2009-11-18 16:02:31

இந்திய மறைசாட்சிகளின் தினம் - இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பரிந்துரை


நவ.18,2009 ஆகஸ்ட் மாதத்தின் இறுதி ஞாயிறு இந்திய மறைசாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படுமென இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை ஒரு பரிந்துரையை அனைத்திந்திய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு பணிகுழுவுக்கு முன் வைத்துள்ளது. ஒரிசாவின் கந்தமால் பகுதியில் 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் அடிப்படைவாத இந்துகுழுக்களால் வன்முறைக்கு ஆளானதையும், அந்த கலவரத்தில் ஒரு கத்தோலிக்க குரு உட்பட, எட்டு பேர் கொல்லப்பட்டதையும் நினைவு கூறும் வண்ணம் இந்த நாள் அனுசரிக்கப்பட வேண்டுமென ஆயர் பேரவை பரிந்துரைத்துள்ளது. இவர்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுந்த பல வன்முறைகளில் பலியான நூற்றுக்கும் மேற்பட்ட குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவரையும் இந்த நாளில் நினைவு கூற வேண்டுமென கூறியுள்ளனர் இந்திய ஆயர்கள். இந்தியாவில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளின் அமைப்பும் இந்தப் பரிந்துரையை முழுமனதாக ஏற்றுள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. இந்தத் தீர்மானம் உறுதியாகும் பட்சத்தில், இந்த நாள் அனைத்து கிறிஸ்தவர்களாலும் அனுசரிக்கப்படும் என்றும் இச்செய்திக்குறிப்பு கூறுகின்றது.  இதைக் குறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஜலந்தர் ஆயர் அனில் குடோ (Anil Cuto) கிறிஸ்துவின் சாட்சியாக இறப்பது அன்பின் முழுமையான வடிவம் என்றும், எனவே இப்படி இறந்தவர்களை நினைவு கூர்வதால், கிறிஸ்தவ மதிப்பீடுகள் இந்நாட்டில் விதைக்கப்படுவதற்கும், கிறிஸ்துவை பறைசாற்றும் பல்வேறு சபைகள் ஒன்றிணைந்து வருவதற்கும் இந்த நாள் உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.