேட்டு அரண்மனைக் கதவைத் தட்டினர். அரசியோ, குதிரைக்குப் போடும் கொள் ஏராளமாக இருக்கின்றது, கொடுங்கள். அவர்கள் கேக் செய்து சாப்பிடட்டும் என்று எகத்தாளமாகச் சொன்னாள். வெடித்தது கலவரம். அரச குடும்பத்தினர் கில்லட்டின் என்ற இயந்திரத்துக்கு உயிர்ப்பலி கொடுக்கப்பட்டனர். மானிடர்க்கு இயல்பான, மீறக்கூடாத, தூய்மையான உரிமைகள் உண்டு என்று ப்ரெஞ்ச் சுதந்திரப் பிரகடனம் சொல்கிறது. 1789ம் ஆண்டு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முன்னுரையோடு ப்ரெஞ்ச் அரசியல் சாசனம் அறிவிக்கப்பட்டது.

அன்பர்களே, மனிதனின் அடிப்படை அத்தியாவசிய உரிமைகள் மீறப்படும் போது, அவன் கொதித்தெழுகிறான். புரட்சி வெடிக்கிறது. இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், சத்தம் சந்தடியில்லாமல் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் மக்கள் இராணுவ இயக்கம் என்ற ஓர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று சொல்கிறது. போராளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது சான்றாக இருக்கிறது.வாசித்த கவிதை ஒன்று. “இன்று அறிவு இருப்பவர்கள் தீர்ப்புச் சொல்கிறார்கள். இதயம் இருப்பவர்கள் துடிக்கிறார்கள். இரண்டும் இருப்பவர்கள் போராடுகிறார்கள்”. ஆம். இன்று மனிதர்களுக்கு நிறையவே அறிவு இருக்கின்றது. இன்றைய மனிதனால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்ப்புச் சொல்ல முடிகின்றது. ஆயினும் பிறர் துன்பம் பார்த்து, கொடும் செயல்கள் பார்த்து துடிப்பதற்கு இதயம் இருக்கின்றதா? செயல் இல்லாத சொற்கள் வெறும் ஆண்மையற்ற, உயிரற்ற சொற்கள் என்று சாக்ரடீஸ் ஏத்தென்ஸ் தெருக்களில் ஒலித்தார். எனவே நான் பிறந்த போது இருந்த உலகம் நான் இறக்கும் போது இருக்கவிட மாட்டேன், புதிதாக மாற்றப் பாடுபடுவேன் என்று செயல்பட புலரும் புதிய ஆண்டில் புறப்படுவோமா.

நாசிகளுடைய கொடுமைகளுக்குப் பலியான நீல்மொய்லர் சொன்னார்- முதலில் கம்யூனிஸ்ட்டுகளைப் பிடிக்க வந்தனர். நான் வாய் திறக்கவில்லை. ஏனெனில் நான் கம்யூனிஸ்ட்டு அல்ல. அடுத்து யூதர்களைப் பிடிக்க வந்தனர். நான் ஏதும் பேசவில்லை. ஏனெனில் நான் யூதன் அல்ல. அடுத்து தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தனர். நான் ஏதும் பேசவில்லை. ஏனெனில் நான் ஒரு தொழிற்சங்கவாதி அல்ல. இறுதியில் என்னைப் பிடிக்க வந்தனர். அப்போது எனக்காகப் பேச யாரும் வரவில்லை.

சிந்திப்போம். நான் அடுத்தவருக்காகப் பேச முன்வராத போது எனக்கென யார் பேச முன்வருவார்?
All the contents on this site are copyrighted ©.