2009-11-27 15:22:55

மிகவும் மனம் சோர்ந்த நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்து வரும் முன்னாள் தமிழ்ப் போராளிகள் விடுதலை செய்யப்பட திருச்சபைப் பணியாளர்கள் வேண்டுகோள்


நவ.27,2009 இலங்கையில் மிகவும் மனம் சோர்ந்த நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்து வரும் முன்னாள் தமிழ்ப் போராளிகளுக்கு உதவி வருவதோடு அவர்களில் பலர் விடுதலை செய்யப்படுமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் திருச்சபைப் பணியாளர்கள்.

இந்த முன்னாள் தமிழ் போராளிகளில் பலர், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பகுதிகளில் வாழ்ந்த போது வேறு வழியின்றி படையில் சேர்ந்தனர் என்று கூறிய அருட்தந்தை Paul Jayanthan Pachchek, இவர்கள் தொடர்ந்து தண்டிக்கப்படக் கூடாது என்று கூறினார்.

OSS என்ற அமலமரி தியாகிகள் சபையின் சமூக சேவை அமைப்பின் முன்னாள் இயக்குனரான அருட்தந்தை பவுல், இச்சபையினர் சேவைபுரியும் ஐந்து முகாம்களில் வாழும் இந்த முன்னாள் தமிழ் போராளிகளில் பலர், வாலிப வயதை எட்டாதவர்கள் என்று கூறினார்.

சிறார்களாகப் படைப்பிரிவில் சேர்ந்த இவர்கள், தற்சமயம் காயங்களுடனும் உடல் ஊனத்திலும் உளப்பிரச்சனையிலும் தங்களின் உறவுகளிடமிருந்து பிரிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்சமயம் ஏறத்தாழ 11 ஆயிரம் முன்னாள் தமிழ் இருபாலினப் போராளிகள் 17 முகாம்களில் வைக்கப்பட்டு அரசுப் படைகளால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று யூக்கா செய்தி நிறுவனம் கூறியது.

மேலும், இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு வருகிற ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடத்தப்படும் என்றும், வருகிற டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.