2009-11-19 15:33:48

தலித் கிறிஸ்தவர்களுக்கான உரிமைகள் கோரி புது டெல்லியில் பேரணி


நவ.19,2009 நவம்பர் 19 ஆரம்பமாகும் இந்திய பாராளுமன்றத்தின் குளிர் காலத் தொடரில் கிறிஸ்தவத்தையும், இஸ்லாமியத்தையும் தழுவிய தலித்துக்களுக்கு, மற்ற தலித்துகளுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் வழங்கப்படுமா என்ற எதிபார்ப்பு மேலோங்கியுள்ளது. இப்போது பதவியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி  2005ஆம் ஆண்டு இந்தப் பிரச்சனை குறித்து விவரங்கள் அறிய மிஸ்ரா குழுவை நியமனம் செய்ததும், அந்தக் குழுவின் கண்டுபிடிப்புகளும், பரிந்துரைகளும் இக்குளிர்காலத் தொடரில் விவாதிக்கப்படும் என்பதும் இந்த ஆவலைக் கூட்டியுள்ளதாக செய்திக்குறிப்புகள் கூறுகின்றன. இந்தப் பிரச்சனை குறித்து பாராளுமன்றம் நீதியானதொரு முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்தும் வண்ணம் இப்புதனன்று புது டெல்லியில் மாபெரும் பேரணியும், தர்ணாவும் நடைபெற்றது. டெல்லி பேராயர் Vincent Concessao கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுச் செயலர் பேராயர் Stanislaus சென்னை மயிலைப் பேராயர் சின்னப்பா ஆகியோரின் தலைமையில் இப்பேரணி துவங்கியது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தப் பேரணியில், 1950இல் நடைமுறைக்கு வந்த குடியரசுத் தலைவர் ஆணையின் 3ஆம் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு  என்பது நீக்கப்பட வேண்டுமென கோஷங்கள் எழுப்பப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர்கள் Oscar Fernandez, J D Saleem, Harsha Kumar, Ali Anwar எனப் பலரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர். பொதுக்கூட்டத்தின் முடிவில், கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.