2009-12-03 16:02:09

கிறிஸ்து பிறப்பின் அமைதிச் செய்தியை வழங்கியுள்ளார் குவஹாத்தி பேராயர்


டிச.03,2009 இந்தியாவில் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாம் மாநிலத்திற்கு கிறிஸ்து பிறப்பின் அமைதிச் செய்தியை இவ்வியாழனன்று வழங்கியுள்ளார் குவஹாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில். பேராயரின் செய்தி கிறிஸ்துவர்களை மட்டும் மனதில் கொண்டு அனுப்பப்படவில்லை மாறாக, அஸ்ஸாம் மாநிலத்தில் அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் மனதில் கொண்டு அனுப்பப்பட்டுள்ளதென செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக, பேராயரின் முயற்சியால் இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட பிற சமயங்களையும் சார்ந்தவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள “இணைந்த அமைதிக் குழு” (Joint Peace Team) என்ற அமைப்பு செயல் பட்டு வருகிறது. அமைதியை மக்களிடையே பலவந்தமாகத் திணிக்க முடியாது, மாறாக அமைதி நிலவ வேண்டுமென நம்பிக்கையுடன் செபிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை என்றும், இந்தக் கடமையை நினைவுறுத்தும் ஒரு சிறந்த காலம் கிறிஸ்மஸ் காலம் என்றும் பேராயர் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வன்முறையின் வழியாக அமைதியைக் கொண்டு வர முயற்சி செய்யும் அரசும், மற்ற குழுக்களும் அமைதியை அன்பின் வழியில் மட்டுமே கொண்டு வர முடியும் என்பதை உணரவேண்டும் என பேராயர் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.All the contents on this site are copyrighted ©.