2009-12-07 16:44:48

கோப்பன்ஹாகன் வெப்பநிலை மாற்ற மாநாடு
டிச.07,2009 அன்பர்களே, 'இந்தியாவின் பாதிப்பகுதி இன்னும் சில ஆண்டுகளில் பாலைவனமாக மாறிவிடும்!' என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதிலும், குறிப்பாக பனி படர்ந்த காஷ்மீர் மாநிலம் வறண்டு பாலைநிலமாக மாறிவிடும் என்று சொன்னால் யார்தான் அதை நம்புவார்கள். ஆனால், அண்மையில் செயற்கைக்கோள் உதவியோடு வெளிவந்திருக்கும் ஓர் ஆய்வு முடிவு இதனை நம்ப வைக்கின்றது. உலகில் உள்ள நிலப்பகுதிகளில் 2.4 விழுக்காடுதான் இந்தியா. ஆனால், உலகில் உள்ள மக்கள் தொகையில் 16.7 விழுக்காட்டினர் இந்தியாவில் வாழ்கின்றனர். எனவே, நிலத்தின் பயன்பாடும் அதிகம். இதுமட்டுமின்றி உலகிலுள்ள மேய்ச்சல் நிலங்களில் அரை விழுக்காடுதான் இந்தியாவில் உள்ளது. ஆனால், உலகிலுள்ள கால்நடைகளில், 18 விழுக்காடு கால்நடைகள் இந்தியாவில் இருக்கின்றன. இந்தக் குறைந்த அளவு மேய்ச்சல் நிலத்தை நம்பித்தான் இவ்வளவு பெரிய கால்நடைக் கூட்டம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், நிலம் சார்ந்த வளங்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன என்று ஓர் ஆய்வுக் கட்டுரையில் வாசித்தோம்.

இலங்கையின் சுற்றுச் சூழல் சீர்கேடு நிலைக்கு எடுத்துக்காட்டுக்கு ஒன்றை மட்டும் குறிப்பிட வேண்டுமானால், இராணுவ நடவடிக்கை மூலம், வவுனியா – மன்னார் மாவட்டங்களின் இயற்கைக் காடுகளின் ஏறக்குறைய 1300 ஏக்கர் பரப்பளவு அழிக்கப்பட்டு விட்டது. மேலும், இறுதி யுத்தத்திற்குப் பின்னர் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கான அகதி முகாம்களை உருவாக்குவதற்கென கிட்டத்தட்ட 2000 ஏக்கர் பரப்பளவான இயற்கைக் காடுகள் எவ்வித மாற்று நடவடிக்கையும் எடுக்காமல் அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றன என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. மேலும், சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் வங்கதேசத்திலும் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. நாட்டின் பல பாகங்கள் ஏற்கனவே கடல் அரிப்புக்கு உள்ளாகி வருவதாக அந்நாட்டு நிதியமைச்சர் அப்துல் முஹித் குறிப்பிட்டுள்ளார். இதனால் எதிர்வரும் ஆண்டுகளில் அந்நாட்டிலிருந்து இரண்டு கோடி பேர் இடம் பெயர நேரிடலாம். அவர்களுக்கு பணக்கார நாடுகள் தமது கதவுகளைத் திறந்துவிட வேண்டும் என்றும் முஹித் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தப் பருவநிலை மாற்றத்தால் கடந்த 30 ஆண்டுகளில் தாவரம், விலங்கு சிற்றினங்களின் பரவல்களில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால், 2050ம் ஆண்டுக்குள் 15 முதல் 37 சதவீத உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது. ஜெர்மனியில் 25 விழுக்காடும், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் 70 விழுக்காடும், இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் 20 முதல் 35 விழுக்காடும் தேனீக்கள் அழிந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. அதனால் கடல் மட்டங்களும் உயர்ந்து வருகின்றன. பனிப்பாறைகள் கொண்ட அண்டார்டிக் தென் துருவப் பகுதியில் ஆய்வு செய்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தற்போது இருக்கும் நிலையிலே பூமி தொடர்ந்து வெப்பமடைந்து வந்தால், அதன் அடர்ந்த பனி உருகி 2100ம் ஆண்டுக்குள் உலக அளவில் கடலின் நீர்மட்டம் நான்கு அடி ஆறு அங்குலம் உயரும்; இந்த நூற்றாண்டுக்குள் 25 முதல் 28 செ.மீ. உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. SCAR என்ற அண்டார்டிக் ஆய்வு குறித்த விஞ்ஞானிகள் அமைப்பு இதனை நடத்தியது. இதனைச் சேர்ந்த நூறு முக்கிய விஞ்ஞானிகள் எட்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னான அண்டார்டிக்காவின் வரலாற்றை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவை மேலும் 200 விஞ்ஞானிகள் பரிசீலனையும் செய்துள்ளனர்.

விஞ்ஞானிகள் இது போன்ற அபாயச் சங்கை தொடர்ந்து ஊதி வருகின்றனர். பூமி வெப்பமடைந்து வருவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்ற கியோட்டோ சர்வதேச ஒப்பந்தம் 2012ம் ஆண்டு முடிவடையும் நிலையில், ஐக்கிய நாடுகள் நிறுவனம் மற்றுமொரு உலக மாநாட்டை இத்திங்களன்று துவக்கியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இடம் பெறும் முக்கிய நிகழ்வாகச் சொல்லப்படும் இம்மாநாடு டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹாகன், பெல்லா மையத்தில் தொடங்கியுள்ளது. இம்மாதம் 18ம் தேதி வரை நடைபெறும் இந்த இரண்டு வார மாநாட்டில், வத்திக்கான் உட்பட 192 நாடுகளின் சுமார் பதினைந்தாயிரம் பிரதிநிதிகளும், நூறு உலகத் தலைவர்களும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி 2 நாட்களில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், சீன அதிபர் வென்ஜியாபோ உள்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.

இந்த கோப்பன்ஹாகன் மாநாடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இத்திங்களன்று 45 நாடுகளிலுள்ள 56 பத்திரிகைகளில் இதே தலைப்பு பற்றிய தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. பெரும் ஆபத்தை எதிர்நோக்கி மக்கள் இருப்பதாகவும், ஒரு சேர முயற்சி இல்லையெனில் புவிக்கோளம் நாசமாகும் என்றும் தலையங்கத்தின் மூலம் ஒரு சேர விழி்ப்புணர்வு ஏறபடுத்தியுள்ளன. இது குறித்து பேசிய இந்த மாநாட்டுக்கான ஐ.நா. குழுவின் செயல்திட்ட இயக்குனர் யுவோ தெ போயர் ( Yvo de Boer) , 17 ஆண்டுகள் முடிவுக்கு வராமல் இருக்கும் இந்த பிரச்னையை தீர்க்க இது நல்ல தருணம். ஒரே சாராம்சமான சரத்துக்கள் கொண்ட சட்ட திட்டம் உருவாக்கப்படும். உலக நாடுகள் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க முன் வரவேண்டும். அத்துடன் வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளுக்கு நிதி அளிக்கவும் முன்வரும் ஒரு திருப்பு முனையாக அமையும் என்று தெரிவித்தார்.

RealAudioMP3 இச்சனிக்கிழமை, இலண்டனில் சுமார் நாற்பதாயிரம் பேர் ஊர்வலம் மேற்கொண்டு, பிரிட்டன், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் கார்பன் வாயு வெளியேற்றத்தை 2020ம் ஆண்டுக்குள் 34 விழுக்காடு மட்டும் குறைக்கத் திட்டமிட்டால் போதாது, அதைவிட அதிக அர்ப்பணம் தேவை என்று கோரிக்கை எழுப்பியுள்ளனர். சமயத் தலைவர்களும் அரசுகளின் தலைவர்களுக்குத் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இஞ்ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் பேசிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இத்திங்களன்று கோப்பன்ஹாகனில் தொடங்கியுள்ள வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாடு பற்றி முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகளிடம் RealAudioMP3 பேசினார்.

இயற்கையில் கடவுளால் அமைக்கப்பட்ட சட்டங்கள் மதிக்கப்படவும் மனித வாழ்வின் அறநெறிக் கூறுகள் மீண்டும் கண்டுணரப்படவும் நன்மனம் கொண்ட அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக்க் கூறினார். ஏழைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறைகளைக் கருத்தில் கொண்டு இயற்கை வளங்கள் வரம்புடனும் பொறுப்புடனும் கையாளப்பட வேண்டும் என்றார்.

துருக்கியின் கிறிஸ்தவ ஒன்றிப்பு பிதாப்பிதா பர்த்தோலோமேயு (Bartholomew), அண்மையில் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, “இப்பூமிப்பந்தின் ஆன்மாவைக் காப்பாற்றுங்கள், இதற்கு எல்லாருமே தியாகம் செய்ய வேண்டும் என்றார். மேற்கத்திய உலகம் தியாகம் செய்யாத போது, வளரும் நாடுகள் மட்டும் தியாகம் செய்ய வேண்டுமென்று கேட்பது நியாயமாகத் தெரியவில்லை. நாம் தியாகம் செய்ய விருப்பமில்லாமல் இருக்கும் போது மற்றவர்களைத் தியாகம் செய்யச் சொல்வதற்கு ஒழுக்கரீதிப்படி எந்த அதிகாரமும் இல்லை என்று வலியுறுத்திப் பேசினார்.

இவ்வேளையில் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் அறிவிப்பு கொஞ்சம் நம்பிக்கை தருகின்றது. RealAudioMP3 இப்பூமியை வெப்பமடையச் செய்யும் கார்பன் வாயுக்களின் அடர்த்தியை 2020 ஆம் ஆண்டுக்குள் 20 முதல் 25 விழுக்காடு வரை குறைக்க இந்தியாவும், 40 முதல் 45 விழுக்காடு வரை குறைக்க சீனாவும் இசைவு தெரிவித்துள்ளன.

அன்பர்களே, தட்பவெப்பநிலை என்றால் என்ன? ஓர் இடத்தின் தட்ப வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாம் அனுபவிக்கும் சராசரியான கால நிலையைக் குறிப்பது. மழை, சூரிய ஒளி, காற்று, ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவையே ஓர் இடத்தின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் காரணிகள். பூமியில் பலவிதமான தட்பவெப்பநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதற்கு இரண்டு வகைக் காரணங்கள் உண்டு. ஒன்று இயற்கையாக ஏற்படுவது. இரண்டாவது மனிதனால் ஏற்படுவது.

இயற்கையாக ஏற்படுவதற்கான காரணங்களில், கண்டங்களின் விலகல், எரிமலைகள், கடல் நீரோட்டங்கள், நிலச்சரிவு போன்றை முக்கியமானவையாகும். பூமியின் சாய்மானம் என்பது, பூமி தனது சுற்றுப்பாதையில் 23.5 டிகிரி கோணத்தில் செங்குத்தான நிலையில் சாய்ந்திருக்கிறது. இந்தப் பூமியின் சரிவில் ஏற்படும் மாற்றங்கள் பருவகாலங்களின் தீவிரத்தன்மையில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அதிக சரிவு, கோடைக் காலங்களில் அதிக வெப்பத்தையும், குளிர்ந்த காலங்களில் அதிக குளிரையும் ஏற்படுத்துகின்றன. குறைந்த அளவு சாய்மானம் கோடையில் வெப்பத்தையும், குளிர்காலத்தில் குளிரையும் குறைக்கின்றன.

மனிதனால் ஏற்படும் கேடுகளை நாம் அடிக்கடி நமது வானொலிச் செய்திகளில் கேட்டு வருகிறோம். கிரீன்-ஹவுஸ் எனப்படும் “பசுமை இல்ல விளைவு” என்பது, பூமி சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது. இது பூமியின் நிலப்பரப்பை வெப்பமாக்குகிறது. இந்த ஆற்றல், வாயு மண்டலத்தினூடே கடந்து செல்கையில், இதன் சுமார் முப்பது விழுக்காடு சிதறுண்டுபோகிறது. பூமியிலிருந்தும், கடல் பரப்பிலிருந்தும் இந்த ஆற்றலின் ஒரு பகுதி, வாயு மண்டலத்திற்குள் பிரதிபலிக்கப்படுகிறது. வாயுமண்டலத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு விதமான போர்வை போர்த்தியது போன்று பரவியுள்ளன. இவைதான் ‘பசுமை இல்ல வாயுக்கள்’ (கிரீன்- ஹவுஸ் வாயுக்கள்) என்று அழைக்கப்படுகின்றன. மனிதனின் அதீத நடவடிக்கைகளால் இந்தக் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகமதிகமாக வாயு மண்டலத்திற்குள் விடப்படுகின்றன. இதன் விளைவாக, இந்தப் போர்வை தடிமனாகிக் கொண்டிருக்கிறது. இது ‘இயற்கையான கிரீன்ஹவுஸ் விளைவை’ பாதிக்கிறது. அதிகரிக்கப்பட்டு வரும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள், பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்கிறது. இந்த விளைவுதான் பொதுவாக 'உலகம் வெப்பமயமாதல்' அல்லது 'வெப்பநிலை மாற்றம்' என்று குறிப்பிடப்படுகிறது.

இதனைக் குறைப்பதற்கு வழிவகைகள் இல்லையா என்று கேட்கலாம். வழிவகைகள் இருக்கின்றன. அதனால்தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக, நிலக்கரி போன்ற எரிபொருட்கள் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்தல், சூரிய மற்றும் காற்று ஆதாரங்களைப் பயன்படுத்தல், மரங்களைப் பாதுகாத்தல், இன்னும் அதிகமான மரங்களை வளர்த்தல், மக்கிப் போகாத ப்ளாஸ்டிக் போன்ற பொருட்களின் கண்மூடித்தனமான பயன்பாட்டைத் தவிர்த்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தலாம்.

தீதில்லா உலகைக் காணும் கண்கள் பேறுபெற்றவை என்பார்கள். ஆனால் இன்று நாம் வாழும் பெருந்தீனிக் கலாச்சாரம், “விரைவாக வாழ்ந்து விரைவாகவே மறையும்” பண்பைக் கொண்டுள்ளது. இந்தக் கலாச்சாரத்தின் விளைவாக மண்ணும் மரமும் நீரும் காற்றும் நஞ்சாக மாறி வருகின்றன. வத்திக்கான் வானொலி அன்பர்களே, பூமி வெப்பமடைதலைக் குறைப்பதற்கான நமது பங்காக, மரங்களைப் பாதுகாத்தல், பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்தல் போன்ற சில செயல்களைச் செய்யலாம்.
All the contents on this site are copyrighted ©.