2009-11-25 15:03:56

சுயநினைவின்றி இருக்கும் மனிதரையும் பராமரிக்க வேண்டுமென வலியுறுத்திவரும் கத்தோலிக்கத் திருச்சபையின் நிலை சரியே - உயிரியல் நன்னெறி நிபுணர்


நவ.25,2009 கார்விபத்தொன்றில் சுயநினைவிழந்து, 26 ஆண்டுகள் கோமாவில் இருந்த ரோம் ஹூபென் (Rom Houben) கடந்த மூன்று ஆண்டுகளாய் மீண்டும் நினைவுக்குத் திரும்பியுள்ளது சுயநினைவின்றி தாவர நிலையில் இருக்கும் மனிதரையும் பராமரிக்க வேண்டுமென வலியுறுத்திவரும் கத்தோலிக்கத் திருச்சபையின் நிலை சரியென்பதை உலகிற்கு சுட்டிக் காட்டும் ஒரு நிகழ்வு என்று உயிரியல் நன்னெறியில் தேர்ச்சி பெற்ற திரு ஜான் ஹாஸ் (John Haas) கூறியுள்ளார். பிலடெல்பியாவில் நிறுவப்பட்டுள்ள கத்தோலிக்க உயிரியல் நன்னெறி தேசிய மையத்தின் தலைவராக பணியாற்றும் திரு ஹாஸ், சுயநினைவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மனித உயிருக்கு வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்படக்கூடாதென்பதை ரோம் ஹூபென் நிகழ்வு எடுத்துக்காட்டியுள்ளதென்றார்.  ரோம் ஹூபென் குறித்து பெல்ஜியத்தில் உள்ள லீஜ் (Liege) பல்கலைகழக மருத்துவமனை அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், கார் விபத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ரோம் ஹூபென், உடலளவில் எல்லா கட்டுபாடுகளையும் இழந்துவிட்டாலும், தன்னைச் சுற்றி நடந்தது எல்லாவற்றையும் முற்றிலும் அறிந்தவண்ணம் அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்திருக்கிறார் என்றும் அதை மருத்துவ ரீதியில் உணர முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளாய் ஒரு கணனி வழியாகத் தன் தேவைகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து வரும் ரோம் ஹூபென், தற்போது புத்தகங்களை வாசித்து வருவதாக செய்தி குறிப்பு ஒன்று கூறுகிறது. ரோம் ஹூபென் பெற்ற இந்த முன்னேற்றத்தால் உலகின் பல மருத்துவமனைகளில் கோமா நிலையில் உள்ள பலரையும் இன்னும் சரியான முறையில் பரிசோதிக்க மருத்துவமனைகள் முன்வந்துள்ளன என்று இச்செய்திகுறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.