2009-12-11 15:33:26

வியட்நாமின் அரசுத் தலைவர் திருத்தந்தையைச் சந்தித்தார்


டிச.11,2009 கம்யூனிச நாடான வியட்நாமின் அரசுத் தலைவர் Nguyen Minh Trietஐ இவ்வெள்ளியன்று காலை திருப்பீடத்தில் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட் சந்தித்து உரையாடினார்.
வத்திக்கானுக்கும், வியட்நாமுக்குமிடையே முழு அரசியல் உறவை உருவாக்குவது குறித்தும், திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட் வியட்நாம் நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு நாட்டு உயர்மட்டக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இத்தாலியின் Correira della Sera பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருந்த வியட்நாம் அரசுத் தலைவர், இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக அறிவித்திருந்தார். வியட்நாம் அரசுத் தலைவருக்கும், திருத்தந்தைக்கும் இடையே இவ்வெள்ளி க்காலை திருப்பீடத்தில் இடம் பெற்ற சந்திப்பின்போது, வியட்நாம் நாட்டு அடையாளமான தாமரைப் பூ பின்னப்பட்ட சில்க் துணி ஒன்றையும், அழகிய ஓவியம் வரையப்பட்ட பீங்கான் பூ ஜாடி ஒன்றையும் திருத்தந்தைக்கு அரசுத்தலைவர் வழங்க, பாப்பிறை பதக்கம் ஒன்றை வியட்நாம் அரசுத் தலைவருக்கு வழங்கினார் திருத்தந்தை.All the contents on this site are copyrighted ©.