2009-12-04 17:00:25

நிலக்கண்ணி வெடிகளால், பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கான ஆதரவு அதிகரிக்கப்பட JRS அழைப்பு


டிச.04,2009 நிலக்கண்ணி வெடிகள், கொத்து வெடி குண்டுகள், வெடிக்காமல் புதையுண்டுள்ள குண்டுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் சமூகங்களுக்கான ஆதரவு அதிகரிக்கப்பட வேண்டுமென JRS என்ற இயேசு சபை அகதிகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் கார்த்தஜெனாவில் Cartagena வில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்த நிலக்கண்ணி வெடிகள் குறித்த பன்னாட்டு உச்சி மாநாட்டினருக்கு இவ்வழைப்பை முன்வைத்தது JRS அமைப்பு.

நவம்பர் 29 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற இக்கூட்டத்தில், நிலக்கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டோர், அவர்களுக்கு உதவுவோர், அவ்வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுப்ட்டுள்ளோர், அரசுப் பிரதிநிதிகள் என ஆயிரத்துக்கும் மேர்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிலக்கண்ணி வெடிகள் தடை குறித்த உலக ஒப்பந்தத்தைப் பரிசீலனை செய்வதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டது. இவ்வொப்பந்தத்தில் இதுவரை 156 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட 39 நாடுகள் இன்னும் இதில் கையெழுத்திடவில்லை எனவும் JRS கூறியது.

1999ம் ஆண்டிலிருந்து 22 இலட்சத்துக்கு மேற்பட்ட நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டிருந்தாலும் இன்னும் இப்பணி முடுக்கிவிடப்பட வேண்டும் என JRS கூறியது.

1999ம் ஆண்டிலிருந்து சுமார் 3,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 22 இலட்சத்துக்கு மேற்பட்ட நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் நான்கு கோடியே நாற்பது இலட்சம் நிலக்கண்ணி வெடிகளை உலக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் அழித்துள்ளன. 1999 முதல் 2008ம் ஆண்டு வரை 119 நாடுகளில் அல்லது பகுதிகளில் 73,576 பேர் இதனால் இறந்துள்ளனர் என ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.