2009-11-14 14:28:02

ஐ.நா.பாதுகாப்பு அவையில் சீர்திருத்தங்கள் கொணரப்பட திருப்பீடம் அழைப்பு


நவ.14,2009 உலக விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும் உரிமை ஐ.நா.பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர அங்கத்தினர்களுக்கு மட்டுமே இருப்பதில் சில சீர்திருத்தங்கள் கொணரப்பட வேண்டுமென்று திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது.

ஐந்து நாடுகள் மட்டுமே கொண்டிருக்கும் இவ்வுரிமையை அகற்றுவது இயலாத பட்சத்தில் அதில் சீர்திருத்தங்களைப் புகுத்துவதே ஏற்புடையதாய், நடைமுறைக்கு ஒத்ததாய் இருக்கும் என, ஐ.நா.வின் 64வது பொதுக் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தினோ மிலியோரே இவ்வெள்ளியன்று உரையாற்றினார்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்தவைகளில்கூட சரியான தீர்வுகள் தடை செய்யப்பட்டு சுதந்திரமும் மனித மாண்பும் பாதிக்கப்பட வழிவகுத்ததைக் கடந்த கால வரலாறு நமக்குக் காட்டியுள்ளது என்ற பேராயர், இறுதி முடிவு எடுக்க ஐந்து நாடுகளுக்கு மட்டுமே இருக்கும் அதிகாரம் சீர்படுத்தப்பட வேண்டிய தேவையை இந்த அனுபவப் பாடம் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது என்றார்.

இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான பெருங் குற்றங்கள், போர்க்காலக் குற்றங்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இதையொத்தவைகளில் ஐ.நா.பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர அங்கத்தினர்கள் சரியான முடிவுகளை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் பேராயர் மிலியோரே.

ஐ.நா.பாதுகாப்பு அவையின் தீர்மானங்களை எதிர்த்து ஒரேயொரு நிரந்தர அங்கத்தினர் வாக்களித்தாலும் அத்தீர்மானம் வெற்றி பெறாது என்ற தற்போதைய நிலைப்பாடு குறித்தும் அவர் குறை கூறினார்.

ஐ.நா.நிரந்தர உறுப்பினர்களின் முடிவுகள், திறந்த புத்தகமாய், அரசியல் உறுதிப்பாடுடையதாய், நம்பிக்கைக்குரியதாய், நீதி, சரிநிகர்தன்மை, ஜனநாயகம் போன்றவைகளை வெளிப்படுத்துவதாய் இருக்க வேண்டுமெனவும் பேராயர் மிலியோரே கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.