2009-11-27 15:18:10

குடியேற்றதார மற்றும் அகதிச் சிறாருக்குத் தகுந்த கல்வியும் சமூகப் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும், திருத்தந்தை அழைப்பு


நவ.27,2009 குடியேற்றதார மற்றும் அகதிச் சிறாருக்குத் தகுந்த கல்வியும் சமூகப் பாதுகாப்பும் வழங்கப்பட்டு அவர்கள் தொழில் உலகில் ஒருங்கிணைக்கப்பட வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்பு விடுத்தார்.

96வது உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினத்தை முன்னிட்டு இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்ட திருத்தந்தையின் செய்தியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

குடியேற்றதாரச் சிறார், அவர்களின் பெற்றோர் குடியேறியுள்ள நாடுகள் மற்றும் அவர்களின் பூர்வீக நாடுகள் ஆகிய இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையில் வளர்கின்றனர் என்பதை விளக்கியுள்ள திருத்தந்தை, இவர்களுக்குத் தேவையான கல்வியும் சமூகநல பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

பல்வேறு காரணங்களுக்காக தங்கள் தாயகத்தை விட்டு வேறு நாடுகளில் புகலிடம் தேடும் அகதிச் சிறார் பற்றியும் குறிப்பிட்ட அவர், சர்வதேச சிறார் உரிமைகள் சாசனத்தின்படி இவர்கள் வரவேற்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

வேறு நாடுகளி்ல் புகலிடம் தேடும் சிறாரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இவர்கள் முன்வைக்கும் சமூக மற்றும் மேய்ப்புப்பணி சவால்கள் குறித்து கிறிஸ்தவர்கள் அறிந்திருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

குடியேற்றதாரரும் மனிதர்களே, இவர்கள் அடிப்படையான மற்றும் தவிர்ர முடியாத உரிமைகளைக் கொண்டுள்ளார்கள், இவை ஒவ்வொருவராலும் ஒவ்வொரு சூழலிலும் மதிக்கப்படுமாறும், உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினத்திற்கான செய்தியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டுள்ளார். திருத்தந்தையின் இச்செய்தி இவ்வெள்ளியன்று நிருபர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

சிறார் குடியேற்றதாரர் மற்றும் சிறார் அகதிகள் என்ற தலைப்பில் இவ்வுலக நாளானது, 2010ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

 








All the contents on this site are copyrighted ©.