2009-12-10 15:35:32

ஒரு குரு, குறைவாகச் செபிக்கத் தொடங்கும் பொழுது அவரது சொந்த விசுவாசம் பலவீனமடைகின்றது - திருப்பீட குருக்கள் பேராயத் தலைவர்


டிச.10,2009 ஒரு குரு, குறைவாகச் செபிக்கத் தொடங்கும் பொழுது அவரது சொந்த விசுவாசம் பலவீனமடைகின்றது மற்றும் அவரைச் சார்ந்துள்ள கிறிஸ்தவ சமூகம் துன்புறுகின்றது என்று திருப்பீட குருக்கள் பேராயத் தலைவர் கூறினார்.

உலகின் குருக்கள் அனைவருக்கும் செபத்தின் முக்கியத்துவம் குறித்து கடிதம் எழுதியுள்ள திருப்பீட குருக்கள் பேராயத் தலைவர் கர்தினால் க்ளவ்தியோ ஹூயூம்ஸ் குருக்களின் செப வாழ்வு உறுதியானதாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

குருவின் வாழ்க்கையில் செபம் மைய இடத்தை ஆக்ரமிக்க வேண்டியது அவசியம் என்று, அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கர்தினால், இதனைப் புரிந்து கொள்வது கடினம் அல்ல, ஏனெனில், இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் அவரோடு நெருங்கிய உறவு கொள்வதற்கு செபமே காரணமாக அமைந்தது என்றும் கூறியுள்ளார்.

செபம் குறையும் போது விசுவாசமும் குறைகின்றது, மறைப்பணியின் சாரமும் பொருளும் தனது பண்பை இழக்கின்றது என்பதை அனைவரும் அறிவோம் என்றும், இதனால் குருவானவர் தனது அன்றாடப் பணியில் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் குறைவாகவே அனுபவிப்பார் என்றும் கர்தினாலின் கடிதம் கூறுகின்றது.

இந்த குருக்கள் ஆண்டில், உரோம் மேரி மேஜர் பசிலிக்காவில், ஒவ்வொரு மாதத்தின் முதல் வியாழக்கிழமையன்று மாலை நான்கு மணிக்குத் திருநற்கருணை ஆராதனை இடம் பெறுகின்றது, அதில் பல விசுவாசிகள் குருக்களுக்காக மகிழ்ச்சியுடன் செபிக்கின்றார்கள் என்பதையும் கர்தினால் ஹூயூம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
All the contents on this site are copyrighted ©.