2009-12-05 16:20:47

பிரேசில் விடுதலை இறையியலாளர்கள் திருச்சபையின் கோட்பாடுகளுக்கு ஒத்திணங்கிச் செயல்படுமாறு திருத்தந்தை வலியுறுத்தல்


05டிச.2009 ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினாவை முன்னிட்டு பிரேசில் நாட்டின் 29 ஆயர்களை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பிரேசிலில் விடுதலை இறையியல்வாதிகள் திருச்சபையின் கோட்பாடுகளுக்கு ஒத்திணங்கிச் செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.

பிரேசிலில் நூற்றாண்டுகளாக இயங்கி வரும் கத்தோலிக்கப் பள்ளிகளின் கடமைகள் மற்றும் பணிகளின் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டிய அவர், பள்ளிகளில் கொண்டுவரப்படும் ஆரோக்யமான சமய சார்பற்ற தன்மை, மறைக்கல்வி உட்பட ஒரு மனிதனின் உண்மையான கல்வியை வலியுறுத்தும் அறநெறி மதிப்பீடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.

குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளுக்கான பள்ளிகளைத் தேர்வு செய்வதற்கு பிரேசில் சட்டம் உரிமை அளிக்கின்றது என்பதையும் சுட்டிக் காட்டிய திருத்தந்தை, கத்தோலிக்கப் பள்ளிகள், பிற பள்ளிகளிலிருந்து பிரித்துப் பார்க்கப்படக் கூடாது என்றும் கூறினார்.

கத்தோலிக்கப் பள்ளிகள், கல்வியில் கிறிஸ்துவை மையப்படுத்துகின்றன என்றுரைத்த அவர், இப்பள்ளிகள் கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் கல்விப்பணி செய்வதையும் குறிப்பிட்டார்

 
All the contents on this site are copyrighted ©.