2009-11-27 15:19:30

பல்சமய உரையாடல், கட்டாயமாக நடத்தப்பட வேண்டியது- கர்தினால் தவ்ரான்


நவ.27,2009 பல்சமய உரையாடல், விருப்பப்பட்டு நடத்தப்பட வேண்டியது அல்ல, மாறாக அது கட்டாயமாக நடத்தப்பட வேண்டியது என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் ஜான் லூயி தவ்ரான் இந்தோனேசிய முஸ்லீம் தலைவர்களிடம் தெரிவித்தார்.

இந்தோனேசிய நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் தவ்ரான், நாதலாத்துஸ் உலாமா Nahdlatul Ulama, முகமதியா Muhammadiyah. ஆகிய அந்நாட்டின் இரண்டு பெரும் இசுலாமிய நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்த போது பல்சமய உரையாடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

சகிப்புத்தன்மை, ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பல்சமய உரையாடலை ஊக்குவிப்பதற்குப், பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜகார்த்தாவிலுள்ள முகமதியா மையம் துவங்கப்பட்டதன் நூறாவது ஆண்டை முன்னிட்டு நவம்பர் 25ம் தேதி, சமூக நீதியைக் கட்டி எழுப்புதல் என்ற தலைப்பில் அங்கு இடம் பெற்ற உரையாடலிலும் கர்தினால் கலந்து கொண்டார்.

சுமார் 17,508 தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசியா, உலகிலேயே அதிகமான முஸ்லீம்களைக் கொண்டுள்ள நாடு ஆகும்.








All the contents on this site are copyrighted ©.