2009-12-05 16:32:12

டிச.06 - புனித நிக்கொலாஸ்


நான்காம் நூற்றாண்டில்  வாழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்த ஆயரைக் குறித்து பல கதைகள் கூறப்படுகின்றன. புனித பூமிக்கு பயணம் செய்துவிட்டு தன் சொந்த நாட்டுக்குத் திரும்பினார் நிக்கொலாஸ். அதிகாலையில் கோவிலுக்குள் சென்றார். அந்த நகரின் ஆயர் மரணம் அடைந்ததால், அங்கிருந்த குருக்கள் கோவிலில் கூடியிருந்தனர். அன்று காலை யார் கோவிலுக்கு முதலில் வருகிறாரோ, அவரைத் தங்கள் ஆயராக தேர்ந்தெடுப்பது என்று அவர்கள் ஏற்கனவே தீர்மானம் செய்திருந்ததால், அன்று காலை இறைவனைக் காண முதன் முதலாகக் கோவிலுக்குள் நுழைந்த நிக்கொலாஸை அவர்கள் ஆயராகத் தேர்ந்தனர்.
இவரைப் பற்றி சொல்லப்படும் மற்றொரு நிகழ்ச்சி: ஏழை ஒருவர் தன் மூன்று மகள்களைத் திருமணம் செய்து வைக்கப் போதிய வசதி இல்லாததால், அவர்களைத் தவறான வழிகளில் ஈடுபடுத்த முயன்றார். இதை அறிந்த ஆயர் நிக்கொலாஸ் மூன்று இரவுகள் அந்த ஏழையின் வீட்டு ஜன்னல் வழியே தங்க நாணயங்கள் இருந்த முடிச்சுகளை போட்டாராம். தொடர்ந்து மூன்று இரவுகள் கிடைத்த அந்த பரிசுகளைக் கொண்டு அந்த ஏழை, தன் மகள்களின் திருமணங்களை முடித்தாராம். இதேபோல் இப்புனிதர் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்த மூன்று வீரர்களுக்கு அவர்கள் அறியாத வண்ணம் விடுதலை வாங்கி தந்தார்.மற்றவருக்குத் தெரியாமல் இப்படி பல உதவிகள் செய்து வந்த  நிக்கொலாஸின் மறைவுக்குப் பிறகு அவர் நினைவாக கிறிஸ்தவர்கள் தங்கள் குழந்தைகள் தூங்கும் போது, அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் படுக்கை அருகே பரிசுகளை வைக்கும் பழக்கம் உருவானது. இவரது பெயரும்  SAINT NICHOLAS அல்லது இத்தாலிய மொழியில் SANTA NICOLAS என்று ஆரம்பித்து, நாளடைவில்  திரிந்து SANTA CLAUS ஆக மாறியது. இன்றும் ஆஸ்திரிய நாட்டில் பல இடங்களில் நன்னடத்தையுள்ள குழந்தைகளுக்கு டிசம்பர் 6ஆம் தேதி பரிசுகள் வழங்கப்படுகின்றன.All the contents on this site are copyrighted ©.