2009-12-05 16:31:58

திருவருகைக்காலம் 2 ஆம் ஞாயிறு வாசகங்கள்


பாரூக்கு 5 1-9
எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிடு: கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்துகொள். கடவுளிடமிருந்து வரும் நீதியை ஆடையாய்ப் புனைந்து கொள்: என்றுமுள்ளவரின் மாட்சியை மணிமுடியாக உன் தலைமீது சூடிக்கொள். கடவுள் வானத்தின்கீழ் உள்ள எல்லா நாடுகளுக்கும் உன் பேரொளியைக் காட்டுவார். ‘நீதியில் ஊன்றிய அமைதி’, ‘இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி’ என்னும் பெயர்களால் கடவுள் உன்னை என்றென்றும் அழைப்பார். எருசலேமே, எழுந்திரு: உயர்ந்த இடத்தில் எழுந்து நில். கீழ்த்திசையை நோக்கு: கீழ்த்திசைமுதல் மேற்றிசை வரை உள்ள எல்லா நாடுகளிலிருந்தும் உன் மக்கள் தூயவரின் சொல்லால் ஒன்று சேர்க்கப்பட்டு, கடவுள் தங்களை நினைவு கூர்ந்ததற்காக மகிழ்வதைப் பார். பகைவர்கள் கடத்திச் சென்ற உன் மக்கள் உன்னைவிட்டுப் பிரிந்து சென்ற பொழுது நடந்து சென்றார்கள்: ஆனால் கடவுள் அவர்களை உன்னிடம் திரும்ப அழைத்துவரும் பொழுது அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல் உயர்மிகு மாட்சியுடன் அழைத்துவரப்படுவார்கள். கடவுளின் மாட்சியில் இஸ்ரயேல் பாதுகாப்புடன் நடந்துவரும் பொருட்டு, உயர் மலைகள் என்றென்றும் உள்ள குன்றுகள் எல்லாம் தாழவும் பள்ளத்தாக்குகள் நிரம்பவும் இவ்வாறு நிலம் முழுதும் சமமாகவும் கடவுள் கட்டளையிட்டுள்ளார். மேலும், காடுகளும் நறுமணம் வீசும் மரங்கள் அனைத்தும் கடவுளின் கட்டளையால் இஸ்ரயேலுக்கு நிழல் கொடுத்தன. கடவுள் தம் மாட்சியின் ஒளியில் மகிழ்ச்சியோடும், தம்மிடமிருந்து வெளிப்படும் இரக்கத்தோடும் நீதியோடும் இஸ்ரயேலை அழைத்து வருவார்.

பிலிப்பியருக்கு திருமுகம் 1 4-6 8-11சகோதரர் சகோதரிகளே, உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடிவருகிறேன். ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி. மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்.All the contents on this site are copyrighted ©.