2009-12-05 16:19:05

ஜெர்மானியர்கள் சுதந்திரமும் மனிதாபிமானமும் நிறைந்த நாட்டை கட்டி எழுப்புமாறு திருத்தந்தை வேண்டுகோள்


05டிச.2009 ஜெர்மன் கூட்டுக் குடியரசு உருவாக்கப்பட்டு அறுபது ஆண்டுகளும், பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளும் ஆகியுள்ள இவ்வேளையில், சுதந்திரமும் மனிதாபிமானமும் நிறைந்த நாட்டை கட்டி எழுப்புமாறு அந்நாட்டினரைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

1949ம் ஆண்டு மே மாதத்தில் கையெழுத்திடப்பட்ட ஜெர்மன் அரசியல் அமைப்பு சாசனம், மனித மாண்பு, திருமணம், குடும்பம் ஆகியவற்றுக்கு மதிப்பு அளிப்பதற்கு அழைப்பு விடுக்கின்றது என்றும், அந்நாடு கடந்த அறுபது ஆண்டுகளில் அமைதியுடன் கூடிய வளர்ச்சியைக் காண்பதற்கு இவை உதவியுள்ளன என்றும் திருத்தந்தை கூறினார்.

பெர்லின் சுவரை மரணத்தின் எல்லை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இது ஜெர்மனியையும் மக்களையும் குடும்பங்களையும் நண்பர்களையும் அயலாரையும் கட்டாயமாகப் பிரித்திருந்தது என்றும் கூறினார்.

ஜெர்மன் கூட்டுக் குடியரசு உருவாக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு மற்றும் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் இருபதாம் ஆண்டை முன்னிட்டு, வத்திக்கானில் இவ்வெள்ளி மாலை நடைபெற்ற இசை விழாவில் உரையாற்றிய, ஜெர்மன் நாட்டவரான திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாறு கூறினார்.
All the contents on this site are copyrighted ©.