2009-11-28 14:45:50

சிலேயும் அர்ஜென்டினாவும் ஆண்டெஸ் மலையால் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஒரே மாதிரியான சமய, கலாச்சார மற்றும் மொழிப் பின்னணிகளைக் கொண்டிருக்கின்றன கர்தினால் பெர்த்தோனே


நவ.28,2009 திருத்தந்தையின் உரைக்குப் பின்னர், வத்திக்கானின் சான் கசினோ 4ம பத்திநாதர் அறையில் அர்ஜென்டினா, சிலே ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கு உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, 1984ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி இதே அறையில் இந்த அமைதி உடன்படிக்கைக்கான அதிகாரப்பூரிவ எழுத்துப்படிவம் இவ்விரு குடியரசுகளின் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

பின்னர் நவம்பர் 29ம் தேதி இந்த அப்போஸ்தலிக்க மாளிகையில் இந்த உடன்படிக்கை கையெழுத்தாகியது என்று கூறிய கர்தினால், இதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி வைத்த பாப்பிறை இரண்டாம் ஜான் பவுல் திருச்சபை மற்றும்பிற அரசு அதிகாரிகளையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

சிலேயும் அர்ஜென்டினாவும் ஆண்டெஸ் மலையால் பிரிக்கப்பட்டிருந்தாலும் இவ்விரு நாடுகளும் ஒரே மாதிரியான சமய, கலாச்சார மற்றும் மொழிப் பின்னணிகளைக் கொண்டிருக்கின்றன என்று கூறினார் கர்தினால்.

இந்த ஆழங்காண ஆன்மீகச் செல்வமானது, இந்த நாடுகள் அமைதி, ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம், நன்மதிப்பு, ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றில் அசைக்க முடியாத ஆவல் கொள்ள உதவியது, இவற்றில் தொடர்ந்து வளர வேண்டுமென்றும் திருப்பீடச் செயலர் கூறினார்.

இச்சந்திப்புகள் முடிந்து இத்தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு திருத்தந்தையுடன் மதிய உணவையும் அருந்தியது.








All the contents on this site are copyrighted ©.