2009-11-21 16:22:25

ஞாயிறு சிந்தனை


இந்த ஞாயிறு நாம் கொண்டாடுவது கிறிஸ்து அரசர் திருநாள். இந்தத் திருநாளைப் பற்றி நினைக்கும் போது எனக்குள்ளே ஒரு சங்கடம். அதை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கிறிஸ்துவைப் பல கோணங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறேன், தியானித்திருக்கிறேன். ஆயனான கிறிஸ்து, மீட்பரான கிறிஸ்து, வழியாக, ஒளியாக, வாழ்வாக, உணவாக, திராட்சைக் கொடியாக வரும் கிறிஸ்து... என்று இந்த ஒப்புமைகளைத் தியானிக்கும் போது மன நிறைவு கிடைத்திருக்கிறது.

ஆனால் அரசரான கிறிஸ்து அல்லது கிறிஸ்து அரசர் என்ற எண்ணம் மனதில் பல சங்கடங்களை விதைக்கிறது. கிறிஸ்து, அரசர், இரண்டும் நீரும் நெருப்பும் போல ஒன்றோடொன்று பொருந்தாமல் இருப்பது போன்ற ஒரு சங்கடம். ஏன் இந்த சங்கடம் என்று சிந்தித்ததுண்டு. அப்படி சிந்திக்கும் போது ஒரு உண்மை தெரிந்தது. சங்கடம் கிறிஸ்து என்ற வார்த்தையில் அல்ல, அரசர் என்ற வார்த்தையில்தான்.

அரசர் என்றதும் மனதில் எழும் எண்ணங்கள், மனத்திரையில் தோன்றும் காட்சிகள்தாம் இந்த சங்கடத்தின் முக்கிய காரணம். அரசர் என்றால்?... ராஜாதி ராஜ, ராஜ பராக்கிரம, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர,... இப்போது சொன்ன பல வார்த்தைகளுக்குச் சரியாகக் கூட அர்த்தங்கள் தெரியாது, ஆனால் இந்த முழக்கங்களுக்குப் பின் மனத்திரையில் தோன்றும் உருவம்? பட்டும், தங்கமும், வைரமும் மின்ன உடையணிந்து, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்து வரும் ஓர் உண்டு கொழுத்த உருவம்... சுருங்கச் சொல்ல வேண்டுமெனில், ஆடம்பரமாக வாழப் பிறந்தவர், அதிகாரம் செய்ய, அடுத்தவர்களைக் கால் மணையாக்கி, ஆட்சி பீடம் ஏறி அமர்பவர், தன்னைப் பார்ப்பவர்கள் எல்லாரும் முகம் குப்புற விழுந்து வணங்கி எந்நேரமும் தன் துதிபாட வேண்டும் என விரும்புபவர், வற்புறுத்துபவர்...

அரசர் என்றதும் கும்பலாய், குப்பையாய் வரும் இந்த கற்பனைக்கும், ஏசுவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லையே. அப்புறம் எப்படி இயேசுவை அரசர் என்று சொல்வது? சங்கடத்தின் அடிப்படையே இதுதான்.



ஆனால், இயேசுவும் ஒரு அரசர், ஒரு அரசை நிறுவியவர். அந்த அரசுக்குச் சொந்தக்காரர்... அவர் நிறுவிய அரசுக்கு நிலபரப்பு கிடையாது... அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்து விட்டது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, இதைப் பாதுகாக்கக் கோட்டை கொத்தளங்கள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை... எதுவுமே தேவையில்லை. ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு எதுவுமே தேவையில்லை. இன்னும் ஆழமான ஒரு உண்மை இதில் என்னவென்றால், எதுவுமே தேவையில்லாமல், இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் இந்த அரசு நிறுவப்படும். அப்படிச் சேர்ந்து வரும் மனங்களில் தந்தையை அரியணை ஏற்றுவதுதான் இயேசுவின் முக்கிய பணி. இயேசுவுக்கு அரியணை இல்லையா? உண்டு. தந்தைக்கும், இயேசுவுக்கும் அரியணைகளா? ஆம். இந்த அரசில் யார் பெரியவர் என்ற கேள்வி இல்லாததால், எல்லாருக்குமே, இந்த அரசில் அரியணை, எல்லாருக்குமே மகுடம், எல்லாருக்குமே சாமரம், ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு மகுடம் சூட்டுவதிலேயே குறியாய் இருப்பதால், அடுத்தவருக்கு சாமரம் வீசுவதிலேயே குறியாய் இருப்பதால், அரசன் என்றும், அடிமை என்றும் வேறுபாடுகள் இல்லை, எல்லாரும் இங்கு அரசர்கள்... ஒருவேளை, இயேசுவை இங்கு தேடினால், அவர் நம் எல்லாருடைய பாதங்களையும் கழுவிக்கொண்டு இருப்பார். எல்லாரையும் மன்னராக்கி, அதன் விளைவாக தானும் மன்னராகும் இயேசுவின் அரசுத்தன்மையைக் கொண்டாடத்தான் இந்த கிறிஸ்து அரசர் திருநாள்.

 எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற நம் கவிஞன் ஒருவனின் கனவு நினைவிருக்கிறதா? அப்படிப்பட்ட கனவு நனவாகும் ஒரு நாள் இந்தத் திருநாள்.



‘ராஜாதி ராஜ’ என்று நீட்டி முழக்கிக் கொண்டு, தன்னை மட்டும் அரியணை ஏற்றிக் கொள்ளும் அரசர்களும் உண்டு... எல்லாரையும் மன்னர்களாக்கி, அனைவருக்கும் மகுடம் சூட்டி மகிழும் அரசர்களும் உண்டு. இருவகை அரசுகள், இருவகை அரசர்கள். இரண்டும் நீரும் நெருப்பும் போல் ஒன்றோடொன்று கொஞ்சமும் பொருந்தாதவை. இந்த இரு வேறு உலகங்களையும், அரசுகளையும், அரசர்களையும் இன்றைய நற்செய்தி நமக்குத் தருகின்றது.



நற்செய்திக்குச் செவிமடுப்போம்:

யோவான் நற்செய்தி 18: 33-37



இருவேறு உலகங்களின் பிரதிநிதிகள் - பிலாத்தும், ஏசுவும். முதலில் பிலாத்து பற்றிய சிந்தனைகள்... இந்த பிலாத்து யார் என்று புரிந்து கொண்டால், இயேசு யார் என்று, அதுவும் இயேசு எந்த வகையில் அரசர் என்று புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இருள் என்றால் என்ன என்று தெரிந்தால் தானே, ஒளி என்றால் என்ன என்று புரிந்துகொள்ளமுடியும். அதுபோல் தான் இதுவும்.



இந்த போஞ்சு பிலாத்து யார்?

செசாரின் கைபொம்மை இந்த பிலாத்து. இவனது முக்கிய வேலையே, யூதர்களிடம் வரி வசூலித்து ரோமைக்கு அனுப்புவது.. தன் ஆளுகைக்கு உட்பட்ட யூதப் பகுதியில் எந்த விதக் கலகமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது, கலகம் என்று எழுந்தால், எள்ளளவும் தயக்கமில்லாமல், கொடூரமாக அதை அடக்குவது. பிலாத்து இந்தப் பதவிக்கு வர பல பாடுகள்பட வேண்டியிருந்தது. அவனது கணக்குப்படி, இது ஒரு படிதான். அவன் ஏறவேண்டிய படிகள் பதவிகள் இன்னும் பல உள்ளன. இறுதியாக, சீசரின் வலது கையாக மாறவேண்டும், முடிந்தால் சீசராகவே மாற வேண்டும். அதற்காக எதையும் செய்யத் துணிந்தவன் பிலாத்து. பதவி ஒன்றே இரவும், பகலும் அவன் சிந்தனையை, மனதை ஆக்ரமித்ததால், வேறு எத்தனையோ விஷயங்களுக்கு அவன் வாழ்வில் இடமில்லாமல் போய்விட்டது. இப்போது அந்த மற்ற விஷயங்களை நினைத்து பார்க்க, அவனுடைய மனசாட்சியைத் தட்டி எழுப்ப ஒரு சவால் வந்திருக்கிறது. அதுவும் பரிதாபமாக, குற்றவாளியென்று அவன் முன்னால் நிறுத்தப்பட்டுள்ள ஒரு தச்சனின் மகன் மூலம் வந்திருக்கும் சவால் அது. அந்த நேரத்தில் பிஆத்தின் மனதில் ஓடிய எண்ணங்களை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன்.

“நான் ஏன் பதவி காலத்தில் பலருக்கு மரணதண்டனை கொடுத்திருக்கிறேன். சீசருக்குப் பிடிக்கும் என்று தெரிந்தால், ஏன் பதவிக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தால், தவறான தீர்ப்புகளை, அநியாயம் என்று மனதார உணர்ந்தும், தந்திருக்கிறேன். ஏன் வாழ்வின் இலட்சியங்கள் எல்லாம், பதவிகள் பெற வேண்டும், கிடைத்தப் பதவிகளைத் தக்க வைத்து கொள்ள வேண்டும், இன்னும் உயர் பதவிகளை அடைவதற்கு மேலதிகாரிகளைச் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். இப்படியே வாழ்ந்து பழகி விட்ட நான் இன்று குழம்பிப் போயிருக்கிறேன். நாசரேத்தூரில் பிறந்ததாகச் சொல்லப்படும் இயேசு என்ற இந்த இளைஞனைப் பார்த்ததிலிருந்து, அவனிடம் பேசிய ஒரு சில நிமிடங்களிலிருந்து ஏன் மனசாட்சி என்னைக் குற்றவாளியாக்கியுள்ளது. ச்சே, நான் வாழ்வதும் ஒரு வாழ்க்கை தானா என என் மனசாட்சி என்னைச் சித்ரவதை செய்துகொண்டிருக்கிறது. என் மனசாட்சி மட்டுமல்லாமல், என் மனைவியும் என்னைக் குழப்புகிறாள். இவனுக்கு மரணதண்டனை வழங்கினால், அவளும் என்னை விட்டு விலகிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த இளைஞனை அநியாயமாகக் கொல்லச் சொல்கிறார்கள் மதத்தலைவர்கள். மக்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இவர்களது ஆவேசமான ஓலைங்களை எல்லாம் மீறி, என் மனசாட்சியின் குரலுக்கு, என் மனைவியின் சொல்லுக்கு நான் கீழ்ப்படிய நினைத்தேன். ஆனால், என் பதவிக்கு ஆபத்து வரும் போல் தெரிகிறது. ‘இவனை நீர் விடுவித்தால், நீர் செசாரின் நண்பரல்ல... தன்னை அரசனாக்கிக் கொள்ளும் எவனும் செசாரை எதிர்க்கிறான்.’ என்று இவர்கள் சொன்னது என்னை நிலைகுலையச் செய்துள்ளது. எனக்கு முன் நிற்கும் இந்தப் பரிதாபமான இளைஞன் ஒரு அரசனா? அதுவும் செசாருக்கு எதிராக, போட்டியாக எழக்கூடிய அரசனா? நம்ப முடியவில்லை. ஒருபுறம் சிரிப்புதான் வருகிறது. ஆனால், ஏன் இந்த விபரீத விளையாட்டு? எனக்கு என் பதவிதான் முக்கியம், அதுதான் என் வாழ்க்கை. என் மனசாட்சி, என் மனைவி முக்கியமல்ல. இயேசு என்னும் இந்த இளைஞனை, சாவுக்கு, அதுவும் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பிடப்போகிறேன்.”



இப்படி பதவிக்காக, ஒரு பேரரசனுக்காகத் தன் மனசாட்சியையும், சொந்த வாழ்வையும் பணயம் வைக்கும் மனிதனுக்கு முன் நிற்கும் இயேசு அப்போது என்ன நினைத்திருப்பார்? இதோ, மற்றொரு கற்பனை: “பாவம் இந்த பிலாத்து, இவர்மட்டும் என் அரசை ஏற்பதற்கு தன் உள்ளத்தைத் திறந்தால், இந்த ரோமையப் பதவிகளையெல்லாம் விட மேலான பதவி, புகழ் எல்லாம் நிரந்தரமாக இவருக்கு நானும் என் தந்தையும் தருவோமே. இவர் இதய வாயிலருகே நின்று கதவைத் தட்டுகிறேன். தட்டிக்கொண்டே இருப்பேன். இவர் கட்டாயம் ஒருநாள் என் குரலைக் கேட்பார், இதயத்தைத் திறப்பார். அன்று நானும் என் தந்தையும் இவர் உள்ளத்தில் அரியணை கொள்வோம், இவரையும் அரியணையில் ஏற்றுவோம்.”

இரு வேறு துருவங்களிலிருந்து வந்த உள்ளக் குரல்களை, குமுறல்களைக் கேட்டோம். இந்த இருவரில் யார் பெரியவர் என்பதில் இன்னும் சந்தேகமா? எந்த நேரத்திலும் அரியணை பறிபோய்விடுமோ என்ற பயத்தில் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த பிலாத்தா? அல்லது, பொய் குற்றம் சாட்டப்பட்டாலும் தன் வாழ்வு தந்தையின் கையில் இருப்பதை ஆழமாய் உணர்ந்திருந்ததால், எந்த பதட்டமும் இல்லாமல், உடல் களைத்தாலும், உள்ளம் களைக்காமல் நிமிர்ந்து நின்ற இயேசுவா? யார் பெரியவர்? யார் உண்மையில் அரசர்?

முடிக்குமுன் இரு எண்ணங்கள்:

கிறிஸ்து அரசர் திருநாளுக்கான பின்னணி இதுதான்: முதலாம் உலகப் போர் முடிந்தாலும், உலகத்தில் இன்னும் பகைமை, பழிவாங்கும் வெறி இவை அடங்கவில்லை. இந்த உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது அரசர்களின், தலைவர்களின் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை விரிவாக்கவும், தங்கள் அதிகாரம் இன்னும் பல மக்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டுமென இவர்கள் நாடுகளிடையே வளர்த்த பகைமையைக் கண்ட திருத்தந்தை பதினோராம் பத்திநாதரும் திருச்சபைத் தலைவர்களும், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, கிறிஸ்துவை அரசராக 1925ஆம் ஆண்டு அறிவித்தனர். கிறிஸ்துவும் ஒரு அரசர்தான், அவரது அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும் மக்கள் கண்டு பாடங்கள் பலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டுமென இந்தத் திருநாள் ஏற்படுத்தப்பட்டது.

இரண்டாவதாக, நற்செய்தியில் கிறிஸ்து அரசரைப் பற்றிய ஒரு நல்ல தகவல்: இயேசுவை அரசர் என்று குறிப்பிடும் வார்த்தைகள் அவரது பாடுகளின் வாரத்தில் பெரும்பாலும் கூறப்பட்டுள்ளன. எருசலேமில் "ஓசான்னா" புகழோடு அவர் நுழைந்த போது உன் அரசர் உன்னிடம் வருகிறார் என்று ஆரம்பித்து, அவர் அறையுண்ட சிலுவையில் மாட்டப்பட்ட அறிக்கையில் "இயேசு கிறிஸ்து யூதர்களின் அரசன்" என்பது வரை... இயேசு அரசனாகப் பேசப்படுவதற்கு பாடுகள் முக்கிய காரணமானது. இந்த வகை அரசத் தன்மையைத்தான் இயேசு விரும்பியிருப்பார்.
இப்படிப்பட்ட கிறிஸ்து அரசரை நம் உள்ளங்களில் அரியணை ஏற்றவும், அதன் வழியாய் நாமும் இறைவன் அரசில் அரியணை ஏறவும், அரசரான கிறிஸ்து நமக்கு மணிமகுடம் சூட்டவும் வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.