2009-12-05 16:31:12

ஞாயிறு சிந்தனை


ஒரு சந்தையில் நாம் நடந்து போவதாக கற்பனை செய்து கொள்வோம். அங்கே... "இறுதிநாள் நெருங்கியுள்ளது… ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்." என்று எழுப்பப்படும் குரல் ஒரு பக்கம். "இன்றே கடைசி நாள்... தள்ளுபடி விற்பனையில் பொருள்களை அள்ளிச் செல்லுங்கள்." என்று மற்றொரு குரல். இவ்விரு குரல்களுக்கும் போட்டி வந்தால், எந்த குரல் வெல்லும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். எந்தக் குரலைக் கேட்டு உடனே செயல்படுவோம் என்பதும் எல்லாருக்கும் தெரிந்த விஷயம். தள்ளுபடி விற்பனை பற்றி எழும் குரல், சந்தையில் மற்ற எல்லாக் குரல்களையும் தள்ளி விட்டு முன்னே வந்து நிற்கும். அந்தக் குரல் வரும் திசை நோக்கி முட்டி மோதிக்கொண்டு கூட்டம் அலைமோதும்.
அன்பர்களே, திருவருகைக் கால முதல் ஞாயிறன்று எதிர்பார்ப்பு என்ற கருத்தை மையமாக வைத்து சிந்தித்தோம். திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று, "தயாரிப்பு" என்பது நாம் எடுத்துக்கொள்ளும் மையக் கருத்து. விழாக்கள், கொண்டாட்டங்கள் என்று வந்தால் வியாபார உலகிலிருந்து, விளம்பர உலகிலிருந்து நாம் கற்றுகொள்ளக் கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன. ஒரு விழாவுக்குத் "தயாரிப்பு" என்பதில் போட்டி வந்தால், வியாபார உலகமும், அதற்குத் துணைநிற்கும் விளம்பர உலகமும் செய்யும் தயாரிப்புகளுக்கு முன்னால், மற்ற எல்லா உலகங்களும் தோற்றுவிடும். ஆன்மீக உலகம் இந்தப் போட்டியில் ஒரு வேளை கடைசியாக வரலாம், அல்லது போட்டியிலிருந்து காணாமலேயே போய்விடலாம். இப்படிப்பட்ட கழுத்தறுக்கும் போட்டியில் ஆன்மிகம் நுழைய வேண்டுமா என்பது வேறொரு கேள்வி. அதைப் பற்றி ஆராய இப்போது நேரமில்லை.

கிறிஸ்மஸ் எப்போது வந்தது? கிறிஸ்மஸ் இன்னும் வரவில்லை, டிசம்பர் 25 தான் வரும். அப்படியிருக்க “எப்போது வரும்” என்பதுதானே சரியான கேள்வி? ஏன் “எப்போது வந்தது” என்று தப்பான ஒரு கேள்வி? சொல்கிறேன். வியாபார உலகைப் பொறுத்தவரை, ஐரோப்பாவில் கிறிஸ்மஸ் அக்டோபர் மாதமே வந்துவிட்டது. இந்தியாவில், தீபாவளி முடிந்த கையோடு, அந்த சூட்டோடு கிறிஸ்மஸ், புத்தாண்டு வந்துவிட்டன. அவைகளுக்கான விளம்பரங்கள் வந்துவிட்டன. கிறிஸ்மஸ், புத்தாண்டு விற்பனை முடிவதற்குள் பொங்கல் ஆரம்பித்துவிடும். பொங்கலுக்குப் முடிவதற்குள், சித்திரைத் திருநாள்... இப்படி, வியாபார உலகைப் பொறுத்தவரை, எல்லாத் திருநாட்களும் முன்னதாகவே வந்துவிடும்.
ஏற்கனவே இருக்கும் இத்தனை விழாக்கள் போதாதென்று வியாபார உலகம் உருவாக்கியுள்ள விழாக்களும் உண்டு... அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், நட்பு தினம்...  இப்படி பல விழாக்கள்! மலர்கள், வாழ்த்து மடல்கள், பரிசுப் பொருட்கள், cell phone செய்திகள் என்று வியாபாரத்தைப் பெருக்குவதற்க்காக உருவாக்கப்பட்ட விழாக்கள் இவை. ஒவ்வொரு ஆண்டும் இப்படிப்பட்ட விழாக்கள்... இல்லை, இல்லை, வியாபார விழாக்கள் கூடுகிறதே அன்றி, குறைவதாகத் தெரியவில்லை.

இந்தியாவில் நம் வியாபாரிகளுக்குக் கிடைத்த மற்றொரு குருட்டு அதிர்ஷ்டம் கிரிக்கெட். வருடத்தின் பல நாட்களில் கிரிக்கெட் திருநாட்கள் கொண்டாடப்படுகின்றன. ஒரு நாள், ஐந்து நாட்கள் என்று நடக்கும் விழாக்கள் இவை. இந்த விளையாட்டை விழாக்களாக மாற்றியது யார்? நம் வியாபாரிகள், விளம்பரதாரர்கள்.
அன்பர்களே, வியாபார உலகம், விளம்பர உலகம் உண்டாக்கும், கொண்டாடும் திருநாள் பட்டியல் மிக, மிக  நீளமானது. அவர்களைப் பொறுத்தவரை, ஆண்டின் ஒவ்வொரு நாளும் திருநாள்தான். வியாபார உலகைப் பொறுத்தவரை வருடத்தில் 400 நாட்கள் இருந்தாலும் நல்லது தான். 400 ஐயும் திருநாள்களாக, வியாபாரமாக, லாபமாக மாற்றலாமே!
 எந்த நாளையும், வருடத்தின் எல்லா நாட்களையும் திருநாட்களாக பார்க்கும் கண்ணோட்டம் கொண்டவர்கள் வியாபாரிகள். லாபங்களுக்காக அவர்கள் இந்தக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். நாமும் இந்த கண்ணோட்டத்தைக் கற்று கொண்டு நல்லவைகளுக்காகப் பயன்படுத்தலாமே. வாழும் ஒவ்வொரு நாளையும், நமக்கும், பிறருக்கும் திருநாட்களாக, திரு நிறைந்த, அருள் நிறைந்த நாள்களாக மாற்ற கற்றுக் கொள்வோம்!

ஒவ்வொரு விழாவுக்கும் வியாபார, விளம்பர உலகம் எவ்வளவு மும்முரமாகத் தயாரிக்கின்றன என்று ஓரளவு எனக்குத் தெரியும். விளம்பர உலகம் பற்றிய பாடங்களைக் கடந்த சில ஆண்டுகள் மாணவ, மானவியருக்குச் சொல்லித் தந்த அனுபவத்தின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன்.
ஒவ்வொரு விழாவுக்கும், 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்னாலேயே இவர்களின் தயாரிப்பு, சிந்தனை ஓட்டம் ஆரம்பித்துவிடும். ஒவ்வொரு விழாவின் பின்னணி, அந்த நேரத்தில் உலகில் நிலவும் இயற்கைச் சூழல், குடும்பச் சூழல், தனி மனிதரின் மனச் சூழல் என்று பல கோணங்களில் இந்த விழாவைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்தச் சிந்தனைக் குவியல்களை அவர்கள் பகிர்ந்து கொள்வதை "Brainstorming Session"அதாவது சிந்தனைகள் சங்கமிக்கும் புயல்  என்று சொல்வர். எல்லாரும் அமர்ந்து சிந்தித்த பின் உருவாகும் ஓரிரு எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பார்கள். போன ஆண்டு சொன்னதையே மீண்டும் சொல்வதில்லை. வருவதென்னவோ அதே கிறிஸ்மஸ், பொங்கல் என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புது கண்ணோட்டம், புது அணுகு முறை கையாளப்படும்.
 இந்த விஷயத்திலும் பாடங்கள் படிக்கலாம். ஒவ்வொரு விழாவும் வந்தது, போனது என்று இல்லாமல், ஒவ்வொரு விழாவுக்கும் நாம் நம் குடும்பங்களோடு, உறவுகளோடு, நண்பர்களோடு அமர்ந்து அந்தந்த விழாவின் பின்னணி, அதில் நம் செயல்பாடுகள் பற்றி சிந்தித்து விழாக்களைக் கொண்டாடினால், நமது விழாக்கள் இன்னும் ஆழமுள்ளதாய், அர்த்தமுள்ளதாய் இருக்கும். ஆனால், இப்படி செய்வதற்கு நாம் முற்பட்டால், நம்மை ஏற இறங்கப் பார்ப்பார்கள். நம்மை வித்தியாசமாக நினைப்பார்கள்.
அதனால், பேசாமல் எல்லாரையும் போல அந்தந்த விழாவுக்கு வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் செய்வதையே செய்துவிட்டு போவோம் என்று கொண்டாடி வருகிறோம்.
இப்படி நாம் விழாக்களை அர்த்தம் தெரியாமல் கொண்டாடடுவதால் தான் நம் கொண்டாட்டங்கள் மனதையோ, வாழ்வையோக் கொஞ்சமும் பாதிக்காமல், வெறும் சம்பிரதாயக் கொண்டாட்டங்களாக மாறிவருகின்றன. வியாபாரிகளும், விளம்பர தாரர்களும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் தயாரிக்கும் ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கு நாம் நமது திருநாட்களுக்கு ஆன்மீக வழிகளில் தயாரிக்க ஆர்வம் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஆன்மீக உலகம் கூறும் தயாரிப்பு என்ன? நாம் எதிர்நோக்கியிருக்கும் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு என்ன வகையில் தயாரிக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கு லூக்கா நற்செய்தியின் வழியாக விடைகள் தேடுவோம்.
லூக்கா நற்செய்தி 3 1-6
திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். “பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்” என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார். இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.”

பாபிலோனிய பேரரசன் பயணம் மேற்கொண்டால், அவன் செல்லும் வழியில் எந்த வித மேடோ பள்ளமோ இல்லாமல் அனைத்தும் சமன் செய்யப்படும், முக்கியமாக மனித நடமாட்டம் அதிகம் இல்லாத காட்டு பகுதிகளில் அரசன் செல்ல நேர்ந்தால், பாவம் வீரர்கள் பல நாட்களுக்கு முன்னரே அந்த இடங்களில் இரவும் பகலும் உழைத்து அரசன் வரும் வழியைச் சரி செய்ய வேண்டும். அரசனின் தேர் எந்த வித பிரச்சனையும் இல்லாமல், அலுங்காமல் குலுங்காமல் செல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் இந்த வீரர்களும், அடிமைகளும் மனித பாலங்களாக இருந்ததாகவும் புராணம் சொல்கிறது.
நாம் வாழும் இந்த காலத்திலும் இதே கதை தானே. நாம் வாழும் பகுதியில் திடீரென சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு சாலையின் இரு ஓரங்களிலும் வெள்ளையாய் பெரிய போட்டு வைத்தது போல் மருந்து முத்திரைகள் குத்தப்பட்டால்? அன்று, அந்தப் பகுதிக்கு ஏதோவொரு அமைச்சர் வருகிறார் என்று அர்த்தம். இல்லையா?
பாபிலோன் அரசனோ, நம் மந்திரிகளோ வந்து போன பாதை அடுத்த நாளே மீண்டும் பழைய நிலைக்கு, குப்பையாக மாறிவிடும். நற்செய்தியில் கூறப்படும் பாதை வாழ்நாள் முழுவதும் நல்ல விதமாக இருக்க வேண்டிய பாதை. இந்தப்பாதை மனித உள்ளங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும். அங்குள்ள மேடு பள்ளங்கள் சரி செய்யப்பட வேண்டும். கோணல், மாணலாய் இருப்பவை நேராக்கப்பட வேண்டும். இந்த மாற்றம் ஓரிரு நாட்களில் உருவாகும் மாற்றங்களல்ல பல நாட்கள், பல ஆண்டுகள் நடக்கவேண்டிய மாற்றங்கள்.
சமுதாயத்தின் மேடு பள்ளங்களை சமன் செய்வது, சமுதாயத்தில் கோணலாக இருப்பதை நேராக்குவது.. போன்றவை கிறிஸ்மஸ் விழாவுக்கான தயாரிப்பின் ஒரு பக்கம். இவைகளைப் பற்றி அடுத்த வாரம் சிந்திக்க முயல்வோம். இந்த சமுதாய மாற்றம் ஏற்படுவதற்கு மிக மிக உறுதுணையாக இருப்பது நம் மன மாற்றம். அதைப் பற்றிக் கூறுவதுதான் இன்றைய நற்செய்தி.  அங்கு மாற்றங்களை காண வேண்டும். தற்பெருமையில் பூரித்துப் போய், தலைகனம் மிகுந்து வாழும் போது உள்ளத்தில் மலைகள் தோன்றும். துன்பத்தைக் கண்டு துவண்டு நொறுங்கிப் போகும் போது, பள்ளங்கள்,  பள்ளத்தாக்குகள் உருவாகும்; சில வேளைகளில் பெரும் பாதாளங்கள் உருவாகும். இந்த மலைகளைத் தாழ்த்தி, பள்ளங்களை நிரப்புவதற்குத் தேவையான ஆயுதங்கள் எங்கே? தேடி எங்கும் போகவேண்டாம். நம்மிடம் உள்ளன. ஒருவேளை, இவைகளை அதிகம் பயன்படுத்தாதனால், தூசி பிடித்து, துரு பிடித்துப் போயிருக்கலாம். இந்த ஆயுதங்கள் எவை? தாழ்ச்சி, நம்பிக்கை...
 நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வியாபார உலகம், அதைவிட விளம்பர உலகம் நம்மீது பல எண்ணங்களைத் திநித்துகொண்டே இருக்கின்றது. திணிக்கப்படும் எண்ணங்களை விட, நாமாகவே இந்த உலகங்களிலிருந்து தேவையான பாடங்களைக் கற்றுக் கொள்வோமே! தாழ்ச்சி, நம்பிக்கை இவைகளைக் கொண்டு மனதை பண்படுத்துவோம். இறைவன் இந்தப் பாதையில் வருவார். நம் மனதில் தங்குவார்.







All the contents on this site are copyrighted ©.