2009-11-14 15:36:29

ஞாயிறு சிந்தனை


கிறீஸ்தவ பாரம்பரியத்தில் ஒவ்வொரு ஆண்டையும் ஐந்து வழிபாட்டு காலங்களாகப் பிரித்துள்ளோம். திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்பு காலம், தவக்காலம், உயிர்ப்பு காலம், பொதுக் காலம். இந்தப் பொதுக் காலம் இந்த ஞாயிறோடு முடிகிறது. அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் திருநாள், அதற்கு அடுத்த ஞாயிறு திருவருகைக் காலம் ஆரம்பமாகிறது. பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறான இன்று, இறுதி நாட்களைப் பற்றி சிந்திக்க இன்றைய இறைவாக்கு நம்மை அழைக்கிறது.
ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு: "last minute preparation" – கடைசி நிமிட தயாரிப்பு. எல்லாரும் வாழ்க்கையில் அனுபவித்த, அனுபவிக்கும், இனியும் அனுபவிக்க இருக்கும் ஒரு  அனுபவம் இது. தேர்வுகளுக்கு தயார் செய்கிறோம். பல நாட்கள், பல மாதங்கள் தயார் செய்தாலும், கடைசி நேரத்தில், அந்த தேர்வு எழுதும் அரங்கத்திற்கு முன்பு எத்தனை தயாரிப்புகள்... வீட்டில் வைபவங்களுக்குத் தயாரிக்கிறோம். ஆனாலும் வைபவத்திற்கு முந்திய இரவு, வைபவத்தன்று காலை அரக்க, பரக்க ஓடியாடி வேலைகள் செய்கிறோம்.
வேலைக்கான interview , வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரிக்க... இப்படி கடைசி நேர தயாரிப்புக்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். மேலே சொன்ன சம்பவங்களி லெல்லாம் ஒரு வித ஆவல், ஆர்வம் இருக்கும். கொஞ்சம் பயம், கலக்கமும் இருக்கும். பொதுவாக இவற்றில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். எதிர்பார்ப்பு... இதுதான் இன்றைய ஞாயிறு சிந்தனையின் மையம்.
நல்ல காரியங்களை எதிர்பார்க்கும் போது, ஆனந்தம், ஆர்வம் இவை நம்மை செயல்பட வைக்கும். ஆனால், நலமில்லாத, வருத்தம் தரும் காரியங்களில்... நமது மனநிலை? உடல் நலமின்றி, அதுவும் மிகவும் seriousஆக நாமோ, அல்லது நமக்கு நெருங்கியவர்களோ மருத்துவ மனையில் இருக்கும் போது, என்னவித எதிர்பார்ப்பு இருக்கும்? அதை எதிர்பார்ப்பு என்றுதான் சொல்லமுடியுமா? எதிர்பார்ப்பு, நல்லதோ, கேட்டதோ, அவை எதிர்காலத்தோடு தொடர்புடையவை...

நம் ஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் சக்தி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நல்லா இருக்குமா? இள வயதில் இது போன்ற ஒரு சக்திக்காக நான் ஏங்கியதுண்டு. உதரணத்திற்கு, படிக்கும் காலத்தில் அடுத்த நாள் தேர்வுக்கு என்னென்ன கேள்விகள் வரும்னு தெரிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்... என்று ஏங்கியதுண்டு. நமக்குக் கிடைக்கப் போகும் வேலை, நமக்கு வரும் வாழ்க்கைத் துணை, நமது ஒய்வு கால வாழ்க்கை இவைகளைத் தெரிந்து கொண்டால், எவ்வளவு நல்லா இருக்கும்...
நம்மில் எத்தனை பேர் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறோம்? கையைப் பார்த்து, கிளியைக் கேட்டு, நாடி பார்த்து... எத்தனை வழிகளில் எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஆசைப் படுகிறோம்...
எதிர்காலம் முழுவதும் "நல்ல காலம் பொறக்குது" என்ற சொற்களையேக் கேட்டுக் கொண்டிருந்தால் பரவாயில்லை. அந்த எதிர்காலத்தில் பிரச்சனைகள் மலையாகக் குவிந்து கிடந்தால்... ஏன் இதைத் தெரிந்து கொண்டோம் என்று வருத்தப்படுவோம்.

எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளில் மிக முக்கியமான கேள்வி: நம் ஒவ்வொருவரின் இறுதி நாள் பற்றியது... simple ஆகச் சொல்லவேண்டுமெனில், நான் எப்போது, எப்படி இறப்பேன்? நாம் எல்லாரும் மரணத்தைப் பல வழிகளில், வடிவங்களில் சந்தித்திருக்கிறோம். நாமும் அதை ஒரு நாள் சந்திக்க இருக்கிறோம். ஆனால், அதைப் பற்றி பேச, எண்ண தயங்குகிறோம்.  நவம்பர் மாதம் மரணத்தைப் பற்றி, மரித்தோரைப் பற்றி சிந்திக்க திருச்சபை அழைக்கும் ஒரு மாதம். இம்மாத துவக்கத்தில் வத்திக்கான் வானொலியில் என்னோடு பணியாற்றும் சகோதரி திரேசாவும், நண்பர் கிறிஸ்டோபரும் மரணத்தைப் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டது உங்கள் மனதில் கட்டாயம் இன்னும் நிழலாடும், இல்லையா? இன்றும் நமது இறுதி காலம் பற்றி, இந்த உலகத்தின் இறுதி காலம் பற்றி சிந்திக்க நமக்கு மற்றொரு வாய்ப்பு.
இந்த ஞாயிறு வாசகங்கள் இறுதி காலம் பற்றிய முன்னறிவிப்புகளாகச் சொல்லப்பட்டுள்ளன. தானியேல் நூலிலிருந்தும், மாற்கு நற்செய்தியில் இருந்தும் இறை வார்த்தைகளைக் கேட்போம்.

தானியேல் 12: 1-3 & மாற்கு நற்செய்தி 13: 24-32

நவம்பர் 13 வெள்ளியன்று அமேரிக்காவில் ஏறத்தாழ 3000 திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் 2012. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகிறது என்பதை பிரமாண்டமாகக் காட்டும் திரைப்படம். இந்த படத்தின் trailer ஐப் பார்த்தேன். உலக அழிவு special effects பயன்படுத்தி அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. அழிவு... அழகாக... காட்டப்படுகிறது. இந்த அழிவைப் பெரியத் திரையில் பிரமாண்டமாய்ப் பார்க்க கூட்டம் அலைமோதுவதாகவும், அதனால் இந்தப் படம் வசூலில் சாதனை படைக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.
இது முதல் முறையல்ல. அழிவைப் பற்றி ஹாலிவுட் திரை உலகத்தில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள் வந்துள்ளன. இனியும் வரும். 2012 என்ற இந்தத் திரைப்படத்தை இயக்கிய Roland Emmerich 2004ஆம் ஆண்டிலும் 1996ஆம் ஆண்டிலும் இரு பிரம்மாண்டமான திரைப்படங்களைத் தந்தார். இரண்டும் உலக அழிவைப் பற்றியது. இரண்டும் வெற்றிப் படங்கள்.
ஞாயிறு சிந்தனைக்கு பதில் திரை விமர்சனம் பேசுகிறேனோ என்று ஒரு சிலர் கோபப்படலாம். ஆனால், இத்திரைப்படங்கள் ஏன் வெற்றி அடைந்தன என்பதை அலசிப் பார்த்தால், மனித இயல்பு பற்றிய ஒரு உண்மையை உணரலாம். அழிவைப் பார்க்க நமக்குள் ஆசை உள்ளது. இந்த அடிப்படை ஆசையை மூலதனமாக்கி, நமது தொடர்பு சாதனங்கள், முக்கியமாக திரைப்படங்கள், அழிவை special effects மூலம் பிரம்மாண்டமாக, ஏன், கவர்ச்சியாகவும் காட்டுகின்றன. இந்த பிரம்மாண்டங்கள் அழிவைப் பற்றிய துன்ப உணர்வுகளிலிருந்து நம்மைத் தூரப்படுத்தி, அந்நியப்படுத்தி நமது மனங்களை மழுங்கடித்து விடுகின்றன. இது ஆபத்தான ஒரு போக்கு.
TV, சினிமா, பத்திரிகைகள் வழியே அழிவை அடிக்கடிப் பார்ப்பதும், அழிவைப் பிரம்மாண்டமாய்ப் பார்ப்பதும் ஆபத்து. படங்களில் பார்க்கும் அழிவுக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் அழிவுக்கும் பல வேறுபாடுகள். நிழல் படங்களில் அழிவைப் பார்த்து, பார்த்து பழகி விட்டு, நிஜமாய் நடக்கும் அழிவுகளில் பல உயிர்கள் அழிக்கப்படுவத்தையோ, அல்லல்படுவதையோ உணர முடியாமல் போகக்கூடிய ஆபத்து உள்ளது.
இந்த அழிவுகளைப் பற்றி அடிக்கடி பேசுவதும், கேட்பதும் இன்னொரு ஆபத்தை உண்டாக்கும். அழிவுகளை அடிக்கடி பார்க்கும் போது, மனதில் நம்பிக்கை வேர்கள் கொஞ்சம், கொஞ்சமாய் அறுந்து விடும் ஆபத்தும் உள்ளது. நம்பிக்கை சாயும் போது, அவநம்பிக்கை விதைக்கப்படும், வேர்விட்டு வளர்ந்து விடும். அப்போது எடுக்கப்படும் அவசர முடிவுகளால் இன்னும் அதிக அழிவைத் தேடிச் செல்லும் ஆபத்து உள்ளது. இப்படி அழிவைத் தேடும் ஆயிரமாயிரம் பேரை, முக்கியமாக இளையோரை நினைத்துப் பார்ப்போம்.

'எதிர்' என்ற தமிழ் சொல்லுக்குள் எத்தனை பொருள் இருக்கிறது! எதிர்காலம் என்பதை, எதிர் வரும் காலம், எதிர் பார்க்கும் காலம், நமக்கு எதிராக வரும் காலம், நமக்கு எதிரியாக வரும் காலம், நாம் எதிர்த்து நிற்க வேண்டிய காலம், நாம் எதிர்கொண்டு சென்று வரவேற்க வேண்டிய காலம்... என்று பல பொருள்பட பேசலாம். 'எதிர்' என்ற சொல்லில் ஆனந்தம், ஆர்வம் இருக்கும். ஆபத்தும், ஆதங்கமும் இருக்கும். இந்த உணர்வுகளெல்லாம் நடக்கப் போகும் சம்பவங்களில் இருக்கின்றன என்பதை விட, இவற்றை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தைப் பொறுத்தே நம் உணர்வுகளும், செயல் பாடுகளும் இருக்கும். எந்த பொருள் கொண்டு எதிர் காலத்தைப் பார்க்கிறோம்?

எதிர் காலத்தைத் தெரிந்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது அந்த எதிர் காலத்தை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்ப்பதில் செலவிட்டால், எவ்வளவோ பிரச்சனைகளைச் சமாளிக்கலாம், வெல்லலாம். ஆங்கிலத்தில் அழகிய பொன்மொழி ஒன்று உண்டு: "For all that has been...thanks! For all that will be...yes!" "இதுவரை நடந்தவைகளுக்கு நன்றி... இனி நடக்கப் போகின்றவைகள் நல்லவையே..." என்ற கண்ணோட்டம் எதிர்காலத்தில் நல்லவற்றையே உயர்த்திப் பிடிக்கும். எதிர்காலம் என்பது, பிரச்சனை என்ற கூட்டத்தைச் சேர்த்து வந்தாலும், அந்தக் கூட்டத்தின் மத்தியில் நல்லவைகளை, நல்லவர்களைப் பார்த்து கைகுலுக்கிக் கொள்ளும் பக்குவம் நாம் பெற வேண்டும். இதை ஒரு உருவகத்தில் சொல்ல வேண்டுமெனில், எதிர்காலம் மலைபோல் குவிந்த ஒரு குப்பையாக தெரிந்தாலும், அந்த குப்பையின் நடுவிலும் வைரங்கள் மின்னுவதை நம் கண்கள் பார்க்கும் போது, குப்பை மறைந்து விடும், வைரங்கள் மட்டும் தெரியும். குப்பைகளை விலக்கி, குண்டு மணிகளை, வைரங்களைப் பார்க்கும், வைரங்களைச் சேர்க்கும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள இறைவன் துணையை நாடுவோம்.







All the contents on this site are copyrighted ©.