2009-12-09 17:01:42

காற்று மண்டலம் மாசு படுவதைக் காட்டிலும் நமது மனங்கள் மாசடைந்து வருகின்றன - திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட்


டிச.09,2009 நகரங்களின் காற்று மண்டலம் மாசு படுவதைக் காட்டிலும் அதிக ஆபத்தான வகையில் இன்று நமது மனங்கள் மாசடைந்து வருகின்றன இதனால் நமது உள்ளங்கள் சோர்வடைந்து ஏனைய மனிதரை வெறும் உடல்ரீதியாக மட்டும் பார்க்கும் கண்ணோட்டம் அதிகமாகி வருகிறதென்று திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் கூறினார். இச்செவ்வாயன்று மாலை ரோமை நகரின் மையத்தில் உள்ள அன்னைமரியின் திரு உருவத்திற்கு மலர்களை அணிவித்து மரியாதை செய்யும் வேளையில், நகரங்களில் நிலவும் மாசு படிந்த சூழலையும், மரியாவின் மாசற்ற தன்மையையும் ஒப்பிட்டு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.ஒவ்வொரு கிறிஸ்தவ நகரத்திலும் மரியாவின் பிரசன்னம் நம்பிக்கை தருவதாய் உள்ளது, இன்றைய உலகில் நம்பிக்கை இழக்கும் வண்ணம்  நாம் தினமும் எதிர்கொள்ளும் பல செய்திகளின் மத்தியில் "கலங்காதீர், இயேசு தீமையை வென்றுள்ளார்" என்ற அவரது செய்தி நம் அனைவருக்கும் நம்பிக்கையைத் தருகின்றது என்று திருத்தந்தை கூறினார். ரோமை நகரம் உட்பட உலகின் பல்வேறு நகரங்களில் மக்களின் கவனத்தை கவராத வண்ணம் பலர் நல்ல செயல்களைச் செய்து வருகிறார்கள், இவர்களைப் பற்றியச் செய்திகள் எந்த பத்திரிக்கையிலும் வருவதில்லை. உலகில் நடக்கும் பல அநீதச் செயல்களைக் கண்டு கண்டனம், கவலை இவைகளை மட்டும் எப்போதும் கூறிவருவதற்கு பதில், இவர்கள் அந்தத் தீய போக்குகளுக்கு மாற்றாக நல்லவைகளைச் செய்வது அன்னை மரியாவை பின்பற்றும் ஒரு மனநிலை என்றும் திருத்தந்தை கூறினார். ஒவ்வொரு ஆண்டும் கன்னி மரியாவின் அமல உற்பவ திருநாளன்று ரோமைநகரின் மையத்தில் உள்ள இஸ்பானிய திறந்த வெளி அரங்கிற்கு சென்று அங்குள்ள அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு தங்கள் கரங்களால் ஆசீர் அளிக்கப்பட்ட மலர்கூடை ஒன்றை அன்னையின் பாதத்தில் வைப்பது திருத்தந்தையர் கடைப்பிடித்து வரும் ஒரு வழக்கம்.







All the contents on this site are copyrighted ©.