2009-11-18 16:01:08

ஆப்பிரிக்காவிற்குத்  தேவையாக உள்ளது மரபணு மாற்றம் செய்த பயிர்கள் அல்ல, மாறாக தண்ணீரே - கர்தினால் நாப்பியேர்


நவ.18,2009 ஆப்பிரிக்காவிற்கு இன்று தேவையாக உள்ளது மரபணு மாற்றம் செய்த பயிர்கள் அல்ல, மாறாக தண்ணீரே என்று டர்பன் மறைமாவட்ட பேராயர் கர்தினால் வில்பிரட் நாப்பியேர் (Wilfred Napier ) கூறினார். ரோமையில் நடந்து வரும் உணவு பாதுகாப்பு உச்சிமாநாட்டில் உரையாற்றிய கர்தினால் நாப்பியேர், மரபணு மாற்றங்கள் இல்லாத பல்வேறு பயிர்கள் ஆப்பிரிக்காவில் மலிந்து உள்ளன. ஆனால், அவற்றைப் பேணி வளர்க்கப் போதுமான நீரின்றி அவை அழிந்து வருகின்றன என்றும், இந்த பயிர்களைக் காக்க, நீர்நிலைகளை பெருக்கும் வண்ணம் கிணறுகள், அணைகள் இவற்றிற்கான நிதி உதவியை உலக நிறுவனங்கள் ஆப்பிரிக்காவிற்கு அளிப்பதே அவசரத் தேவை என்றும் கர்தினால் எடுத்துரைத்தார்.  Progressio எனும் மனித முன்னேற்ற நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் உலகின் பல நாடுகளில் உள்ள சிறு விவசாயிகளுக்கும், அவர்களது நிலங்களுக்கும் தேவையான நிதி உதவி உடனடியாகச் செய்யப்படவில்லையெனில், வெகு விரைவில் உலகின் ஏழைநாடுகளில் கோடிக்கணக்கானோர் பசியால் துன்புறும் நிலை உருவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் அரசும், பிற நிதி நிறுவனங்களும் விவசாயத்திற்கு அளித்து வரும் நிதியில் 83 விழுக்காடு குறைவு பட்டுள்ளது எனவும், இந்த நிலை தொடர்ந்தால் உலகின் பசிக்கொடுமைக்கு ஆளாகும் மனிதர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும் எனவும் இவ்வறிக்கை கூறுகின்றது.







All the contents on this site are copyrighted ©.