2009-12-02 15:35:59

அனைத்து கிறிஸ்தவ சபைகளின் கூட்டமொன்று பெங்களூரில் நடைபெற்றது


டிச.02,2009 500க்கும் மேற்பட்ட ஆயர்கள், குருக்கள், போதகர்கள் கலந்து கொண்ட அனைத்து கிறிஸ்தவ சபைகளின் கூட்டமொன்று பெங்களூரில் இச்செவ்வாயன்று நடைபெற்றது. பெங்களூர் பேராயர் பெர்னார்ட் மொராஸின் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில், மார்தோமா, சிரியன் ரீதி சபைகள்,  பாப்டிஸ்ட், மெதடிஸ்ட் சபைகள், தென்னிந்திய சபை, முழு நற்செய்தி சபை, என பல சபைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவின் பல இடங்களில், முக்கியமாக கர்நாடகாவில் கிறிஸ்தவர்களும், கிறிஸ்துவ ஆலயங்களும் தாக்கப்பட்டு வருவது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வருவதற்கு இறைவன் தந்துள்ள மறைமுக அழைப்பு என எடுத்துக்கொள்ளலாம் என்று பேராயர் மொராஸ் கூறினார்.

இந்த கூட்டத்தின் உச்சகட்டமாக, அங்கு கூடியிருந்த அனைத்து சபைகளும் “மனித உரிமைகளுக்கான கர்நாடகாவின் அனைத்து கிறிஸ்தவ ஒன்றிப்பு” என்ற அமைப்பின் கீழ் சேர்ந்து பணியாற்ற இசைந்துள்ளன. டிசம்பர் 13ஆம் தேதியன்று இன்னும் பலரை இணைத்து ஒரு கூட்டம் நடத்தப்படும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 
All the contents on this site are copyrighted ©.