2009-11-24 16:21:34

விவிலியத் தேடல்:


ஆறில் சாகலாம், நூறில் சாகலாம் ஆனால் இளமையில் சாவது கொடுமை என்ற வரிகளை எல்லாரும் கேட்டிருக்கிறோம். இளமை என்பது வாழ்வதற்கு... ஆனால், எப்படியும் வாழ்வதற்கல்ல. எப்படியும் வாழலாம் என்று ஆரம்பித்து, வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் இளையோரைப் பற்றி, முக்கியமாக, போதைப்பொருட்களுக்கு வாழ்வை பணயம் வைத்துவிட்டு, உடலால், மனதால் நோயுற்று ஊனமுற்று இருக்கும் இளையோரைப் பற்றி… இவர்களை நோயிலிருந்து அழிவிலிருந்து காப்பாற்ற, இவர்களைப் பேணி காக்கப் பெற்றோர் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி சிந்திக்க இன்றைய விவிலியத் தேடல் மூலம் உங்களை அழைக்கிறேன்.
வலிப்பு நோயுடன் போராடும் ஒரு சிறுவன், அவனைக் காப்பாற்ற போராடும் அவன் தந்தை இவர்களை இன்றைய விவிலியத்தில் சிந்திப்போம்.
நற்செய்திக்கு செவி மடுப்போம். மாற்கு, 9:17-27

17 அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, ' போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன்.18 அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப்போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை ' என்று கூறினார்.19 அதற்கு அவர் அவர்களிடம், ' நம்பிக்கையற்ற தலைமுறையினரே. எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் ' என்று கூறினார்.20 அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது.21 அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, ' இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று? ' என்று கேட்டார். அதற்கு அவர், ' குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்துவருகிறது.22 இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும் ' என்றார்.23 இயேசு அவரை நோக்கி, ' இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும் ' என்றார்.24 உடனே அச்சிறுவனின் தந்தை, ' நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும் ' என்று கதறினார்.25 அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, ' ஊமைச் செவிட்டு ஆவியே,உனக்குக் கட்டளையிடுகிறேன்; இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே ' என்றார்.26 அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், ' அவன் இறந்துவிட்டான் ' என்றனர்.27 இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.

நற்செய்தியில் நாம் சந்திக்கும் தந்தை உண்மையிலேயே பாசம் மிகுந்தவர். குறையுடன் பிறந்த தன் மகனைக் குப்பைத் தொட்டியில் போடாமல், அவனை அந்த யூத சமூகத்தில் வளர்த்ததைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
குப்பைத் தொட்டியில் பிறக்கும் குழந்தைகளைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. குழந்தைகள் பிறப்பதென்னவோ ஒரு தாயின் உதரத்தில்தான். ஆனால், ஆயிரமாயிரம் காரணங்களுக்காய், கோடி கொடியாய் குழந்தைகள் குப்பைத் தொட்டியிலும், அனாதை இல்ல வாசல்களிலும், கோவில் முகப்புகளிலும் எறியப்படுவது இன்றும் நடக்கும் உண்மை.
இந்தக் குழந்தைகளை எறிந்து விட சொல்லப்படும் காரணங்களில் ஒன்று... பிறக்கும் போதே ஏதோவொரு குறையோடு குழந்தை பிறப்பது தான். நற்செய்தியில் இன்று நாம் சந்திக்கும் தந்தை குறையோடு பிறந்த தன் குழந்தையைத் தூக்கி எறியவில்லை. அதுவும், குறையோடு பிறந்த ஒரு குழந்தையை யூதர் குலத்தில் வளர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒரு சவால். எந்த ஒரு நோயும், உடல் குறையும் கடவுளின் சாபம் என்று தப்பு கணக்கு போட்டு வந்த யூத சமூகத்தில், பலரும் சொல்லும் பழிச் சொற்களைக் கேட்டும் கேளாத வண்ணம், குறையோடு பிறந்த தன் மகனை வளர்க்க இந்தத் தந்தை அதிகம் போராடி இருக்க வேண்டும்.
உடலளவில் தன் மகன் சந்தித்த போராட்டங்களை இவர் இயேசுவிடம் விளக்குகிறார். தன் மகனின் குறையைத் தீர்க்க எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டு அவரது உள்ளம் தளர்ந்து போயுள்ளது. அதையும் நற்செய்தி படம் பிடித்து காட்டுகிறது. "உம்மால் எதாவது... என்று கதறினார்." (9: 22-24) உள்ளத்தை உருக்கும் வரிகள்..
பொதுவாகவே, ஆண்கள் அழக்கூடாது, அதுவும் போது இடங்களில், பலருக்கு முன் அழக்கூடாது என்பது நாமாகவே வகுத்துக் கொண்ட நியதி. இங்கு நாம் சந்திக்கும் தந்தை கூட்டத்தின் முன்னால் கதறி அழுகிறார். தன் மகனைக் காப்பாற்ற அவர் மேற்கொண்ட போராட்டங்கள், அவர் இதுவரைக் கண்ட தோல்விகள், எல்லாவற்றையும் உள்ளத்தில் போட்டு பூட்டி வைத்து, ஒருவேளை இரவில், தனிமையில் அவர் அழுதிருக்கக்கூடும். அப்படி தேக்கி வைத்த உணர்வுகளெல்லாம் மடைதிறந்து கொட்டுகின்றன இயேசுவுக்கு முன்னால். அவர் உள்ளத்தின் காயங்களெல்லாம் இயேசுவுக்கு முன்னால் திறக்கப்படுகின்றன. மகன் குணமாகும் அந்த நேரத்தில், தந்தையும் குணமாகிறார்.

இந்த தந்தை தன் மகனது குறையை விளக்கும் வரிகள் இன்றைய இளையோரைப் பற்றி சிந்திக்க, அதுவும் அழிவைத் தேடிக்கொள்ளும் பல பழக்கங்களுக்கு அடிமையாகிப் போன இளையோரைப் பற்றி சிந்திக்க நமக்கொரு வாய்ப்பைத் தருகின்றன.
"என் மகனைப் பிடித்துள்ள தீய ஆவி, அவனைப் பேச்சிழக்க வைத்துள்ளது. அவனைப் பிடித்து கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நேரிக்கிறான். உடம்பும் விறைத்துப் போகிறது.... இவனை ஒழித்து விடத் தீயிலும், தண்ணீரிலும் பல முறை இந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு."
நாம் இந்த விவிலியத் தேடலில் சிந்தித்துக்கொண்டிருக்கும் இதே வேளையில் உலகத்தின் லட்சக் கணக்கான மறு வாழ்வு மையங்களில் தன் மகனின் நிலையைப் பற்றி இந்த தந்தை சொன்ன அதே வரிகள் நிஜமாய் நடந்து வருகின்றன என்பதை சிந்திப்போம்.

போதைப் பொருட்களுக்கு அடிமையாவது பணம் படைத்தவர்கள் மட்டுமென்று நான் எண்ணியிருந்த காலம் உண்டு. ஆனால் இந்த பழக்கம் சமூகத்தில் ஏழை பணக்காரர் என்ற எல்லா நிலையினரிடையேயும், எல்லா வயதினரிடையேயும் இருப்பது அதிர்ச்சியைத் தரும் உண்மை. அண்மையில் நான் பார்த்த ஒரு குறும் படத்தில், பங்களாதேஷில் உள்ள உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. 
“Letters from an anonymous addict” by Taimoor Sobhan (BBC)
Drug abuse is an alarming problem in Bangladesh. There are approximately 3 – 4.5 million drug users in the population. Of these many are children and teenagers. This number is steadily increasing.
மதுவுக்கும், போதை பொருள்களுக்கும் அடிமையாகி வாழ்வைத் தொலைத்துவிட்ட பல இளையோரை நாம் சந்தித்திருக்கிறோம். சாவின் வாசல் வரை சென்றுவிட்ட இவர்களை மீண்டும் வாழ்வுக்குக் கொண்டு வர போராடும் பெற்றோர், குடும்பத்தினர் எல்லாரையும் பெருமையோடு இப்போது நினைத்துப் பார்ப்போம்.
அந்த மறு வாழ்வு மையங்களில் உடல் விறைத்து, வாயில் நுரை தள்ளி படுத்திருக்கும் மகனுக்கு, அல்லது மகளுக்கு அருகே இரவும் பகலும் கண் விழித்து, தவமிருக்கும் பெற்றோரை, அல்லது வாழ்க்கைத் துணையைப் பார்த்து விசுவாசப் பாடங்களை நாம் கற்றுக் கொள்ளவேண்டும். இந்த மறு வாழ்வு மையங்களில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒரு நாள், இரு நாளில் முடியும் கதையல்ல. பல வாரங்கள், பல மாதங்கள் நடக்கும் சிலுவைப் பாதை.
இந்த மறுவாழ்வு மையங்களில் இளையோரும், அவர்களது குடும்பங்களும் மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டு எல்லாரும் சந்தோஷப்படப் போவதில்லை. முக்கியமாக மனசாட்சியை விற்று விட்டு, இவர்களுக்கு போதைப் பொருள்களை வழங்கி வரும் வியாபாரிகள் இந்த மறு வாழ்வுக்கு எதிரிகள். இரு மாதங்களுக்கு முன்னர், செப்டம்பர் துவக்கத்தில் மெக்ஸிகோவுக்கு அருகில் நடந்த ஒரு சம்பவம் நம்மை நிலை குலையச் செய்கிறது. நம் விசுவாசத்திற்கு மீண்டும் ஒரு சவாலைத் தருகிறது.
மெக்சிகோ நகருக்கருகே ஒரு மறுவாழ்வு மையத்தில் ஒரு நாள் பட்டப்பகலில் துப்பாக்கி ஏந்திய இரண்டு அல்லது மூன்று பேர் நுழைந்தனர். அங்கு போதைப் பழக்கத்திலிருந்து விடுதலை பெற முயற்சி மேற்கொண்டிருந்த 17 இளைஞர்களை அந்த மையத்தின் வாசலுக்கு கொண்டு வந்தனர். வரிசையாக அவர்களை நிறுத்தி, ஒருவர் பின் ஒருவராகச் சுட்டுக் கொன்றனர். போதையிலிருந்து விடுதலை பெற விழைந்தவர்களுக்கு இவர்கள் நிரந்தர விடுதலை தந்து விட்ட வெறியில் மறைந்து விட்டனர். காவல் துறையினர் கொலையாளிகளை இன்னும் கண்டு பிடிக்கவில்லை.
அன்பர்களே, போதைப் பொருள் வியாபாரம் இன்று உலகத்தில் பல ஆயிரம் கோடி மூலதனத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகளின் ஆதரவுடன் நடக்கும் இந்தத் தொழிலால் அழியும் குடும்பங்களின் கதறல்களை ஓரளவு இன்றைய விவிலிய சிந்தனையில் கேட்க முயன்றோம். முடிவில்லாதது போல் தெரியும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைய உள்ளங்கள் அவர்களைக் கரை சேர்க்க பாடுபடும் அவர்களது குடும்பத்தினர் .... அனைவரையும் இறைவன் குணமாக்க வேண்டுமென வேண்டுவோம்."நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்." என்று இந்த உள்ளங்கள் எழுப்பும் கதறல்கள் கட்டாயம் அந்த விண்ணகக் கதவுகளைத் திறக்கும்.







All the contents on this site are copyrighted ©.