2009-12-08 17:36:45

விவிலியத் தேடல்:


கிறிஸ்மஸ் காலம் இது. கிறிஸ்மஸ் என்றதும் சிறுவயது முதல் இன்று வரை ஏன் மனதில் எழும் முதல் எண்ணங்கள்... அலங்காரம், பலகாரம், புத்தாடை, குடில், கிறிஸ்மஸ் தாத்தா, பரிசுகள்... பொதுவாகவே வாழ்வில் பரிசுகள் மகிழ்வைத் தரும். அதுவும் எதிர்பாராத விதமாக, எதிர்பாராத நபரிடமிருந்து, எதிர்பாராத நேரத்தில் வரும் பரிசுகள் மிக அதிக மகிழ்வைத் தரும்.
இப்படி ஆனந்த அதிர்ச்சியளிக்கும் பரிசுகளைப் பெறுவதும், தருவதும் பல நாடுகளில் கிறிஸ்மஸ் காலத்தில் பின்பற்றப்படும் ஒரு பழக்கம். கிறிஸ்மஸ் தாத்தா என்றும் சாந்தா கிளாஸ் என்றும் பலவாறாக அழைக்கப்படும் புனித நிக்கொலாஸ் ஆரம்பித்து வைத்ததாக, அல்லது அவர் நினைவாக இந்த பழக்கம் நிலவுகிறதென சொல்லப்படுகிறது. டிசம்பர் 6ஆம் தேதி புனித நிக்கொலாஸ் திருநாளைப் பற்றி ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்து கொண்டது அன்புள்ளங்களுக்கு நினைவிருக்கலாம்.
பரிசுகள், எதிர்பாராத விதமாக வரும் பரிசுகள் அதிலும் முற்றிலும் எதிர்பாராத அளவு பெரு மழையெனக் கொட்டும் பரிசுகள் நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்து விடும். லாட்டரியில் பம்பர் பரிசுகள் விழுந்ததெனும் செய்தி கேட்ட எத்தனையோ பேருக்கு 'ஹார்ட் அட்டாக்' வந்ததாகக் கூட செய்திகள் வாசித்திருக்கிறேன்.
இது சம்பந்தமாக முன்பு ஒரு முறை கேட்ட கதை ஒன்று இது: நம் கதையின் நாயகன்? நிக்கொலாஸ் என்று வைத்துக் கொள்வோம். 90 வயதைத் தாண்டிய நிக்கொலாஸ் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அந்த சமயத்தில் லாட்டரியில் அவருக்கு பரிசு விழுந்ததாகச் செய்தி வருகிறது. பரிசுத் தொகை கொஞ்ச நஞ்சமல்ல. 10 கோடி ரூபாய். அந்தச் செய்தியை அவரிடம் எப்படி சொல்வதென்று குடும்பத்தினர் திகைத்தனர். அந்தச் செய்தியைக் கேட்டு அவருக்கு ஏதாவது ஆகிவிடக் கூடாதென்ற கரிசனை. பக்குவமாக அவருக்கு அந்தச் செய்தியைச் சொல்ல அந்த ஊர் பங்கு தந்தையை அக்குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். பங்கு தந்தை வயதில் ஓரளவு முதிர்ந்தவர், எனவே 90 வயதைத் தாண்டிய நிக்கொலாசிடம் பக்குவமாய் செய்தியைச் சொல்வார் என்ற நம்பிக்கை அந்த குடும்பத்தினருக்கு. பங்கு தந்தையும் மருத்துவ மனைக்கு வந்து நிக்கொலாசிடம் பல விஷயங்களைப் பேசுகிறார். குடும்பத்தினர் சுற்றி இருந்தனர். லாட்டரிகளைப் பற்றி, அதில் பலருக்குக் கிடைக்கும் அதிர்ஷ்டங்களைப் பற்றி பேச்சு எழுகிறது. பேச்சு வாக்கில், பங்கு தந்தை நிக்கொலாசிடம், "சரி, உங்களுக்கு திடீர்னு லாட்டரியில் பத்து கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்கிறார். படுத்திருந்த நிக்கொலாஸ் புருவங்களை உயத்தி, சுற்றிலும் பார்க்கிறார். குடும்பத்தினரும், பங்கு தந்தையும் அவரது முகத்தை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். பிறகு, ஒரு புன்முறுவலுடன் நிக்கொலாஸ், "சும்மா வெளையாடாதீங்க சாமி." என்று சொல்லிவிட்டு மற்ற விஷயங்களைப் பேச ஆரம்பிக்கிறார். பங்கு தந்தை விடுவதாகத் தெரியவில்லை. "ஒரு பேச்சுக்கு அப்படி நினைப்போமே... உங்களுக்கு லாட்டரியில் பத்து கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?" என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறார். கொஞ்ச நேர அமைதிக்கு பின், நிக்கொலாஸ், "அதுல ஒரு 5 கோடியை பங்கு கோவிலுக்கு எழுதி வைத்துவிடுவேன்." என்று கூறுகிறார். இதைக் கேட்கும் பங்கு தந்தை மயங்கி விழுகிறார்.
அன்பர்களே, பரிசுகள், அதுவும் எதிபாராத விதமாக வரும் பரிசுகள் எதையும் செய்து விடும்.
இயேசுவின் சீடர்களுக்கு, அவர்கள் சீடர்களாவதற்கு முன்னால், இப்படி பரிசு மழையில் நனைந்த, அல்லது பரிசு வெள்ளத்தில் மூழ்கிய ஒரு அனுபவம் ஏற்பட்டது. அதைக் கூறுவது லூக்கா நற்செய்தி மட்டுமே. முதலில் இந்தப் புதுமை நடந்த சூழலைப் பற்றி லூக்கா நற்செய்தியிலிருந்து கேட்போம்.

லூக்கா நற்செய்தி 5 : 1-3
ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.

இயேசு ஏரிக்கரை ஓரமாய் நிற்கிறார். அவரது மழைப் பொழிவைக் கேட்டு மனதைப் பறிகொடுத்தவர்கள் இன்னும் பலரைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தனர். எனவே திரளான மக்கள் இயேசுவை நெருக்கிக் கொண்டிருந்தனர் என்று நற்செய்தி சொல்கிறது. அப்போது இயேசு புதுமையை ஆரம்பிக்கிறார். சீமோனின் படகில் இயேசு ஏறியது முதல் புதுமை. இயேசுவைப் பற்றி முன்பின் அறியாவதர் சீமோன். அவர் வழக்கம் போல் மீன் பிடிக்க வந்தவர். அதுவும் முந்திய இரவு முழுவதும் உழைத்தும் ஒரு பயனையும் காணாமல், மனம் நொந்து போய் அமர்ந்திருந்தார் அவர். மீன் பிடிப்பு இல்லையென்றால்... வருமானம் இல்லை, வீட்டில் உணவுக்கு வழியில்லை... இப்படி தன் சொந்தக் கவலையில் மூழ்கியிருந்த சீமோனின் படகு அசைகிறது. நிமிர்ந்து பார்க்கும் சீமோனுக்கு ஆச்சரியம், கொஞ்சம் கோபம் கூட இருந்திருக்கும். முன்பின் தெரியாத ஒரு புது மனிதர் அவரது படகில், அவரது உத்தரவு இல்லாமல் ஏறி அமர்ந்திருந்தார்.
முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர், முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல், நம் வாழ்வில் நுழைந்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கலாம். திருவருகைக் காலம் இது போன்ற வருகைகளை நினைத்துப் பார்க்க ஒரு நல்ல காலம். இந்த வருகை நல்ல வருகை என்றால் வாழ்நாள் முழுவதும் அழகான ஒரு நட்புறவு உருவாகும். இந்த வருகை ஒரு குறுக்கீடாக அமைந்தால் வாழ்நாள் முழுவதும் பிரச்சனைகளை உருவாக்கும். உரிமையோடு சீமோனின் படகில் நுழைந்த இயேசு, சீமோனின் வாழ்விலும் நுழைந்தார். புதுமையை ஆரம்பித்து வைத்தார்.
தன் படகிலிருந்து இயேசு போதித்தவைகளைச் சீமோனும் கேட்டார். தன் கவலைகளில் மூழ்கியிருந்த சீமோனின் உள்ளத்தில் இயேசுவின் வார்த்தைகள் மாற்றங்களை உருவாக்க ஆரம்பித்தன. போதித்துவிட்டு இயேசு அவர் வழியே போயிருந்தால், புதுமை தொடர்ந்திருக்காது. தன் சொந்த பயனுக்காக மற்றவரைப் பயன்படுத்திவிட்டு பிறகு மறைந்து போகும் பழக்கம் இயேசுவுக்குக் கிடையாது. இயேசு சீமோனின் படகில் ஏறியது மட்டுமல்லாது அதை கரையிலிருந்து ஏரிக்குள் கொண்டு செல்லக் கட்டளையிடுகிறார். முன்பின் தெரியாத தனது சொல்லுக்குக் கட்டுப்பட்ட சீமோனின் எளிய, வெள்ளை உள்ளம் இயேசுவைக் கவர்ந்தது. தங்கள் சொல்லுக்குக் கட்டுப்படும் கள்ளமற்ற உள்ளங்களைத் சொந்த லாபங்களுக்குப் பயன்படுத்தும் தலைவர்களை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். இயேசுவின் எண்ணங்கள் வேறுபட்டவை. சீமோனை இன்னும் தன் வயப்படுத்த, அவர் வழியாக இன்னும் பலரைத் தன் வயப்படுத்த நினைத்தார் இயேசு. ஏரியில் வலைகளை வீசச் சொன்னார்.

லூக்கா நற்செய்தி 5 : 4-7
அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.

சீமோனும், அவரைச் சுற்றியிருந்தோரும் ஆச்சரியம், எரிச்சல் அடைந்திருக்கலாம். மீன்பிடிக்கும் தொழிலில் பல ஆண்டுகள் ஊறி, அந்தத் தொழிலில் தேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களது திறமையையும், அனுபவத்தையும் கேலி செய்வது போல் இருந்தது இயேசுவின் கட்டளை. சீமோன் நினைத்திருந்தால், யேசுவிடம் இப்படி சொல்லியிருக்கலாம். "ஐயா, மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்ததால், படகில் அமர்ந்து போதிக்க நினைத்தீர்கள். நீங்கள் சொன்னதைக் கேட்டோம். நீர் வந்தது மக்களுக்குப் போதிக்க. அதை முடித்து விட்டீர். நன்றி. இந்தப் பகல் நேரத்தில் நாங்கள் வலை வீசினால், பார்ப்பவர்கள் எங்களை பைத்தியக் காரர்கள் என்று சொல்வார்கள். மீன் பிடிப்பு பற்றி தெரிந்து கொண்டு வந்து பிறகு எங்களை அதிகாரம் செய்யலாம். இப்போதைக்கு, நீர் உம் வழியே போகலாம்." 
மாறாக, கள்ளம் கபடமற்ற சீமோன் தன் மனதில் பட்டதைச் சொல்கிறார்.          பல நல்ல பாடங்கள் இந்தக் கூற்றில் புதைந்துள்ளன. உண்மையை எந்த வித பூச்சும் இல்லாமல் சொல்வது. ஒருவரது பின்னணியைப் பார்ப்பதிலும், அவர் சொல்வதற்கு மதிப்பு கொடுப்பது... இப்படி பல பாடங்கள்.
மீன்பிடிப்பைக் கண்டதும், சீமோனின் செயல் ஆச்சரியத்தைத் தருகிறது. மாபெரும்
புதுமை கண்முன்னே நடக்கும் போது, "என் கண்ணையே, காதுகளையே என்னால் நம்ப முடியவில்லையே." "நான் காண்பதென்ன கனவா, நனவா?" என்றெல்லாம் சொல்லியிருக்கிறோம் இல்லையா? உணர்ச்சிகள் மேலிடும்போது, வார்த்தைகள் வருவது அபூர்வம். சீமொனுக்கும் அப்படி ஓர் உணர்வு மேலோங்கியதால் அப்படி பேசியிருக்கலாம்.

லூக்கா நற்செய்தி 5 : 8-11
இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

சீமோன் இப்படி நடந்துகொண்டதற்கு நான் எண்ணும் ஒரே காரணம்... இயேசுவின் போதனை. அவர் தன் படகில் அமர்ந்து போதித்த போது, சீமோன் தன் கவலைகளை மறந்து இயேசுவின் போதனைகளில் ஆழ்ந்து போனார். இந்த மனிதர் நாள் முழுவதும், ஏன் தன் வாழ்நாள் முழுவதும் இந்த படகில் அமர்ந்து போதித்துக் கொண்டே இருந்தாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போன்று இருந்தது சீமோனுக்கு. தன் வாழ்வு முழுவதையும் இந்த மனிதரோடு செலவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்...
சீமோனின் இந்த சிந்தனைகளை அறிந்தவர் போல் இயேசு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
இறுதியாக ஒரு சிந்தனை. மீன்பிடிப்பைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் இந்த நேரத்தில், நமது இந்தியக் கடல்களோடு போராடும் பலரை நினைத்து பார்க்க வேண்டும். இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழும் இவர்கள், தேவைக்கு அதிகமாக மீன் பிடிப்பதில்லை. மீன் பெருக்கம் நிகழும் காலங்களில் கடலுக்குப் போவதில்லை. இப்படி கட்டுப்பாட்டுடன் தங்கள் தொழிலைத் தொடர்ந்து வரும் இவர்களது வாழ்வில், கடந்த இருபது ஆண்டளவாய் பல வியாபார நிறுவனங்கள் நிகழ்த்தும் கொடூரங்கள் அனைவருக்கும் தெரிந்தது. மின்விசைப் பொருத்திய பெரும் படகுகளைக் கொண்டு அவர்கள் செய்யும் அராஜகம் பல நூறு மீனவர்களின் வாழ்வின் அடி வேர்களை அறுத்துவிட்டன.
மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் லட்சகணக்கான ஏழைகளை இறைவன் காக்க வேண்டும், அவர்களது தொழிலுக்கேற்ற பலனை அவர்கள் பெற வேண்டுமென இறைவனை வேண்டுவோம். இயேசுவின் பிறப்பை எதிநோக்கியிருக்கும் நாம், சீமோனைப் போல் இறைமகனை நம் வாழ்வில் ஏற்க, நம் இதயக் கதவுகளைத் திறப்போம்.All the contents on this site are copyrighted ©.