2009-11-18 16:02:51

இராக்கில் கிறிஸ்தவர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகள் சமுதாய அமைப்பினால் உருவாவது


நவ.18,2009 இராக்கில் கிறிஸ்தவர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகள் அரசால் உண்டாகும் பிரச்சனைகள் அல்ல, மாறாக இராக்கில் நிலவி வரும் சமுதாய அமைப்பினால் உருவாவது என்று அரேபிய கலாச்சாரம், இலக்கியங்களில் தேர்ச்சிபெற்ற பேராயர் ஜூல்ஸ் மிக்காயேல் அல்-ஜமில் கூறியுள்ளார். ரோமையிலுள்ள சிரியன் கத்தோலிக்க தலைமையகத்தின் பொருளாளராக உள்ள, பேராயர் அல்-ஜமில், இத்தாலிய அரசு பிரதிநிதிகள் அவையின் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார். கடந்த காலங்களில் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய நாடுகளின் முன்னேற்றத்திற்கு உழைத்துள்ளனர். உதாரணத்திற்கு, பாக்தாதில் முதல் பல்கலைகழகம் நிறுவப்படுவதற்கு கிறிஸ்தவர்கள் பெரிதும் உழைத்தனர் என்று கூறிய பேராயர், கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமிய நாடுகளில் கிடைக்கும் மரியாதை ஓரளவே, உதாரணமாக, எந்த ஒரு கிறிஸ்தவரும் இஸ்லாமிய நாட்டில் தலைமைப் பொறுப்பேற்க முடியாது என்றும், அண்மைக் காலங்களில் கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளும், மரியாதையும் சிறிது சிறிதாகக் குறைந்து வருவது வெளிப்படையான உண்மையென்றும் பேராயர் அல்-ஜமில் விளக்கினார். துறவுமடங்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு அமைப்பின் சார்பில் இத்தாலியில் இச்செவ்வாயன்று நடைபெற்ற இந்த கூட்டம், இராக், பாகிஸ்தான், கொசோவோ ஆகிய நாடுகளில் கோவில்களும், மடங்களும் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.