2009-12-10 15:33:49

திருத்தந்தை, கபோன் குடியரசுத் தலைவர் சந்திப்பு


டிச.10,2009. இவ்வியாழனன்று ஆப்ரிக்க நாடான கபோன் Gabon குடியரசுத் தலைவர் Ali Bongo Ondimba வைத் திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இவ்விரு தலைவர்களுக்கிடையே தனியே இருபது நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பிற்குப் பின்னர் பரிசுப் பொருட்களும் பரிமாறப்பட்டன.

Gabon குடியரசுத் தலைவர் திருத்தந்தையை சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் டொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார்.

இச்சந்திப்புகளில், அண்மையில் இறந்த Gabon முன்னாள் குடியரசுத் தலைவர் எல் ஹஜ் ஓமர் போங்கோ ஒன்திம்பாவும் நினைவுகூரப்பட்டார். இவர் தற்போதைய தலைவரின் தந்தையாவார். மேலும், திருப்பீடத்தி்ற்கும் காபோனுக்குமிடையே நிலவும் நல்லுறவுகள், தலத்திருச்சபை, நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு, குறிப்பாக கல்விக்கு ஆற்றிவரும் பணிகள் பற்றியும் பேசப்பட்டன.
All the contents on this site are copyrighted ©.