2009-12-10 15:32:53

கியூப சமய சுதந்திரம் நம்பிக்கை தருவதாக உள்ளது - திருத்தந்தை


டிச.10,2009 மற்ற நாடுகளைப் போலவே உலகளாவிய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள கியூபாவும் உறுதியான அறநெறி கோட்பாடுகளின் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டிய உடனடி தேவையை அதிகமாகக் கொண்டிருக்கின்றது என்று இவ்வியாழனன்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கியூப நாடு, பொருளாதார நெருக்கடிகளோடு, இயற்கைப் பேரிடர்கள், பொருளாதாரத் தடைகள் போன்றவற்றையும் எதிர்நோக்குகின்றது என்றுரைத்த திருத்தந்தை, பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்பும் நடவடிக்கைகள், மனிதனையும் அவனது உரிமைகளையும் அவனது பொருளாதார மற்றும் ஆன்மீக நலன்களையும் மையம் கொண்ட ஒழுக்கநெறிக் கொள்கைகளின் அடிப்படையில் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திருப்பீடத்துக்கான கியூப நாட்டுப் புதிய தூதுவர் எத்வார்தோ தெல்காதோ பெர்முடெசிடமிருந்து Eduardo Delgado Bermúdez நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, அந்நாடு, அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் கொண்டிருந்த இறுக்கமான உறவுகளில் சில நல்ல மாற்றங்கள் தெரியும் இவ்வேளையில், இது புதிய வாய்ப்புகளுக்கான பாதையைத் திறந்து விடும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

கியூப கத்தோலிக்கத் திருச்சபை அந்நாட்டின் பாதுகாவலியான பிறரன்பு மாதா திருவுருவம் கண்டுபிடிக்கப்பட்டதன் நான்காம் நூற்றாண்டை 2012ம் ஆண்டில் சிறப்பிப்பதற்குத் தயாரித்து வருவது பற்றியும் குறிப்பிட்ட அவர், அண்மை ஆண்டுகளாக அந்நாடு அனுபவித்து வரும் சமய சுதந்திரம் தொடர்ந்து காக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

மனித உயிர் தாயின் கருவறை முதல் அது இயற்கையான இறப்பை அடையும் வரை காப்பாற்றப்படுதல் உள்ளிட்ட மனித மற்றும் ஆன்மீக ரீதியான நன்னெறி மதிப்பீடுகள், ஒவ்வொருவருக்கும், குறிப்பாக இளையோருக்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியது இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றது என்றும் புதிய தூதுவரிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.