2009-12-12 16:07:20

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 "The Little Prince" (Antoine de Saint-Exupery) என்பது ஒரு கற்பனைக் கதை. அரிதான, அழகான கற்பனை. வெளி உலகத்திலிருந்து நம் பூமிக்கு வந்து சேரும் ஒரு குட்டி இளவரசனின் கதை. அந்தக் கதையில் வரும் சிறுவன் ஒரு நரியைச் சந்திக்கிறான். நட்பு மலர்கிறது. ஒருநாளே நிகழ்ந்த சந்திப்பிற்கு பின், அடுத்த நாள் சிறுவன் வந்ததும் நரி அவனிடம் உரிமையாய், "நீ நேற்று வந்த நேரத்திற்கே வந்திருந்தால், ரொம்ப நன்றாக இருந்திருக்கும்." என்று சொல்கிறது. ஏன் நேரத்திற்கு வரவேண்டும் என்று கேட்கும் இளவரசனுக்கு நரி சொல்லும் விளக்கம் அழகானது. "உதாரணத்திற்கு, நீ நாலு மணிக்கு வருவாய் என்று உறுதியாக எனக்குத் தெரிந்தால், நான் மூன்று மணிக்கே மகிழ்வாக இருக்க ஆரம்பித்துவிடுவேன். நீ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரத்திற்கு வந்தால், என் மனம் தயாராக, மகிழ்வாக இருக்க முடியாதே" என்று நரி சொல்கிறது. நிகழ்ச்சிக்கு முன் மகிழ்ச்சி.
நல்லதொன்று நடக்கப் போகும் வேளையில், மனதுக்குப் பிடித்த ஒருவரை எதிர்பார்த்திருக்கும் வேளையில், அந்த நிகழ்வை, அந்த நண்பரை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நேரம் மிக ஆனந்தமானது. இதை எல்லாரும் வாழ்வில் உணர்ந்திருப்போம். திருவருகைக் காலம் இது, நாமும் காத்திருக்கிறோம்.
திரு வருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு இது. இந்த ஞாயிறை, Gaudete Sunday அதாவது, மகிழும் ஞாயிறு என்று கொண்டாடுகிறோம். கிறிஸ்து பிறப்புக்கு இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருக்கும் போதே மகிழ்வைப் பற்றி அழுத்தமாகக் கூறுகின்றன இன்றைய முதலிரு வாசகங்கள்:

செப்பனியா 3: 14-17; பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4: 4-7

எதிர்பார்ப்பு, தயாரிப்பு என்று கடந்த இரு வாரங்களாய் திருவருகைக்கால ஞாயிறு சிந்தனைகளை பகிர்ந்தோம். இன்று நாம் சிந்திக்க இருப்பது சந்திப்பு. சந்திப்புகள் பலவிதம். ஒரே ஒரு சந்திப்பை மட்டும் பற்றி இரு கோணங்களில் பார்க்கலாம். மேலதிகாரி ஒருவரைச் சந்திக்கப் போகிறோம். நாம் சந்திக்கச் செல்லும் அதிகாரி மிக நல்லவர், நேர்மையானவர், பணிபுரிபவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்பவர்... இப்படி நல்லவைகளையே கற்பனை செய்வோம். இவரைச் சந்திக்கச் செல்லும் நாம்? இதுவரை எந்த குறையும் இல்லாமல் ஈடுபாட்டோடு உழைத்து வந்திருக்கிறோம். நமது திறமை, நேர்மை இவற்றைக் கண்டு ஆனந்தப்பட்டு மேலிடத்திலிருந்து இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம் மன நிலை எப்படி இருக்கும்?
இதற்கு நேர் மாறான ஒரு சூழலையும் நினைத்துப் பார்க்கலாம். நாம் சந்திக்கச் செல்லும் அதிகாரி மேலே சொல்லப்பட்ட அதிகாரிக்கு முற்றிலும் நேர் மாறானவர். அவரைச் சந்திக்க நாம் செல்லும் காரணம்? பல தவறுகள் நாம் செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அதற்காக, மேலிடத்திலிருந்து வந்திருக்கும் சம்மன். நம் மன நிலை எப்படி இருக்கும்? மனம் நிலையில்லாமல் அலையும். இரு வேறு உலகங்கள் போல், இரு வேறு துருவங்கள் போல் இந்த இரு சந்திப்புகளும் அமையும்.
இறைவனை நாம் சந்திக்கிறோம். வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் சந்திக்கிறோம். இந்த சந்திப்புகளின் உச்சமாக, நம் வாழ்வின் முடிவில் அவரைக் கட்டாயம் சந்திப்போம். அந்த சந்திப்பு எப்படி இருக்கும்?
புனித பிலிப் நேரி வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம். புனித பிலிப் நேரி ஒருநாள் நண்பர்களுடன் பொழுதுபோக்காக சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப் பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப் அவரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்." என்றாராம்.
சாவை, வாழ்வின் முடிவை பயங்கரமான ஒரு மாற்றமாக, முடிவாகப் பார்ப்பவர்கள் அதைக் கண்டு பயப்படலாம். காரணம்? அவர்களது வாழ்வுக்கும், சாவுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கலாம். இந்த முரண்பாடுகளை எல்லாம் சரிசெய்துவிட்டு, சாவைச் சந்திக்க அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்வு முழுவதையும் நல்ல விதமாகச் வாழ்பவர்களுக்கு வாழ்ந்தவர்களுக்கு சாவு எந்த வகையிலும் பயத்தை உண்டாக்காது என்பதற்கு பிலிப் நேரி ஒரு நல்ல உதாரணம். சாவின் வழியாகத் தன்னைச் சந்திக்கப் போவது அல்லது தான் சென்றடையப் போவது இறைவன் தான் என்றான பிறகு ஏன் பயம், பரபரப்பு எல்லாம்? தேவையில்லையே. பிலிப் நேரியைப் பொறுத்தவரை நான் இப்படியும் கற்பனை செய்து பார்க்கிறேன். அந்த நண்பர் சொன்னது போலவே, சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது அவருக்கு சாவு நேரிட்டால், மறு வாழ்வில் அந்த இறைவனோடு தன் விளையாட்டைத் தொடர்ந்திருப்பார் பிலிப். இறைவனை வாழ்க்கையில் அடிக்கடி சந்தித்து வந்த பிலிப்புக்கு பயம் பரபரப்பு எதற்கு? இந்த நிலை எல்லாருக்கும் கிடைக்கும் ஒரு பாக்கியம் அல்ல.
பிலிப் நெறியைப் போல் எந்தவித பயமும் இன்றி இறைவனைச் சந்திக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நல்ல கேள்வி: இதே கேள்வியைத் தான் மக்கள் திருமுழுக்கு யோவானிடம் எழுப்புகிறார்கள். இவர்கள் ஒரு படபடப்புடன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். இவர்களின் படபடப்புக்குக் காரணம்? யோவான் கூறிய வார்த்தைகள்.
"இறைவன் வருகிறார். சந்திக்கத் தயாராகுங்கள்." என்ற தொனியில் யோவானின் குரல் பாலைவனத்தில் ஒலித்ததாக போன வாரம் நற்செய்தியில் வாசித்தோம். இறைவனைச் சந்திக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று யோவானைச் சுற்றி இருந்த மக்கள் தேட ஆரம்பித்தனர்.
இந்தக் கேள்விக்கு பதில் தேடு முன்பு, திருமுழுக்கு யோவானைச் சுற்றி நின்ற கூட்டத்தில் இருந்தவர்கள் யார் என்ற ஒரு அலசல். மக்கள், வரி வசூலிப்பவர்கள், வீரர்கள் என்று மூன்று குழுக்களைப் பற்றி நற்செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு முக்கிய குழுவைப் பற்றி இன்றைய நற்செய்தியில் விவரங்கள் இல்லை. ஆனால், இவர்கள் கட்டாயம் அந்தக் கூட்டத்தில் இருந்திருக்க வேண்டும். யார் இவர்கள்? மதத் தலைவர்கள். யோவானின் புகழ் பரவி வந்ததை இவர்களும் அறிவர். யார் இந்த மனிதர்? என் இவரைத் தேடி அதுவம் பாலைவானத்திற்கே மக்கள் போகிறார்கள்? என்ற தங்கள் கேள்விகளுக்கு விடை தேடி மதத் தலைவர்களும் அங்கு வந்திருந்தனர்.
இந்த கூட்டத்தில் யோவான் இறைவனின் வரவை, இறைவன் வார்த்தையை எடுத்துக் கூறுகிறார். இடித்துக் கூறுகிறார். யோவான் சொன்னதைக் கேட்ட மக்கள், வரி வசூலிப்பவர்கள், வீரர்கள் இவர்கள் நடந்து கொண்டது ஒரு விதம். மதத் தலைவர்கள் நடந்து கொண்டது வேறு ஒரு விதம். இந்த வித்தியாசத்தை ஒரு உதாரணத்தின் வழியே விளக்க முயல்கிறேன்.
நல்லதொரு கண்ணாடி முன் நிற்கிறோம். நமது உருவம் அதில் தெரிகிறது. கண்ணாடியில் தெரியும் உருவம் சரியில்லை என்றால் என்ன செய்வோம்? அந்த உருவத்திற்கு சொந்தக்காரரான நம்மைச் சரி செய்து கொள்வோம். தலை முடியை சரி செய்வோம், முகத்தைத் துடைப்போம். உருவம் சரியில்லை என்றால், அந்த உருவம் தெரியும் கண்ணாடியைத் துடைப்பதில்லை. கண்ணாடியில் தெரியும் உருவம் சரியில்லை என்றால், கோபத்தில் கண்ணாடியை உடைப்போமா? உடைத்தார்கள் அந்த மதத் தலைவர்கள்.
யோவான் வாழ்ந்த தவ வாழ்வு, அவரது போதனை எல்லாம் மதத் தலைவர்களின் முகமூடிகளைக் கிழித்து அவர்களது உண்மை உருவைக் காட்டும் கண்ணாடியாக இருந்தது. தங்கள் வாழ்வைச் சந்கடபடுத்தும் இந்த உண்மையை ஊமையாக்க ஒரே வழி? இந்தக் கண்ணாடியை உடைக்க வேண்டும். மதத்தலைவர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருநதார்கள்... உண்மையை ஊமையாக்க வேண்டும், உண்மை வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளை உடைக்க வேண்டும்.
மதத் தலைவர்களுக்கு மாறாக, தங்கள் வாழ்வின் உண்மை நிலையைக் காட்டிய யோவானிடம் மக்கள், வரி வசூலிப்பவர்கள், வீரர்கள் மீட்படையும் வழி கேட்டார்கள். தன்னிலை அறிவது, உணர்வது மீட்புப் பாதையில் நாம் எடுத்து வைக்கும் முதல் அடிகள். இந்தத் தேடலைக் கூறும் நற்செய்திக்குச் செவிமடுப்போம்.
லூக்கா நற்செய்தி 3: 10-18 
ஏக்கம் நிறைந்த கேள்வி: நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நாங்கள் இறைவனைச் சந்திக்க என்ன செய்யவேண்டும்? "சாக்குத் துணி அணிந்து, சாம்பல் பூசி, சாட்டைகளால் உங்களையே அடித்துக் கொண்டு கடும் தவம் செய்யுங்கள்." யோவான் இப்படி சொல்வார் என்று எதிர்பார்த்திருந்தனர் அந்த மக்கள். ஏனெனில் யோவானே அத்தகைய கடும் தவங்களைச் செய்து வருகிறவர். ஆனால், யோவான் கூறிய பதில் மிக எளியது.
உண்மை எங்கே என்று கேட்டு கேட்டு பல ஆயிரமாயிரம் மைல்கள் பயணம் மேற்கொண்ட ஒருவர், இறுதியில் அந்த உண்மை தன் வீட்டு வாசலில் இத்தனை நாட்களாய்க் காத்துகிடந்ததைக் கண்டதாகக் கதை உண்டு. பெரிய, பெரிய தத்துவங்கள் வழியாக இறைவனைத் தேடிக்கொண்டிருக்கும் போது, அவர் குழந்தையாக வந்து நம் மடியில் அமர்வதில்லையா? யூதர்கள் பல நூறு ஆண்டுகள் தேடிய அந்த இறைவன் ஒரு மாட்டுத் தொழுவத்தில் வந்து பிறந்த போது, பெரும் அறிஞர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லையே, மாறாக ஏழை இடையர்கள்தானே அடையாளம் கண்டனர். அதுபோலத்தான் இதுவும்.

மீட்படைய என்ன செய்ய வேண்டும்?
மலையை வில்லாக வளைக்க வேண்டாம்.
மணலைக் கயிறாகத் திரிக்க வேண்டாம்.
இல்லாதவரோடு பகிர்ந்து வாழுங்கள்.
உள்ளதைக் கொண்டு திருப்தி அடையுங்கள்.
பேராசைப் படாதீர்கள். யாரையும் ஏமாற்றாதீர்கள்.

மேடுகளைக் குறைத்துவிடுங்கள், பள்ளங்களை நிரப்புங்கள், கொணலானத்தை நேராக்குங்கள் என்று போன வார நற்செய்தியில் கேட்ட போது, இந்த வாரம் சமுதாய மேடு பள்ளங்களைப் பற்றி சிந்திப்போம் என்று சொல்லியிருந்தேன். உள்ளதைக் கொண்டு திருப்தியடைந்து, பேராசைப்படாமல், யாரையும் ஏமாற்றாமல், பகிர்ந்து வாழும் ஒரு வாழ்வை எல்லாருமே மேற்கொண்டால், மேடு பள்ளமே இருக்காதே. நாம் வாழும் இந்த 21 ஆம் நூற்றாண்டிற்கு யோவான் வந்தால், அவரிடம் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டால்... மீண்டும் இதே அடிப்படையான, எளிமையான  பதில்கள்தாம் வரும். வாழ்வின் அடிப்படையான, எளிமையான உண்மைகளைக் காண குழந்தை மனம் ஒன்று வேண்டுமென குழந்தை இயேசுவிடம் வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.