2009-11-16 15:57:24

உலக உணவு பாதுகாப்பு உச்சி மாநாடு


நவ.16,2009 கடந்த வாரத்தில் ஒரு தமிழ்க் குடும்பத்துக்குச் சென்றிருந்தேன். அந்த வீட்டில் கணவன், மனைவி ஆகிய இருவரும் ஓய்வு வயதை எட்டியவர்கள். அவர்கள் வத்திக்கான் வானொலி தமிழ் நிகழ்ச்சிகளைக் கேட்பவர்கள். அவர்களிடம், கடந்த வெள்ளிக்கிழமை உலகில் அனுசரிக்கப்பட்ட நீரழிவு நோய் தினம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஐ.நா.வின் நலவாழ்வு நிறுவனத்தின் கணிப்புப்படி, உலகில் 22 கோடிக்கு அதிகமானோருக்கு நீரழிவு நோய் இருக்கின்றது. இந்நோயினால் ஆண்டுதோறும் குறைந்தது 10 இலட்சம் பேர் இறக்கின்றனர். ஆரோக்யமான உணவு, புகையிலை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தாத்திருத்தல், உடல் பருமனைக் காத்தல், உடல் பயிற்சி செய்தல், மதுபானங்களைத் தவிர்த்தல் ஆகியவை இந்நோய் வராமல் தடுக்கும் என்று விளக்கிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அந்த அம்மா, கணவரிடம், ஏங்க, கொள்ளுப் பயிறு உடம்புக்கு நல்லதுனு சொல்றாங்க. அதனால அதை அவிச்சு வச்சுருக்கிறேன். சாப்பிடிறீங்களா என்று எதார்த்தமா கேட்டார்கள். உடனே, அவர் என்னை என்ன, குதிரைன்னு நினைச்சிட்டீயானு சண்டைக்குப் போய்ட்டார். நானுமே இந்த அம்மா சொல்றது சரிதானே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அத்துடன் லெந்திக்கே என்று இங்கு சொல்லப்படும் இந்தக் கொள்ளுப் பயிறை மக்கள் தாராளமாகவே உணவுக்குப் பயன்படுத்துறது இவருக்குத் தெரியாதா என்றுகூட நினைத்தேன். ஆனால் அந்த வீட்டுக்காரரு கோபப்படவும், அந்த அம்மா, சரிங்க, கேள் வரகு இருக்கு, களி பண்ணித்தாரேன்னாங்க என்று சொன்னதும், அவர் அதிகம் சத்தம் போட்டார். சரிங்க அப்படின்னா, கோதுமை மாவு இருக்கு. உப்புமா அல்லது தோசை செஞ்சு தாரேன்ங்க என்றார்கள். ஆமா, நான் என்ன நீரழிவு நோயாளியான்னு கோபப்பட்டார். பாவம், என்னதான் செய்யப் போறாங்களோ என்று நான் நினைச்சிக்கிட்டே இருந்துட்டு வந்துட்டேன். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அந்த வீட்டுக்கார அம்மாவைச் சந்தித்தேன். என்னம்மா, வீட்டுக்காரர் எப்படி சாப்பிடுகிறார் என்று கேட்டேன். இப்பொழுதெல்லாம் எது இருந்தாலும் போடு, சாப்டுறேன்னு உட்கார்ந்து விடுவார் என்று சொன்னாங்க. சரி, என்ன மந்திரம் செஞ்சீங்க என்று கேட்டேன், அதெல்லாம் ஒன்றுமில்லை, வீட்டில் எதுவுமே இல்லை என்று சொல்லி ஒரு நாள் முழுவதும் பட்டினி போட்டேன். அதற்குப் பின்னர் கொடுப்பதைச் சாப்பிடுகிறார் என்றார்கள்.

அன்பர்களே, சாப்பிடுவதற்குப் போதுமான, ஏன் அளவுக்கு அதிகமான உணவு இருந்தும்கூட, சாப்பாட்டில் அது குறை, இது குறை என்று சொல்லும் பலரைப் பார்க்கிறோம். எத்தனையோ பேர் மிஞ்சிய உணவை குப்பையில் கொட்டுகின்றனர். ஆனால் இன்று உலகில் தினமும் சுமார் 102 கோடிப் பேர், அதாவது ஆறு பேருக்கு ஒருவர் வீதம் பசியோடு படுக்கைக்குச் செல்கிறனர். உலகில் உணவுப் பொருட்கள் குறைவாக இருந்தால்கூட இந்த அவலத்தைக் கொஞ்சம் சகித்துக் கொள்ளலாம். ஆனால், தேவைக்கு அதிகமான உணவு இருக்கும் பொழுது, நூறு கோடிக்கு அதிகமான மக்கள் பசியால் வாடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று ஐ.நா.பொதுச் செயலரின் பேச்சாளர் மரி ஒகாபே கூறியிருக்கிறார். உலகில் ஒவ்வொரு ஐந்து வினாடிகளுக்கு ஒருவர் எனப் பசியினால் ஓர் ஆண்டில் அறுபது இலட்சம் சிறார் இறக்கின்றனர். ஏழை நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட ஏறக்குறைய இருபது கோடிச் சிறாருக்கு ஊட்டச்சத்துணவு குறைவுபடுவதால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. இச்சிறாரில் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ளனர். இந்த வயதில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இடம் பெறும் இறப்புகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு ஊட்டச்சத்து இல்லாமையே காரணம் என்று ஐ.நா.வின் யூனிசெப் கூறியது. 2008ம் ஆண்டில் உலகில் ஏற்பட்ட கடும் உணவுப்பொருள் விலைவாசி ஏற்றத்தால் 30 ஏழை நாடுகள் கலவரங்கள் வெடித்துள்ளன என்றும் ஐ.நா.கூறியிருக்கிறது.

உலகின் நிலை இவ்வாறிருக்க, FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், உணவு பாதுகாப்பு குறித்த, உலக உச்சி மாநாட்டை இத்திங்களன்று உரோமையில் தொடங்கியுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு, வத்திக்கான் உட்பட இந்நிறுவனத்தின் 192 உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறும் இந்நிறுவனம், தற்சமயம் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் சுமார் இரண்டு கோடிப் பேருக்கு அவசர உணவு உதவி தேவைப்படுகின்றது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

RealAudioMP3 இந்த உலக உணவு பாதுகாப்பு உச்சி மாநாடு பற்றிக் கருத்து வெளியிட்ட அவெனிரே என்ற இத்தாலிய கத்தோலிக்க தினத்தாள், இதில் பல நாடுகளின் தலைவர்கள் உரைகள் ஆற்றுவார்கள், காமிராக்களின் முன்பாக கைகுலுக்கிக் கொள்வார்கள், ஆனால் வேளாண்துறைக்கென ஒவ்வோர் ஆண்டும் 4,400 கோடி டாலர் தேவை என்றுரைக்கும் FAO நிறுவனத்தின் வேண்டுகோளும், 2025ம் ஆண்டுக்குள் உலகில் பசிக் கொடுமையை ஒழிப்பதற்கான ஐ.நா.வின் திட்டமும், திட்டமாகவும், வேண்டுகோளாகவும் அப்படியே எழுத்தில் மட்டும் இருக்கும் என்று கூறியது. இந்த உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக இத்திங்கள் பகல் 11.30 மணியளவில் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்திற்குச் சென்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் Ban Ki-moon, ஐ.நா.பொது அவைத் தலைவர் அலி திரிகி Ali Triki, இத்தாலிய பிரதமர் சில்வியோ பெருலுஸ்கோனி Silvio Berlusconi, FAO நிறுவன இயக்குனர் ஜாக் தியோப் உட்பட பல தலைவர்கள் வரவேற்றனர். உலகத் தலைவர்களுக்குத் திருத்தந்தை ஆற்றிய உரையை இப்பொழுது கேட்போம்.

RealAudioMP3 FAO நிறுவன இயக்குனர் உலக உணவு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் உரையாற்ற எனக்கு விடுத்த அழைப்பிற்கு நன்றி கூறுகிறேன். எனது முன்னோடிகளான ஆறாம் பவுல், இரண்டாம் ஜான் பவுல் இருவரும் FAO வின் பணி குறித்து மேலான எண்ணங்கள் கொண்டிருந்ததைப் போல் நானும் இந்த நிறுவனம் ஆற்றி வரும் பணிகளைப் பெரிதும் பாராட்டுகிறேன்.

Caritas in Veritate என்ற எனது சுற்றுமடலில் நான் கூறியுள்ள எண்ணங்களை மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன். உலகில் இன்று நிலவும் உணவு பிரச்சனை நீண்ட கால கண்ணோட்டத்துடன் அணுகப்படவேண்டும். ஏழை நாடுகளில் இந்த உணவு பிரச்சனையின் அடிப்படையாக இருக்கும் அமைப்பு சார்ந்த காரணங்கள் அறியப்பட்டு, களையப்பட வேண்டும். கிராமங்களில் வாழும் மக்கள், அங்கு நிலவும் இயற்கை, சமூகப் பொருளாதார வளங்கள் ஆகிய இவற்றை மனதில் கொண்டு கிராமங்களில் அடிப்படை அமைப்பு முறைகள், பாசன வசதிகள், போக்குவரத்து, சந்தைகளை வளர்த்தல் போன்ற முயற்சிகளில் இன்னும் அதிகமான முதலீடு செய்யப்படவேண்டும்.

ஒவ்வொரு நாடும் அதற்கே உரிய பொருளாதார வடிவங்களை உருவாக்குவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இந்த வடிவங்கள் வழியே அந்தந்த நாடு தன் சுய ஆட்சிக்கு வழி செய்ய வேண்டும். ஒருமை உணர்வை வளர்க்கும் வண்ணம், ஏழை நாடுகளுக்கு அளிக்கப்படும் உதவிகளால் உலகில் நிலவும் பொருளாதார, மற்றும் பல சிக்கல்களைத் தீர்க்க முடியும். இவ்வகை உதவிகளால் முழுமையான மனித முன்னேற்றத்தை உலகம் முழுவதிலும் நிலைநிறுத்த இயலும்.

உலகில் இன்று முன்னேற்றம் காண்பதில் சமநிலையற்ற தன்மை நாடுகளிடையே அதிகம் உள்ளது. இந்த சமநிலையற்ற தன்மையால், வறியோர் செல்வருக்கிடையேயான வேறுபாடு நாளுக்கு நாள் வளர்ந்து, உலகம் முழுவதையும் நிலையற்ற சூழலுக்கு இட்டுச் செல்கிறது. இது இப்படி இருக்கக் கூடாது, எப்போதுமே இருக்கக் கூடாது.

மனித குல ஒருங்கிணைப்பிற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் நீதி, நியாய உணர்வுகளையும் தாண்டி, அன்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டும். இது உயரிய ஒரு நிலை. இந்த நிலையை அடைவதற்கு முன்னால், நீதியின் அடிப்படையிலாவது ஒவ்வொரு மனிதரும் அவருக்கு உரியதை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். உலகின் பசியைக் களைய வேண்டுமெனில், பொருளாதார, அரசியல் முயற்சிகள் மட்டும் போதாது. நீதி மற்றும் நன்னெறி கோட்பாடுகளின் அடிப்படையில் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.

உலகில் பசியைக் களையவும், முழுமனித முன்னேற்றத்தை வளர்க்கவும் கிராமங்களின் தேவைகளை நாம் அனைவரும் உணர்ந்து கொள்வது அவசியம். சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் சவாலைச் சந்தித்து வரும் இன்றைய உலகம், கடவுளின் திட்டங்களைப் புரிந்து, மதித்து, அதற்கேற்ப முடிவுகளை எடுப்பது அவசியமாகிறது. நமது வருங்காலச் சந்ததியினருக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளை உணர்ந்து, எல்லா நாட்டு அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் நமது இயற்கையை, சுற்றுச் சூழலைக் காப்பது மிகவும RealAudioMP3 ் அவசியம்.

உலகில் இன்று நிலவும் பசிக் கொடுமை, ஏழ்மையின் திட்டவட்டமான வெளிப்பாடு. இந்தக் கொடியச் சூழலில் மிக ஆடம்பரமான வாழ்க்கையும், உலகச் செல்வங்களை வீணாக்குவதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. உலகில் பசியையும், ஏழ்மையையும் களைவதற்கு திருச்சபை எல்லா வழிகளிலும் முயலும். இந்தக் கொடுமைகளைக் களைவதில் ஈடுபடும் எல்லா பன்னாட்டு நிறுவனகளுடனும் திருச்சபை இணைந்து செயல்படும்.

அன்பர்களே, இன்றைய உணவு நெருக்கடிகள் களையப்படுவதற்குத் திருத்தந்தை பன்னாட்டுத் தலைவர்களிடம் முன்வைத்த பரிந்துரைகளைக் கேட்டோம். நம்மைப் படைத்த கடவுளிடம் பற்றாக்குறை என்ற சொல்லுக்கே இடமில்லை. அவர் கோடிக்கணக்கான மக்களைப் பற்றாக்குறையில் தவிக்கவும் விடவில்லை. மனிதன், தான் விரும்புவதை, தனக்கு நன்மை தரக்கூடியதை அடைய முடியாத அளவுக்கு இவ்வுலகில் பற்றாக்குறை என்று எதுவும் இல்லை. ஆனால் மனிதனின் சுயநலமே இன்றைய பசி பட்டினிச் சாவுகளுக்குக் காரணம். எனவே ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் சொல்லியது போன்று, உடலைச் செழிப்பாக்கும் மனதைச் செம்மைப்படுத்தினால் இவ்வுலகில், குறிப்பாக ஏழைகளில் இல்லாமை என்ற ஒருநிலை அகலும். எல்லாரும் இன்புற்று வாழும் உலகம் உருவாகும்.








All the contents on this site are copyrighted ©.