2009-11-21 16:52:58

இன்றைய சமுதாயத்திற்கு வாழ்வுக் கலாச்சாரம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியது உடனடித் தேவையாக இருக்கின்றது, திருப்பீடச் செயலர்


நவ.21,2009 இன்றைய சமுதாயத்திற்கு வாழ்வுக் கலாச்சாரம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியது உடனடித் தேவையாக இருக்கின்றது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, இத்தாலிய மருத்துவர்களிடம் கூறினார்.

இத்தாலிய கத்தோலிக்க மருத்துவ கழகத்தின் உறுப்பினர்களுக்கு அண்மையில் உரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே, தற்போதைய நவீன மருத்துவம் முன்வைக்கும் சவால்கள் பற்றியும் சுட்டிக்காட்டினார்.

மருந்து இயல்பிலே மனித வாழ்வைப் பாதுகாத்து பேணும் தன்மையைக் கொண்டது, ஆனால், அது தற்சமயம், மனிதனுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதைக் காண முடிகின்றது என்று அவர் கவலை தெரிவித்தார்.

ஒருபுறம், மனித வாழ்வு தாயின் கருவிலே கொல்லப்படுவதைக் காண முடிகின்றது, மறுபுறம் மனித வாழ்வின் அடிப்படையான மதிப்பீட்டை பாதிக்கும் தீமையிலிருந்து நன்மையை பிரித்துக் காண முடியாதபடிச் செய்கின்றது என்று கர்தினால் பெர்த்தோனே கூறினார்.

கத்தோலிக்க மருத்துவர்கள் நோயாளியின் உடல் நலனோடு, அறநெறி மற்றும் ஆன்மீக நலனிலும் அக்கறை காட்டுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.